குழந்தைகளும் பெற்றோரும் இப்போதெல்லாம் அந்தக் காலம்போல் இல்லை. இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பெற்றோரிடம் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் கெஞ்சிக் கூத்தாடியவர்கள் இன்று பெற்றோராக மாறிய பிறகு தங்கள் குழந்தைகளை அப்படிக் கெஞ்ச விடுவதில்லை. அப்போதெல்லாம் கடைக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் குறைவு. அப்படியே அனுப்பினாலும் மீதிப் பணத்தைக் கணக்குக் கேட்டு, குழந்தைகளிடமிருந்து வாங்கிவிடுவார்கள். குழந்தைகளும் ஓரளவு பணம் குறித்தும் அதன் அவசிய அநாவசியம் குறித்தும் அறிந்துவைத்திருந்தனர். கேட்டு அடம்பிடித்தாலும் எதுவும் நடக்காது என்று தெரிந்து வைத்திருந்தனர். ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை.
சிறு வயதிலிருந்தே குழந்தைகள் பணத்துக்கும் நுகர்வு கலாச்சாரத்துக்கும் பழகிவிடுகிறார்கள். எந்த வேலையைச் செய்வதாக இருந்தாலும் அதற்குப் பெற்றோரிடமிருந்து பணமோ பரிசுப் பொருளோ எதிர்பார்ப்பது சில வீடுகளில் வழக்கமாகிவிட்டது. திருமணம் வரைக்கும், பெற்றோர் வாங்கித்தந்த உடையை அணிந்தவர்கள், தங்கள் குழந்தைகள் பேசத் தொடங்கும் வயதிலேயே ஆடையைத் தேர்ந்தெடுத்து வாங்குவதை வியப்புடனும் பெருமையுடனும் சொல்கிறார்கள்.
பெரும்பாலான பெற்றோர் தங்கள் தகுதிக்கு மீறி குழந்தைகளுக்காகச் செலவழிப்பார்கள். அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கித் தருவார்கள். பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோரில் பலரும் குழந்தைகளுக்குச் சாப்பிட ஏதாவது வாங்கித்தந்துவிட்டுத்தான் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். ஓரளவு வளர்ந்த குழந்தைகளுக்குப் பணத்தைக் கொடுத்து வேண்டியதை வாங்கிச் சாப்பிடச் சொல்லும் பெற்றோரும் உண்டு. முன்பு தேவைக்கும் பண்டிகைக்கும் மட்டுமே ஆடைகளையும் பொருட்களையும் வாங்கினார்கள். இன்று பொருட்களை வாங்கிக் குவிப்பதற்காகவே காரணத்தைத் தேடும் குடும்பங்கள் பெருகிவிட்டன. கையில் பணம் இல்லையென்றால் கடனோ மாதத் தவணையோ அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றிவிடுகிறது.
பெற்றோரின் சறுக்கல்
இப்படிச் சிறு வயது முதலே நுகர்வு கலாச்சாரத்துக்குப் பழக்கப்பட்டுவிடும் குழந்தைகள், பணம் குறித்தோ அதன் மதிப்பு குறித்தோ யோசிப்பதில்லை. தங்களுக்குத் தேவையானது கிடைக்க வேண்டும்; அதை வாங்கித்தருவது பெற்றோரின் கடமை என்று மட்டுமே அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். பெற்றோரின் சிரமம் உணர்ந்து நடக்கிற குழந்தைகள் குறைவு. நினைத்தது எல்லாம் உடனே கிடைக்க வேண்டும் என்ற குழந்தைகளின் எதிர்பார்ப்புக்குப் பெற்றோரும் ஒரு வகையில் காரணம். குழந்தைகளை இந்த உலகத்துக்குக் கொண்டுவரும் கருவி மட்டுமே பெற்றோர். அதனால், அவர்களிடம் அதிகாரம் செலுத்தும் உரிமை நமக்கில்லை என்று சொல்வதெல்லாம் உண்மைதான். அதற்காகக் குழந்தைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் அவர்கள் சரியான வழியில்தான் செல்கிறார்களா என்பதை மேற்பார்வையிடாமல் இருப்பதும் தவறில்லையா? பெரும்பாலான பெற்றோர் சறுக்கும் இடம் இதுதான்.
