நானொரு மேடைக் காதலன் - 26


 “வரலாற்றின் வழி நின்று சிந்திக்கிற சிரமத்தை மேற்கொண்டால் தமிழகம் காலகாலமாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. அயலாருக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று கனவிலும் கருதாத தமிழர்கள் நாம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைக்கூட உணரவில்லை. குளத்தைக் கண்டால் குளிப்பதும் கோயிலைக் கண்டால் கும்பிடுவதும்தான் வாழ்க்கை என்று கருதிக்கொண்டு இருக்கிற தமிழர்கள் வரலாற்றை வசதியாக மறந்துவிட்டார்கள். 

அயலானுக்கு வந்திருக்கிற உணர்வில் ஆயிரத்தில் ஒரு பங்காவது இவனுக்கு இருக்குமானால் எல்லையை இழந்திருக்க வேண்டியது வந்திருக்காது. தொல்லையில் நாளும் தொலைந்துகொண்டிருக்கிற நிலைமையும் ஏற்பட்டிருக்காது. அடுத்தவர் நிலத்துக்கு ஆசைப்பட வேண்டாம். இருப்பதை இழந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுக்கு வண்ணம் தீட்டத்தான் இந்த விழா. வடிவம் தரத்தான் இந்த விழா’’ தமிழகப்  பொன்விழா நிகழ்ச்சி தென்கோடி முனையில் உள்ள தேன் நகரம் மார்த்தாண்டத்தில் நடந்தபோது சிறப்புரை ஆற்றும் பேறு எனக்குக் கிடைத்தது. 

“தமிழகப் பொன்விழாவை தகத்தகாயமாய் கொண்டாடுகிற தகுதியும் உரிமையும் பெற்றவர்கள் குமரி மாவட்ட மக்கள்தான். தாய்த் தமிழகத்தோடு குமரியை இணைப்பதற்கு நாம் கொடுத்த விலை, செய்த தியாகம், இழந்த உயிர்கள், சிந்திய ரத்தம் எல்லாவற்றையும் பட்டியலிட்டால் ஒரு விடுதலைப்போருக்கு நாம் முகம் கொடுத்திருக்கிறோம். நம் முகவரியைத் தக்க வைப்பதற்காக 1945 முதல் 1956 வரை ஏறக்குறைய 11 ஆண்டுகள் நம் முன்னோர் சிந்திய ரத்தத்தால் சிவந்தே கிடந்தது இந்த பூமி. இதை இன்றைய இளைய தலை முறைக்கு நினைவூட்ட வேண்டிய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றத்தான் இந்த காந்தி மைதானத்தில் கடலென மக்கள் திரண்டிருக்கிறார்கள். இந்த காந்தி மைதானத்தில்தான் 1954 ஜூலைத் திங்களில் உரிமைக்காக நடந்த ஊர்வலத்தில் காவல்துறை அத்துமீறி நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 7 தமிழர்கள் பிணமாக வீழ்ந்தார்கள். அவர்கள் அன்று  மண்ணுக்காகப் போராடி வீழ்ந்த இடத்தில்தான் நீங்கள் எழுந்து நிற்கிறீர்கள்’’ என்றபோது ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

