எங்க குலசாமி 6:  இந்த வாரம்:  நாஞ்சில் நாடன்


என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

நாகர்கோவில் அருகிலுள்ள வீரநாராயணமங்கலம் கிராமம், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சொந்தஊர். வழியெங்கும் வயலும், வயல் சார்ந்த இடங்களுமாக அவரது படைப்புகளில் வரும் ஊர் விவரணைகளும் அச்சு அசலாக விரிகின்றன. இங்குள்ள ‘ஊர் அம்மன் கோயில்’ என அழைக்கப்படும் முத்தாரம்மன்தான் நாஞ்சில் நாடனின் குலசாமி.
தற்போது கோவையில் வசித்தாலும் முத்தாரம்மன் கோயிலில் விசேஷம் என்றால் தவறாது ஊரில் ஆஜராகி விடுவார் நாஞ்சில் நாடன். “உங்களோட குலசாமி பத்தி பேசணுமே” என்றதும் உற்சாகமாகப் பேசத்துவங்கினார். “முத்தாரம்மனை பத்தி பேசும் முன்னாடி முன்னோர்கள் பற்றியும் பேசணும். ஏன்னா, குலசாமி பந்தம் அங்க இருந்தே ஆரம்பிக்குது.

திருநெல்வேலி மாவட்டம், முனைஞ்சிப்பட்டி என் தாத்தாவோட ஊர். அவரது இளம் பிராயத்தில் கொடிய பஞ்சம். ஊர்ல கிடந்தால் பசியால் செத்துப் போவமோன்னு பயந்து அங்கிருந்து நடந்தே வந்து வீரநாராயண மங்கலத்துக்கு வந்திருக்காங்க. வந்த களைப்புல இந்தக் கிராமத்தின் கிழக்கு எல்லையில் இருக்கிற பாலத்துல வந்து படுத்துருக்காங்க.

அப்போ உள்ளூர் பண்ணையார் ஒருத்தரு தாத்தாவைக் கூட்டிட்டுப்போய் சாப்பாடு கொடுத்து மாடு மேய்க்க பழக்கப் படுத்திருக்காரு. என்னோட தாத்தா பேரு சுப்பிர மணியபிள்ளை. அவரு பேரைத்தான் எனக்கு விட்டாங்க. நான் சுப்பிரமணியம்னு ஆக்கிக்கிட்டேன். எங்க தாத்தா வண்டிமாடு, ஏர் ஓட்டப் படிச்சு ஊருல ஈசானி மூலையில் ஒரு குடிசை வீட்டையும் ஒத்திக்குப் பிடிச்சாரு. சொந்த அத்தைப் பொண்ணையே கல்யாணமும் செஞ்சார். அந்த ஆச்சிக்கு ஊரு பணக்குடி. அவுக ரெண்டு ஆம்பளை பிள்ளைங்களைப் பெத்துப் போட்டுட்டு இறந்துட்டாங்க. அப்புறம் பறக்கை கிராமத்துல இருந்து வள்ளியம்மையை இரண்டாவது கல்யாணம் பண்ணாரு தாத்தா. அவுங்கதான் என்னோட ஆச்சி; எங்க அப்பாவ பெத்த அம்மா.
தாத்தா வந்தேறியாக வந்தாலும் அசராத உழைப்பாளி. திறமையும், நேர்மையும் அவரது அடையாளம். வயலில் அறுப்புத் தொழில் செய்யும் குழுக்கள் அமைச்சு அதுக்கு ‘கூர்வடி’யாகவும் இருந்தாங்க. அப்ப எங்க ஊருக்குப் பக்கத்தில் ‘கரையான் திரடு’ன்னு ஒண்ணு இருந்துச்சு. திரடு சின்னமலைக்குன்று மாதிரி இருக்கும். ஒரு பெருமழையில் கரையான் திரடு உடைஞ்சுருச்சு. அப்ப அதுக்குள்ள ஒரு அம்மன் சிலை இருந்துருக்கு. அதை எடுத்துட்டுவந்து ஊருக்கு மத்தியில் வச்சாங்க.
‘கூர்வடி’களுக்கு கூலியா நெல் கிடைக்கும். அதை வேலையாட் களுக்கு மரக்கால் ( ஒரு மரக்கால் என்பது நாலுகிலோ) மேனிக்கு பங்கு வச்சதுபோக மிச்சம் வரும் ஆறேழு மரக்காலை பங்கு வைக்காமல் சேர்த்துச் சேர்த்து வைப்பாங்க. ஒரு பூவுக்கு (பருவத்துக்கு) 4 கோட்டை (21 மரக்கால் சேர்ந்தது ஒரு கோட்டை) நெல் மிஞ்சும். அதுபோக, ஒரு சீட்டும் போட்டு விவசாயிகளே முன் நின்று உடல் உழைப்பையும் செலுத்தி அம்மனுக்குக் கோயில் கட்டியிருக்காங்க.