குழந்தைப் பருவத்தில் அவர்கள் கேட்கிற அனைத்தையும் வாங்கித்தரும் பெற்றோர், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அவர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும்போது குழந்தைகள் குழம்புகிறார்கள். நேற்று கிடைத்தது ஏன் இன்று கிடைக்கவில்லை என்ற குழந்தைகளின் கேள்விக்குப் பெற்றோரிடமிருந்து சரியான பதில் கிடைப்பதில்லை. பதின் பருவத்தில் இயல்பாகவே குழந்தைகளிடம் எதிர்க்கும் குணமும் தனித்துச் செயல்படும் விருப்பமும் மேலோங்கும். அவற்றைக் குழந்தைகள் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்துவார்கள். இந்த வீட்டிலும் பணத்திலும் எனக்கும் உரிமை இருக்கிறது என நினைக்கும் குழந்தைகள் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டிலிருந்து பணத்தை எடுக்கக்கூடும். வீட்டில் பணப்புழக்கம் குறைவாகவோ கட்டுப்பாடு அதிகமாகவோ இருக்கும் பட்சத்தில் குழந்தைகள் வெளியே திருடவும் கூடும்.
ஏன் திருடுகிறார்கள்?
பெற்றோரிடம் சொல்லத் தகுந்த காரணம் எதுவும் இல்லாத நிலையிலேயே குழந்தைகள் பணம் திருடுகிறார்கள். பாடம் தொடர்பான பொருட்கள் வாங்கவோ பள்ளிக் கட்டணம் என்றாலோ பெற்றோர் மறுக்கப்போவதில்லை. ஆனால், பெற்றோர் வாங்கித்தர மறுக்கும் பொருளை வாங்க வேண்டும், நண்பர்களுக்கு ட்ரீட் தர வேண்டும், அவர்களோடு வெளியே சென்று சுற்றிவிட்டு வர வேண்டும், திரைப்படத்துக்குச் செல்ல வேண்டும் என்று சொன்னால் வீட்டில் பணம் கிடைக்குமா? சில வீடுகளில் இவற்றுக்கும் பணம் தருகிறார்கள்தான். ஆனால், குழந்தைகளின் தேவை பெற்றோர் தருகிற பணத்தைவிட அதிகமாக இருந்தால்..? சில குழந்தைகள் மது, போதைப் பழக்கம் போன்றவற்றுக்குப் பழகியிருக்கலாம். அதற்காகவும் வீட்டிலிருந்து பணம் திருடலாம். தங்கள் காதலனுக்கோ காதலிக்கோ பரிசுப் பொருள் தரவும் அவர்களை வெளியே அழைத்துச் செல்லவும் சிலர் திருடுவார்கள். விதிவிலக்காகச் சிலர் ஆர்வத்துக்காகவும் கவன ஈர்ப்புக்காகவும் திருடலாம்.