“மார்த்தாண்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலை வில் உள்ள புதுக்கடையில் துப்பாக்கிச் சூடு. புதுக்கடை துப்பாக்கிச் சூட்டில் 4 தமிழர்கள் பலியானார்கள். அன்றைக்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சர் சி. பி. இராமசாமி அய்யரின் எரிச்சலூட்டும் எதிர் நடவடிக்கைகளையும் சமஸ்தான காங்கிரஸின் எதிர்ப்பையும் தமிழர்கள் சந்தித்த வரலாறு, இரத்தம் தோய்ந்த வரலாறு. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண்ணை மீட்க என் முன்னோர் பட்ட பாட்டை எண்ணினால் சித்தம் கொதிக்கிறது. மகத்தான தலைவர் மார்ஷல் நேசமணியும், போராட்ட சர்வாதிகாரி என்று கருதப்பட்ட குஞ்சன் நாடாரும் அவர்களுக்குத் துணையாகவும் தூணாகவும் இருந்த பி. எஸ். மணியும்தான், திருவிதாங்கூர் கொச்சி முதலமைச்சர் பட்டம் தாணு பிள்ளை கட்டவிழ்த்து விட்ட அராஜகத்தை எதிர்கொள்ள மக்களை ஆயத்தப் படுத்தினார்கள். 
பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவும் உள்துறை அமைச்சர் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலும்   ‘நாட்டுப் பிரிவினையால் உருவாகி இருக்கிற பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதற்குப் பிறகு மொழிவழி மாநிலம் அமைப்பது குறித்து சிந்திக்கலாம்’ என்றார்கள். ஆனால், நேரு போன்ற நிகரற்ற தலைவர்களின் எதிர்ப்பையும் அடக்குமுறையையும் மீறி மொழிவழி மாநிலக் கிளர்ச்சிகள் பற்றி எரியத் தொடங்கின. பண்டித நேருவின் அரசு பணிந்தது. 1956 -ம் ஆண்டு மாநில மறு சீரமைப்புத் திட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அப்போது நாகர்கோவிலில் நடந்த வட்டார காங்கிரஸ் சொற்குழு கூட்டத்தில் பேசிய பொன்னாரை தர் என்பவர் கன்னியாகுமரி காசர்கோடு உள்ளடக்கிய ஐக்கிய கேரளம் அமைக்க வேண்டும் என்றார். தடி கொண்டு தலையில் அடித் ததைப்போல், இடிவந்து இதயத்தில் விழுந்தது போல் தமிழர்கள் ஆனார்கள். விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கென குதித்ததைப் போல் கொதித்தெழுந்தார் பி. எஸ்.  மணி. திருவிதாங்கூரில் அகப்பட்டுள்ள தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என அத்தீர்மானத்துக்குத் திருத்தம் கொண்டு வந்தார். அத்திருத்தத்தை அக்கூட்டம் ஏற்க மறுத்தபோது தனது எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு வெளிநடப்பு செய்தார். அவரது முயற்சியால்தான் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கி ரஸ் உதயமானது. நத்தானியேல், காந்திராமன், பி. எஸ்.  மணி போன்றவர்கள் முன்னெடுத்த நடவடிக்கை களால் நீங்களும் நானும் இன்று தமிழ் பேசுகிறோம். நம் குழந்தை தமிழ்த் தாலாட்டு கேட்கிறது. 

துப்பாக்கிச் சூடு நடத்தி, அடக்குமுறை அம்பு களை வீசி எறிந்து, அநியாயம் செய்த பட்டம் தாணு பிள்ளை அரசின் மீது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் டி. சிதம்பர நாடார் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தார். அதற்குக் கால நீட்டிப்பு கேட்டதால் அந்தத் தீர்மானம் முடங்கியது. பிரஜா சோசலிஸ்ட் டி. எஸ். இராமசாமி கொடுத்திருந்த நம்பிக்கைத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விட்ட போது பட்டம் தாணுபிள்ளை அரசு கவிழ்ந்தது. 1954 ஆகஸ்ட் 14 - ம் நாளை விடுதலை நாளாக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ், திருவிதாங்கூர் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக மாணவர் அணி ஆகிய அமைப்புகள் கடைப்பிடித்தன. வெள்ளையனே  வெளியேறு போராட் டத்தை நினைவுபடுத்தக்கூடிய வகையில் தெற்கெல்லைப் போராட்டம் திசைகளை அதிரச் செய்தது. மாணவர்கள் வகுப்பு களைப் புறக்கணித்தார்கள். கடைகள் அடைக்கப்பட்டன. காவல்துறை ஆண் களைக் கைது செய்துவிட்டு அவர்கள் வீட்டுப் பெண்களை மானபங்கம் செய்தது. துப்பாக்கிச் சூட்டில் 15 தமிழர்கள் பலியா னபோது, பட்டம் தாணுபிள்ளையின் அரசு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு தமிழர்களைத் தாக்கி சிறைப்படுத் தியபோது, தெற்கெல்லைப் போராட்டத்தில் காட்டு மிராண்டித்தனம் அரங்கேறியபோது, வடக்கே ஃபரூக்காபாத்தில் பிரஜா சோசலிஸ்ட் கட்சி மாநாட்டில் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ராம் மனோகர் லோகியா ‘மக்களைச் சுட்டுத் தள்ளிய திருவிதாங்கூர் கொச்சி அரசு பதவியில் இருக்கக் கூடாது’ என்று பேசினார். ஆனால், தாய்த் தமிழகத்தில் தெற்கெல்லைப் போராட்டத்துக்கு ஆதர வாக எதுவும் நடக்கவில்லை என்பதை நினைவுபடுத்துவது எனது கடமை ஆகிறது. சிலம்புச் செல்வர் ம.பொ.சியும் கம்யூனிஸ்ட் தலைவர் பூதப்பாண்டி ஜீவானந்தமும் தெற்கெல்லைப் போராட் டத்தை முன்னெடுக்க துணை நின்றார்கள் என்பதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். 