ஒருதடவை, எங்க தாத்தா கோயில்ல கணக்கு கேட்டுருக்காரு. உடனே விளக்கை அணைச்சுட்டு அவரோட அடிவயித்துல குத்தி இழுத்துட்டாங்க. அவரோட வலி நிறைந்த அந்த வாழ்க்கை யைத்தான் என்னுடைய ‘மாமிசப் படைப்பு’ என்னும் படைப்பில் கந்தையா எனும் பாத்திரம் வழியாகப் பேசியிருப்பேன்.

இது எல்லாமே எனக்கு செவிவழிச் செய்திகள்தான். அந்தச் சம்பவத்துக்குப் பின்னாடி எங்க தாத்தா ‘அம்மன் கோயிலுக்கு உங்களால என்ன முடியுமோ அதைச் செய்யுங்க. ஆனா, ஒருபோதும் எந்தப் பொறுப்பும் எடுத்துக்காதீங்கன்னு’ சொல்லிருக்காங்க. கூர்வடி என்பவன் கூர்களுக்கெல்லாம் தலைவன். பதினெட்டுப் பேரு வேலை செய்கிறார்கள் என்றால் அந்தப் பதினெட்டு கூர்களின் தலைவன் கூர்வடி. இதே போல் கோயில் முதலுக்கு தர்மகர்த்தாவாக ஒருவர் இருப்பார். அவரை முதலடி என்பார்கள். கூர்வடியாக இருந்த என் தாத்தா கோடைகாலத்தில் வீட்டில் இருந்து ராமாயணம் வாசிச்சு கதைகளும் சொல்லிருக்காரு.

எங்க ஊர் அம்மன் கோயிலில் மாசிமாசம் கொடை கழியும். அதுக்கு ‘அன்னக்கொடை’ன்னு பேரு. செவ்வாய்க்கிழமை மத்தியானம் ஊர் பொதுச் சாப்பாடு. கொடைக்கு 18 வயதுக்கு மேம்பட்ட ஆண்கள் எல்லார்கிட்டயும் வரி வாங்குவாங்க. எங்க ஊரில் ஒரு சாதிக்குள்ளேயே மக்கள், மருமக்கள், சைவம்ன்னு மூணுபிரிவு இருக்கு. மூவருக்கும் பொதுவானதே ஊர் அம்மன் கோயில். எங்கள் கோயிலின் முக்கியத்தெய்வம் முத்தாரம்மன். பக்கத்திலேயே சூலப்பிடாரி, சந்தனமாரியும் சேர்ந்து தனி சன்னிதியில் இருக்காங்க. இதுபோக பூதத்தான், வைரவனும்(பைரவர்) உண்டு. வைரவன் தான் காவல்தெய்வம். முத்தாரம்மன் உள்பட ஒவ்வொரு சாமிக்கும் தனித்தனி சாமி கொண்டாடிகள் உண்டு. அது குடும்ப வரிசையில் வரும்.

எங்க ஊரு முத்தாரம்மனை ‘பகவதியம்மன்’னு சொல்லுவாங்க. இந்த அம்மனுக்கு பலியிடல் கிடையாது; அவுங்க சைவம். இதனால் கொடை கழிக்கும்போது முதலில் முத்தாரம்மனுக்கு சைவப் படைப்பு போட்டு நடையை கொஞ்சம் சாத்தி வச்சுடுவாங்க. அதுக்குப் பின்னாடிதான் அசைவ சாப்பாட்டை மற்ற சாமிகளுக்குப் பரிமாறுவாங்க.