மகளின் அசட்டுத் துணிச்சல்
கீர்த்தியின் பாடப் புத்தகத்தில் இருந்த பணத்தை எடுத்தார் அப்பா. எண்ணிப் பார்த்தபோது நானூற்று சொச்சம் இருந்தது. மனைவியை அழைத்துப் பணம் குறித்துச் சொன்னபோது கீர்த்தியின் அம்மா திகைத்தார். தோழி வீட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கீர்த்தி, அப்பாவின் கையில் பாடப் புத்தகம் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். மகளாகவே பேசட்டும் எனப் பெற்றோர் அமைதிகாத்தனர். “ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து வெளியே போகலாம்னு ரொம்ப நாளா ஆசை. அதுக்கு எல்லாரும் 300 ரூபாய் போட்டா சரியா இருக்கும்னு முடிவு பண்ணோம். உங்ககிட்ட கேட்டா திட்டுவீங்கன்னு தெரியும். அதான் அம்மாவோட பர்ஸ்ல இருந்து பணத்தை அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா எடுத்தேன். அம்மா பணத்துக்குச் சரியா கணக்கு வச்சிக்க மாட்டாங்க, அதனால கண்டுபிடிக்க மாட்டாங்கன்னு நினைச்சேன்பா” என்று சொன்னாள் கீர்த்தி. தவறு செய்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு அவளது முகத்திலோ வார்த்தைகளிலோ இல்லை. பணம் கேட்டால் கொடுத்திருக்க வேண்டியது உங்கள் கடமை; நீங்கள் தவறியதால் நானே எடுத்துக்கொண்டேன் என்ற பொருளில் இருந்தது அவளது பேச்சு. மகளின் செயலைப் பார்த்துப் பெற்றோர் இருவரும் விக்கித்துப்போனார்கள்.
பணத்தை பாக்கெட்டில் வைத்தபடியே விக்னேஷ் வெளியே வந்தான். அம்மாவைப் பார்த்ததும் உறைந்து நின்றான். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்பாவுக்குத் தெரிந்தால் என்னவாகும்? அடித்தே கொன்றுவிடுவாரோ எனப் பயந்தான். அம்மா பொறுமையாக டீயை ஆற்றி மகனிடம் கொடுத்தார். “சாப்பிட பிஸ்கட் வேணுமா?” என்றார். குறைந்தபட்சம் அம்மாவிடமிருந்து இரண்டு அடியையாவது எதிர்பார்த்தான் விக்னேஷ். எதுவுமே நடக்காதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாம் பணம் எடுத்ததை அம்மா பார்க்கவில்லையோ என நினைத்தான். அவன் டீயைக் குடித்து முடித்தபிறகு, “அப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்னு உனக்கே தெரியும். எதுக்குப் பணத்தை எடுத்த?” என்று அம்மா கேட்டார். தனக்கு எதுவும் தெரியாது என சாதித்தான் விக்னேஷ். அவனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்த அம்மா, திருடியதற்கான காரணத்தைக் கேட்டார். விக்னேஷ் வாயே திறக்கவில்லை.
கை நீட்டிய மகன்
அப்பா வந்து அடித்தாலும் வாங்கிக்கொள்ளலாம் என்ற உறுதியுடன் உட்கார்ந்திருந்தான். ஆனால், அப்பா அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியபோது அவரது கையை உதறித் தள்ளினான். தடுமாறி விழுந்தவர் மீண்டும் அடிக்கப் பாய, அவரது கையைப் பற்றித் தடுத்தான். “இதுக்கு மேல கைய வச்சீங்கன்னா நல்லா இருக்காதுப்பா” என மிரட்டும் தொனியில் சொன்ன மகனைப் பார்த்து அம்மா, அப்பா இருவருமே அதிர்ந்தனர். மகன் இப்படியெல்லாம் பேசுவானா, அதுவும் தந்தையைப் பார்த்தே என உறைந்து நின்றார் அம்மா. நல்ல பள்ளியில் படிக்கிறான்; இன்றுவரை எந்தப் பிரச்சினையும் இல்லையே என மகிழ்ந்திருந்த பெற்றோருக்குப் பிள்ளையின் திருட்டுச் செயலும் எடுத்தெறிந்த பேச்சும் நம்ப முடியாதவையாக இருந்தன.
