நீரோடிய காலம் 17: பாட்டுக் குளியலும் ஆற்றுக் குளியலும்!!




காவேரி மண்ணில் ஒரு ஆற்றில் குளித்துவிட்டு அதைப் பற்றி எழுத வேண்டும் என்பது இந்தத் தொடரைத் தொடங்கியதிலிருந்து எனக்குள்ள ஆசை! ஆற்றோரம் இருபத்தோரு ஆண்டுகள் குடியிருந்துவிட்டு சென்னை வந்த பிறகு ஆற்றில் குளிப்பது அரிதாகிவிட்டது. எப்போதாவது ஊருக்குச் செல்லும்போது ஆறு இருக்கும், தண்ணீர் இருக்காது. அரிதாக, வெள்ளப் பெருக்குபோல் ஓடி, குளிக்கும் கனவையும் அடித்துக்கொண்டு போய்விடும்.

வாழ்வில் மறக்க முடியாத ஆறு மன்னார்குடி வழியாக ஓடும் பாமணியாறு. இதுவரை பத்து தடவைக்கும் மேல் ஆறு என்னை அடித்துக்கொண்டு போயிருக்கிறது. ஒவ்வொரு முறையும் என்னைக் காப்பாற்ற யாரோ ஒருவரையும் அதே ஆறு அனுப்பியிருக்கிறது. “ஆத்தங்கரையிலயே பொறந்து வளந்து நீச்சல் தெரியாதவன் நீ ஒருத்தன்தான்யா” என்று பலரும் என்னைக் கேலி செய்திருக்கிறார்கள். ஏனோ நீச்சல் எனக்குச் சுட்டுப்போட்டாலும் வரவில்லை. மரணத்தை மீறும் ஒரு விளையாட்டு என்றே நீச்சலை என் ஆழ்மனம் உணர்ந்திருக்கும்போல. அதனால்தான் கழுத்தளவு தண்ணீருக்கு மேல் ஆற்றுக்குள் நகர்வதற்கு என்றும் பயம். கூடவே, ஆண்டுதோறும் எத்தனை உயிர்க் காவுகளைப் பார்த்திருப்பேன். அம்மாவுடன் ஆழம் குறைந்த இடத்தில் குளித்துக்கொண்டிருந்த ஐந்து வயது குழந்தையை ஒரு மணி நேரம் கழித்து வேறொரு இடத்தில் பிணமாகப் பார்த்திருக்கிறேன். விருந்தினர் வீட்டுக்கு வந்த கல்லூரி இளைஞன், நன்றாக நீச்சல் தெரிந்தவன், அவனையும் அழுத்திப் போட்டுவிட்டது பாமணி ஆறு. உறவினருக்கு விஷயம் தெரிந்து வந்து அடித்துக்கொண்டு அழுதார்கள். அந்தப் பையன் தனது பெற்றோருக்கு ஒரே பிள்ளையாம்!



சில ஆச்சரிய தப்பித்தல்களும் உண்டு. எங்கள் மதகுக்கும் (சட்ரஸ் என்று அழைக்கப்படும் ‘ஷட்டர்ஸ்’) முன்னால் கால் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாலத்தில் தற்கொலை செய்துகொள்வதற்காகக் குதித்த மூதாட்டி மூழ்காமல் மிதந்துகொண்டே வந்தார். ஆறு கொள்ளாத தண்ணீர். எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் மதகைத் திறந்துவிட மதகின் அடியில் தண்ணீரோடு தண்ணீராய் அவரும் மிதந்து போனார். முன்பை விட ஆழமான பகுதியில் போய் விழுந்தார். என் கூட படித்த பையன் ஒரு நொடிகூட யோசிக்காமல் பாலத்தின் மேலிருந்து பாய்ந்து ஆற்றுக்குள் குதித்தான். எதிர் நீச்சல் போட முடியாது என்பதால்  மூதாட்டியின் முடியைப் பிடித்துக்கொண்டே ஆற்றின் போக்கில் சென்று ஒரு படித்துறையில் இழுத்துப்போட்டான். “பிள்ளையும் மருமகளும் செய்த கொடுமையால் ஆற்றில் குதித்தேன்” என்று அவர் அழுதார். இப்படிப் பல கதைகள். உயிர் கொடுக்கவும் உயிர் எடுக்கவும் எல்லாவற்றைப் பற்றியும் கதை கொடுக்கவும் ஆயிரம் அவதாரங்களாகக் காவிரி ஓடிக்கொண்டிருந்த காலம் அது.