நாஞ்சில் நாட்டிலேயே திமுகவின் இரண்டாவது கிளை உதயமானது எங்க ஊரில் தான். திராவிட இயக்க சிந்தனை ஊடுருவிய ஊருன்னாலும் முத்தாரம்மன்னு வரும்போது மனதில் ஒரு பரவசம் வரும். இதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்க முடியாது. என்ன பெரிய ஞானி வந்து மூட நம்பிக்கைன்னு சொன்னாலும் சொல்லிட்டுப் போறான் என்பதே கணக்காக இருக்கிறது. முன்பெல்லாம் சந்தனமாரி, சூலப்பிடாரிக்கு ஆட்டுகிடா, கோழின்னு பலி கொடுப்பார்கள். திராவிட இயக்கம் ஊரில் வலுவானதும்தான் ‘பலி’யிடக் கூடாதுன்னு முடிவு செஞ்சாங்க.



எங்கே இருந்தாலும் கொடை நேரத்துல ஊருக்கு வந்துரு வேன். கொடைக்கு வரி எழுதுவது என ஒரு பழக்கம் இருக்கு. வரியை எங்கே இருந்து துவங்குவது என ஒரு முறை கேள்வி வந்தது. பணக்காரன், ஏழை என ஆள் பார்த்து முதல் வரியை வாங்கிவிட்டதாக குறை சொல்லிவிடக்கூடாதுங் கிறதுக்காக, ஈசானி மூலையில் இருந்து துவங்குறதுன்னு முடிவு செஞ்சாங்க. ஈசானி மூலையில் இருந்தது எங்க தாத்தா வீடுதான். அப்போ தொடங்குன பழக்கம் இப்போதும் நான்தான் முதல்வரி கொடுத்துட்டு இருக்கேன்.

செவ்வாய்க்கிழமை ராத்திரி ஆராசனை வந்து பூவெடுப்பெல்லாம் ஆகி, படப்பு போட்ட பின்னாடி அதிகாலை 5 மணிக்கு அந்தப் படைப்பை பிரிச்சு வரிகாரங்களுக்கு கொடுப்பாங்க. அதில் சைவப்படைப்பு வேணுமா அசைவப்படைப்பு வேணுமான்னு நாமளே தேர்ந்தெடுக்கலாம். எனக்கு எப்போதுமே சைவப் படைப்பைத் தேர்ந்தெடுப்பேன். நல்லகாரியங்களின்போது அம்மனை நாங்கள் நினைத்துக் கொள்வதும், அம்மனிடம் நல்ல காரியத்தை நடத்தித்தர வேண்டுவதும் வழக்கம். எங்கள் அம்மன் கோயிலின் மிகப்பெரிய விசேஷமே வில்லுப்பாட்டுதான். நான் வில்லுப்பாட்டு பிரியனும் கூட. புன்னார் குளம் கோலப்பபிள்ளை, தோவாளை சுந்தரம்பிள்ளை இவங்களோட வில்லுப் பாட்டைக்கேட்டு வளர்ந்தவன் நான். வழிபாடு, சாமிகள், அதைப்பற்றிய கதைகள், வில்லுப்பாட்டு மாதிரியான சூழல், சாமிவருவதற்காக இவர்கள் வாசிக்கும் நாதஸ்வரம், அதில் வாசிக்கும் ராகமெல்லாம் எனக்கு பொடியனாக இருக்கும்போதே ஈர்ப்பை ஏற்படுத்தியது.

வில்லுப்பாட்டில் ஏதோ ஒரு கதையைத்தான் இரவு முழுக்கப் பாடுவார்கள். சாமிகொண்டாடி ஆடி பூவெடுத்து, படைப்பு போடுவதற்கு முன்னாடி வரத்து பாடணும். அதாவது சாமியாடிக்கு சாமியை வரவைக்க பாடுவது. ‘பரமசிவம் பார்வதி அவதரிச்சு கொல்ல வரம், வெல்ல வரம் வாங்கி...’ன்னு தொடங்கி ‘வாராலே முத்தாரம்மன்னு’ போகும். அப்படி வரும்போது அவுங்க கைலாசத்தில் இருந்து இறங்கிவந்து, கங்கையில் நீராடின்னு ஆரம்பிச்சு ஒவ்வொரு இடமா வந்து, நெல்லையை பாடி, நாஞ்சில் நாட்டுக்கு வருவாங்க. இங்கே ஒவ்வொரு கோயிலா பாடி வீரநாரயணமங்கலத்துக்கு வரும் போது சாமிக்கு ஆராசனை வந்துடும்.

