சிதம்பரம் பிரதமர்... சிவகங்கையில் ராகுல்..? - கார்த்தி போடும் கணக்கு!


குள.சண்முகசுந்தரம்

‘சிவகங்கை தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட்டால் அவரை 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமர்க்களமாய் வெற்றிபெற வைப்போம். அவர் இங்கு போட்டியிட்டால் தமிழகம் முழுவதும் அதற்கான தாக்கம் ஏற்படும். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும். அந்த வெற்றியானது அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கட்டமைக்க காங்கிரஸுக்குக் தோள் கொடுக்கும். எனவே, இந்தத் தேர்தலில் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டும்’  - 2009 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இப்படியொரு அதிரடி தீர்மானத்தை நிறைவேற்றி ராகுல் காந்தியின் பார்வைக்கு அனுப்பி வைத்தது சிவகங்கை மாவட்ட இளைஞர் காங்கிரஸ். அப்போது இந்தத் தீர்மானம் வினோதமாகவும் வேடிக்கையாகவும் பேசப்பட்டது. இதோ பத்து ஆண்டுகள் கழித்து,  ‘ராகுல் காந்தி சிவகங்கை தொகுதியில் போட்டியிடலாம்’ என்ற தகவல் இப்போது செய்தியாகக் கசிந்துகொண்டிருக்கிறது.

2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனிடம் நூலிழையில் தப்பிப் பிழைத்தார் ப.சிதம்பரம். அந்தத் தேர்தல் தந்த பாடம், இனிமேல் தனக்காக மக்களிடம் ஓட்டுக் கேட்டுச் செல்வதில்லை என்ற முடிவுக்குள் அவரைத் தள்ளியது. அதனால்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினார். ஆனாலும், “நிதியமைச்சரே தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கினால் கட்சியின் இமேஜ் என்னாவது?” என்று கேள்விகள் எழுந்ததாலும் கட்சித் தலைமை போட்ட கிடுக்கிப்பிடியாலும்   மகன் கார்த்தியை நிறுத்தினார்.
அந்தத் தேர்தலில் கூட்டணி பலமில்லாமல் சுமார் ஒரு லட்சத்து ஐயாயிரம் ஓட்டுகள் பெற்றார் கார்த்தி. இம்முறை திமுக கூட்டணி பலம் சேர்ப்பதால் சிவகங்கைக்கு அவர்தான் காங்கிரஸ் வேட்பாளர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க,  “இந்த முறை கார்த்தி போட்டியில்லை. ராகுல் காந்தி சிவகங்கையில் போட்டியிடுகிறார்” என்று கடந்த சில தினங்களாக கார்த்தி சிதம்பரத்துக்கு மிக நெருக்கமானவர்களே கசியவிட்டுக் கொண்டிருக்கும் செய்திக்குள் இருக்கும் மர்மம் புரியவில்லை.

கார்த்தி விசுவாசிகளிடம் “இது உண்மையா?” என்று கேட்டால், “அட, கார்த்தி சாரே சொன்னாருங்க...’’ என்றவர்கள், “உபி-யில் மயாவதியும் அகிலேஷும் காங்கிரஸ் இல்லாத கூட்டணியை உருவாக்கி இருக்காங்க. ஆனாலும் அங்கே சோனியா காந்தியின் ராய்பரேலி, ராகுலின் அமேதி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம்னு அவங்க சொல்லிருக்காங்க. இருந்தாலும் கடைசி நேரத்தில் பாஜக ஏதாச்சும் சதிவேலைகள் செஞ்சு இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸுக்கு நெருக்கடிகளை உண்டாக்கலாம். இப்போது, வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என முடிவெடுத்திருக்கும் மாயாவதியும் அகிலேஷும்கூட நாளைக்கே மனம் மாறலாம். அதனால்தான் ராகுல் போட்டியிட ஏதுவாக தென் மாநிலங்களில் இன்னொரு பாதுகாப்பான தொகுதியைத் தலைமையிலிருந்தே தேர்வு செய்யச் சொல்லிருக்காங்க.

x