ஆற்றில் குளிக்க வேண்டும் என்ற ஆசையை இந்த முறை நிறைவேற்றியது வடுவூர் வழியாக ஓடும் வடவாறு. காவிரிப் பாசனத்தை ‘பழைய நஞ்சை’, ‘புதிய நஞ்சை’ என்று இரண்டு பிரிவாகப் பிரிப்பார்கள். அதில் பழைய நஞ்சையின் மேற்கு எல்லையாக ஓடிக்கொண்டிருப்பது வடவாறு. அதற்கு அடுத்ததாக உள்ள பரப்பு புதிய நஞ்சை எனப்படுகிறது. அங்கே ஆற்றுப் பாசனம் இல்லாததால் ஆங்கிலேயர்கள் ‘ஜி.ஏ. கனால்’ எனப்படும் கல்லணைக் கால்வாயை வெட்டி பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை போன்ற இடங்களுக்குப் பாசனத்தைக் கொண்டுசென்றனர்.

வயல்களுக்கு இடையே இறங்கி வடவாற்றை நோக்கி நானும் சில சிறுவர்களும் சென்றோம். வயல்களில் நடவு நடந்துகொண்டிருந்தது. வரிசையாகப் புழு கொத்திக்கொண்டிருக்கும் கொக்குகள் போல  பெண்கள் நடவு நட்டுக்கொண்டிருந்தார்கள். வார்த்தைகள் புரியாத பாடல் வேறு நம் காதில் வந்து விழுந்தது. ஆஹா! தொடர் ஆரம்பித்ததிலிருந்து போகும் இடங்களிலெல்லாம் நடவுப் பாட்டு யாரும் பாடுவார்களா என்று கேட்டுக் கேட்டு ஏமாற்றம் மிஞ்சிய நிலையில் சொந்த கிராமமான வடுவூர் புதுக்கோட்டையிலேயே நடவுப் பாட்டு!

“யக்கோவ் பாட்டு பாடுற அக்கா. கொஞ்சம் வாங்களேன்” என்று கூப்பிட்டேன்.

குனிந்திருந்த தலையத்தனையும் நிமிர்ந்தன. அவர்கள் யாரையும் எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால், அவர்கள் எல்லோருக்கும் என்னைத் தெரிந்திருந்தது. மூன்று வயதிலேயே கிராமத்தை விட்டு மன்னார்குடிக்குப் போய்விட்டதால் எனக்கும் அந்த ஊர் அந்நியமாகவே போய்விட்டது.



எல்லோரும் வாஞ்சையுடன் என்னருகே வந்தார்கள். அருகில் வந்தவர்களிடம், “என்ன பாட்டு பாடினீங்க? எனக்கு ஒரு பாட்டுப் பாடிக்காட்டுங்களேன்” என்று கேட்டதும் அத்தனை பேரும் பதுங்கினார்கள்.

“ஏ… லெச்சுமியக்கா நீ பாடு… ஏ பாக்கியத்தக்கா நீ பாடு… ராசாயியக்கா நீ பாடு” என்று அடுத்தவரை நோக்கிக் கைநீட்டிவிட்டுப் பம்மப் பார்த்தார்கள்.

“ஒங்க ஊருப் புள்ள கேக்குது பாட மாட்டீங்களா?” என்று சென்டிமென்ட்டாக இறக்கியதும் ஒரு அக்கா பாட வந்தார்.
“தங்கம் வெதைக்க – ஏ ஏ
தங்கமணி வந்தீயளோ
முத்து வெதைக்க – ஏ ஏ
என் முத்தழகு வந்தீயளோ
வைரம் வெதவெதைக்க
என் வைடூரியம் வந்தீயளோ
பவளம் வெதவெதைக்க
என் பவளமல்லீ வந்தீயளோ”
என்று வந்தீயளோ பாட்டு சரஞ்சரமாகப் பாடிவிட்டு அடுத்த பாட்டைத் தொடங்கினார்.

“வானமழை பேஞ்சாக்க
வாய்க்கா கொள்ளாதடி
வாய்க்கா கொள்ளாத தண்ணீயல்லாம்
வயக்காடு கொள்ளுமடி
கொக்குப் படையெடுத்தா
கொடிமரம் தாங்காதடி
கொமருக படையெடுத்தா
காடுகழனி தாங்காதடி”

என்று அட்டகாசமாகப் பாடிக்கொண்டே போனார். அவர் பாடியதில் பல வரிகள் புரியவில்லை. அதையெல்லாம் விளக்கிக் கேட்டால் அவருக்கு விளக்கம் சொல்லவும் தெரியவில்லை.