வில்லுப்பாட்டு, ஆராசனையெல்லாம் கேட்கும்போது சின்ன வயசில் என்னோட உடம்பில் பயங்கர விறுவிறுப்பு ஏற்படும். பரவச நிலை இருக்கும். இதேபோல் கார்த்திகையில் முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு நடக்கும். அது சின்னக் கொடை போல் இருக்கும். முத்தாரம்மனுக்கு தினசரி காலை, மாலையில் பூஜை உண்டு. அம்மனுக்கு என்று நஞ்சை நிலங்களும் உண்டு. அதை பாட்டாளி வர்க்கத்தினர் சேர்ந்து வாங்கியிருந்தனர். அதை பாட்டம் (குத்தகை) கொடுத்து அந்த வருமானத்தை அம்மனோட பூஜை காரியங்களுக்குப் பயன்படுத்துவாங்க.

விசேஷ நாட்கள்ல காலையில் அரிசி பாயசமும் பஞ்சாமிர்தமும், மாலை பூஜையில் புட்டமுது, வடை, சுண்டலும் கொடுப்பார்கள். இதை நேர்ச்சையாகவும் செய்யுறவங்க உண்டு. பூஜை முடிந்ததும் அன்றைய கால பூசாரி தேவாரப்பாடல் பாடுவாரு. இதையெல் லாம் கேட்டே வளர்ந்ததால் எனக்குள்ள தமிழும் கூடவே ஏறியது.

கோயிலில் மான் வாகனமும் உண்டு. அது கொடை முடிந்த செவ்வாய் ராத்திரி ஊர் சுற்றிவரும். அதுக்கு முன்னால திங்கள்கிழமை சாயங்காலம் குடியழைப்பு, செவ்வாய்க்கிழமை காலையில் பழையாற்றில் போய் நீர் எடுத்துட்டு வந்து அம்மனுக்கு அபிஷேகம் ஆகி, செவ்வாய் மதியமே ஒரு பூஜை நடக்கும். அது முடிந்த தும் அன்னப்படையல். அதன் பின்னர் ராத்திரி கொடை விழா நடக்கும். புதன்கிழமை உச்சிக்கொடை நடக்கும்.

நான் ஊருக்கு போனால் முத்தாரம்மனைக் கும்பிடு போடாமல் இருப்பதில்லை. எங்க அம்மன் கோயிலில் ‘நிறைத்தல்’ நாளும் சிறப்பாக நடக்கும். ஊரில் இருந்து வெளியூருக்கு சுபகாரியங்களுக்கு கிளம்புகையிலும் முத்தாரம்மனுக்கு ஒரு தேங்காய் விடல் உண்டு. கொடையின்போது லெட்சுமணன் அண்ணன் வைரவன் சாமிக்கு ஆடி முடிச்சதும், நான் குனிஞ்சு பவ்யமாக நெற்றியைக் காட்டுவேன். எனக்கு விபூதியை பூசிட்டு, ‘நல்லா எழுதணும்டா... நீ நம்ம ஊருக்கே பெருமை’ன்னு சொல்லுவாரு. அப்ப எனக்கு அது லெட்சுமணன் அண்ணனாத் தெரியாது; வைரவன் சாமியாத்தான் தெரியும்.



ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிச்சாச்சு. முற்போக்கு சிந்தனைகள், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தமிழ் எல்லாம் படிக்குறோம். ஆனாலும் கொடையின்போது தலை குனிஞ்சு நின்னு பைரவன் சாமி கொண்டாடி என் நெற்றியில் விபூதி பூசும்போது என் கண்ணு கலங்கி கண்ணீர் வரும். இது மனித சம்பவமா, தெய்வ சம்பவமா என்றெல்லாம் பகுத்துப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு உணர்ச்சியைத் தரும் நம்பிக்கைக்குரிய விஷயம் அது. எனக்கு எந்தச் சாமியிடமும் எந்த வேண்டுதலும் இல்லை. சாமிக்கு தெரியாததையா நாம் வேண்டிவிடப் போறோம்?

கஷ்டம் வரும்போது மனிதனுக்கு ஒரு நம்பிக்கை தேவை. அந்த நம்பிக்கையின் இன்னொரு வடிவம் தான் இறைவன். அந்த நம்பிக்கையை எனக்கு வீரநாராயணமங்கலம் முத்தாரம்மன் தருகிறாள்” என்று உள்ளார்ந்த நெகிழ்வுடன் சொல்லி முடித்தார் நாஞ்சில் நாடன்!

படங்கள் உதவி: ஆர்.ராஜேஷ்குமார், எம்.சிவா

x