அப்பா வெளியே சென்றுவிட, விக்னேஷின் நெருங்கிய நண்பர்களுக்கு போன் செய்தார் அம்மா. இரண்டு பேர் இயல்பாகப் பேசினார்கள். தங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்கள். சுனில் மட்டும் கொஞ்சம் தயங்கித் தயங்கிப் பேசினான். “ஆன்ட்டி கொஞ்ச நாளா விக்னேஷ் எங்க குரூப்ல இல்ல. வேற கிளாஸ்ல இருக்கற பசங்களோடதான் இப்பல்லாம் நிறைய நேரம் இருக்கான். அவங்களோடதான் வெளியே போறான். குடிக்க ஆரம்பிச்சிருக்கான்னு நினைக்கிறேன்” என்று சுனில் சொன்னபோது விக்னேஷின் அம்மாவுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை.
பதறிய காரியம் சிதறிப் போகும்; நாம் என்ன சொன்னாலும் மகன் அதைக் கேட்கும் பக்குவத்தில் இல்லை என்பதை விக்னேஷின் அம்மா உணர்ந்திருந்தார். மகனை அவன் வழியிலேயே விட்டுப் பிடிப்பது எனத் தீர்மானித்தார். விளை
யாட்டுக்காக நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு புகைப்பதும் குடிப்பதும் இப்போது இன்பமாகத் தெரிந்தாலும் ஆரோக்கியத்தையும் எதிர்காலத்தையும் அது எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதை மகனுக்குச் சொன்னார். இன்று வீட்டுக்
குள் திருடுவது நாளை வெளியேயும் தொடர்ந்தால் என்னவாகும் என்பதையும் சொன்னார். ஒரு குற்றம் பல குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் சொன்னார். அம்மா சொன்னதற்காக அடுத்த நாளே மாறிவிடவில்லை விக்னேஷ். அவனை மீட்டெடுக்க பெற்றோர் இருவரும் படாதபாடுபட்டனர். கீர்த்தியின் பெற்றோருக்கும் இதே நிலைதான். மகளை இயல்புக்குக் கொண்டுவர அவர்களுக்குச் சில மாதங்கள் தேவைப்பட்டன.
பட்ஜெட் பாடம்
பிள்ளைகள் எல்லை தாண்டும்வரை பொறுத்திருக்காமல் சிறு வயது முதலே பணத்தின் மதிப்பு குறித்தும் அவசியம், ஆடம்பரம் குறித்தும் அவர்களுக்குக் கற்றுத்தர வேண்டும். பெரும்பாலானவற்றுக்கு நாமே உதாரணமாகவும் இருக்க வேண்டும். வீட்டின் வருமானம் எவ்வளவு, செலவுகள் எவ்வளவு, சேமிப்பு எவ்வளவு என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். கடன் இருந்தால் அதையும் தயங்காமல் அவர்களிடம் தெரிவிக்கலாம். எதற்காக வாங்கினோம் என்பதையும் சொல்ல வேண்டும். குடும்பத்தின் பொருளாதார நிலையைத் தெரிந்து வளரும் குழந்தைகள், பணத்தைச் செலவிடும்போது தேவையா, தேவையில்லையா என யோசிப்பார்கள். பொருளாதார தன்னிறைவு கொண்ட பெற்றோர் சேமிப்பு, அது எதிர்காலத் தேவைக்கு எப்படிக் கைகொடுக்கும் என்பது குறித்து குழந்தைகளுக்குச் சொல்லலாம். எனக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் ஆறாம் வகுப்புப் படிக்கும் அவர்களது மகன்தான் மாத பட்ஜெட்டை எழுதுவான். வரவு, செலவு குறித்துத் தெரிந்துவைத்திருக்கும் அவன், தேவையில்லாமல் எதையும் வாங்க மாட்டான். சேமிப்புக்கு முக்கியத்துவம் தருவான். அந்தச் சேமிப்பையும் திட்டமிட்டே செலவிடுவான். கீர்த்தி, விக்னேஷ் இருவரது பெற்றோரும் இப்போது இதைத் தங்களது வீடுகளிலும் செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
(நிஜம் அறிவோம்…)