“இதெல்லாம் நீங்க கட்டுன பாட்டா, இல்ல யாருக்கிட்டயும் கத்துக்கிட்டீங்களா” என்று அவரிடம் கேட்டேன்.
“கத்துக்கிட்ட பாட்டுகளும் உண்டு, கட்டுற பாட்டுகளும் உண்டு” என்றார்.

தோண்டித் தோண்டிக் கேட்டுப் பார்த்ததில் ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது. அதாவது அசலான நாட்டுப்புறப் பாட்டுகளைப் பொறுத்தவரை இயற்றியவர் என்று ஒருவரைச் சுட்டிக்காட்ட முடியாது. எங்கோ தோன்றி ஒவ்வொருவர் வாயிலும் புகுந்து நுழையும்போது வேறொரு வடிவம் பெறுகிறது. பாடுபவர் தன் வீட்டு நிலைமை, துன்பதுயரம் எல்லாவற்றையும் கூடுதலாகச் சேர்த்துவிடுவார். அதனால்தான் தங்கள் பாட்டு என்று சொல்கிறார்கள் போலும்.

பாட்டில் குளித்துவிட்டு அடுத்து ஆற்றில் குளிக்கச் சென்றோம்.

தண்ணீர் வெகு வேகமாக ஓடியது. மேலிருந்து மூன்றாவது படி வரையிலான நீர்மட்டம். நீச்சல் தெரிந்த சின்னப் பையன்கள் நடுவே நீச்சல் தெரியாமல் அவமானமாகிவிடுமோ என்று பயந்துகொண்டே இறங்கினேன். நல்லவேளை, இடுப்பளவு தண்ணீர்தான். குறுகலான ஆறு என்பதால் அவ்வளவு வேகம். ஆற்றின் அடியில் மண் இல்லை. சிமென்ட் தரைதான். ஆற்றுக்குத் தரை பாவும் அறிவாளி அரசியல்வாதிகளெல்லாம் நம் நாட்டில்தான் இருப்பார்கள். கேட்டால், “கடைமடைக்கும் தண்ணீர் போக வேண்டுமல்லவா?” என்று காரணம் சொல்கிறார்கள். விட்டால் கடலுக்கே சிமென்ட் தரை போடுவதற்கும் நம்மூர் ஆட்கள் தயங்க மாட்டார்கள்.

ஆற்றுத் தண்ணீர் சாக்கடை நிறத்தில் ஓடியது. போதாதென்று ஆற்றில் மிதந்துவரும் பாலித்தின் பைகள், குப்பைகள் வேறு. ஒரே ஒரு ஆறுதல், குளித்துக்கொண்டிருந்தபோது பெய்த மழை. ஆற்றில் விழும் மழைச் சரங்களை ஆற்றுக்குள்ளிருந்து பார்ப்பது ஒரு அற்புத அனுபவம். ஓடி வரும் தண்ணீருக்கு நீண்ட ரோமங்கள் முளைத்தது போன்ற காட்சி அவ்வளவு அழகு.
அதற்குப் பிறகு ஏழு நாட்கள் அந்த ஆற்றில் குளித்தேன். தினமும் குப்பைகளை ஏந்திக்கொண்டு ஆறு ஓடுவதைப் பார்த்தேன். தலைவெட்டப்பட்டு இரண்டு ஆடுகளும் மிதந்து போயின. குளிக்கும்போது எங்களைக் கடந்து பலமுறை சானிட்டரி நாப்கின்களும் குழந்தைகளின் டயாப்பர்களும் மிதந்துபோயின. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் ஒரு குப்பையைப் பார்த்த நினைவு எனக்கு இல்லை. ‘எங்கிருந்தோ ஒருவர் எங்கள் வீட்டுக் கிணற்றை வற்ற வைத்துவிடமுடியும்’ என்று முகுந்த் நாகராஜன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வந்தன. அமெரிக்காவிலிருந்து கூட வட
வாற்றைக் குப்பைக் கூடையாக்கிவிட முடியும் என்பதைத்தான் உலகமயமாதல் நமக்கு நிரூபித்திருக்கிறது. நவீன வாழ்க்கை முறை ஒரு பக்கம் பளபளப்பையும் இன்னொரு பக்கம் குப்பைகளையும் நிறைத்துக்கொண்டிருப்பதை அந்த பாலித்தீன் பைகளும் சானிட்டரி நாப்கின்களும் சொல்லாமல் சொல்லின.

குளித்து முடிந்து மேலே ஏறி ஆற்றைப் பார்த்தபோது ஆறு ஒரு நீண்ட கண்ணீர் தாரைபோல் ஓடுவதாக எனக்குத் தோன்றியது. அது ஆற்றின் கண்ணீர்தான்!

(சுற்றுவோம்...)

x