அடக்குமுறைகளை துச்சமெனக் கருதி ‘திரும்பி வந்தால் மகன்’ என்று பச்சை ரத்தத்தால் எழுதி வைத்துவிட்டு எண்ணற்ற இளைஞர்கள் தலைமறைவு ஆனார்கள். நாம் தலை நிமிர்ந்து தமிழர்களாக வாழத் தலைமறைவான நம் முன்னோர்கள் செய்த தியாகத்தை  நாம் என்றைக்காவது நினைத் துப் பார்த்திருக்கிறோமா, தேவிகுளம் - பீர்மேடு பகுதியில் தமிழர்களைத் திட்ட மிட்டு வெளியேற்றும் கொடுமைக்கு முடிவு காண புறப்பட்ட மார்ஷல் நேசமணி கைது செய்யப்பட்டு காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டார். தேவிகுளம் - பீர்மேடு பகுதியைத் தாய்த் தமிழகத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து சென்னையில் அனைத்துக் கட்சி ஊர்வலம் நடப்பதற்கு முன்பு ஜீவா கைது செய்யப்பட்டார். நேசமணி, ஜீவா கைதைக் கண்டித்து தெற்கெல்லை போர்க்கோலம் பூண்டது. கர்நாடகம் முழுவதும் ‘சுவர்ண கர்நாடக விழா’ என்ற பெயரில் கன்னடர்கள் கொண்டாடுகிறார்கள். கேரளாவிலும் மலையாளிகள் பொன்விழாவைக் கொண்டாடுகிறார்கள். நாம் கொண்டாடா விட்டாலும் நினைத்தாவது பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இரத்தம் சிந்திய இடத்தில் கூடியிருக்கிறோம்.  
திருவஞ்சைக்களத்தை, திருவனந்த புரத்தை, தென்மலையை, நெய்யாற்றின் கரையை, நெடுமங்காட்டை, தேவிகுளம்- பீர்மேட்டை கேரளாவிடம் இழந்தோம். திருவேங்கடம் என்ற திருப்பதியை, நெல்லூரை, சித்தூரை, ஏகாம்பரக் குப்பத்தை, கண்ணுதற் கடவுளுக்கு திண்ணப்பன் கண் தந்த காளத்தியை ஆந்திராவிடம் இழந்தோம். கோலார் தங்க வயலை, கொள்லேகாலத்தை, பெங்களூரை கர்நாடகத்திடம் இழந்தோம். இழந்ததை எண்ணிப் பார்ப்போம். இருப்பதைப் பாதுகாப்போம். கடல் கொண்டது போக, கண்டவர் கொண்டது போக எஞ்சியதை எந்நாளும் காக்க பொன்விழா நாளில் சூளுரை ஏற்போம்.

பாடிவரும் ஆறுகள் பல
பரந்து உயர்ந்த மலைகளும் பல
ஓடை என்பது மலர்ச்சோலை
ஒழுக விட்டது தேனாலே
அறங்கிடந்து பண்பாடும்
அன்பிருந்து சதிர் ஆடும்
திறம் கிடந்த நாகரிகம்
செய்து தந்தது தமிழ்நாடு
மறம் கிடந்த தோள்வீரர்
மகளிர் தரும் பெருங்கற்புச்
சிறந்து இருக்கும் தமிழ்நாடு
செந்தமிழர் தாய் வீடு
எல்லாம் இருந்த தமிழ் நாடு
பொல்லாங்கு அடைந்தது பிற்பாடு

பொல்லாங்குக்கு முடிவு கட்டுவோம். தமிழ் மீது ஆணை! தாய்த் தமிழகத்துக்காக உயிர் துறந்த உத்தமர்கள் மீது ஆணை! இரத்தம் சிந்திய மானமான மறவர்கள் மீது ஆணை! எங்குல மங்கையர் மீதாணை! இருப்பதைக் காப்போம்’’

(இன்னும் பேசுவேன்...)

திருவஞ்சைக்களத்தை, திருவனந்த புரத்தை, தென்மலையை, நெய்யாற்றின் கரையை, நெடுமங்காட்டை, தேவிகுளம்- பீர்மேட்டை கேரளாவிடம் இழந்தோம். திருவேங்கடம் என்ற திருப்பதியை, நெல்லூரை, சித்தூரை, ஏகாம்பரக் குப்பத்தை, கண்ணுதற் கடவுளுக்கு திண்ணப்பன் கண் தந்த காளத்தியை ஆந்திராவிடம் இழந்தோம். கோலார் தங்க வயலை, கொள்லேகாலத்தை, பெங்களூரை கர்நாடகத்திடம் இழந்தோம். இழந்ததை எண்ணிப் பார்ப்போம். இருப்பதைப் பாதுகாப்போம்.

x