இனியாவது உண்மையைச் சொல்லுங்கள்!


கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக ‘தெகல்கா’ புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்ட தகவல்களும் அதன் பிறகு நடந்து கொண்டிருக்கும் தொடர் சம்பவங்களும் மக்களை திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்தச் சம்பவங்கள் நடந்து கிட்டத்தட்ட ஒன்றே முக்கால் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது சர்ச்சை எழுப்பப்படுவது ஏன்? இந்தச் சம்பவங்கள் தொடர்பாக தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அப்படி எடுத்திருந்தால் அதை பகிரங்கப்படுத்தாமல் இருந்தது ஏன்? இதுபோன்ற நியாயமான கேள்விகள் மக்கள் மனதில் பூதாகரமாக அலையடிக்கின்றன.

“ஆட்சியை குறைசொல்ல முடியாதவர்கள், இறந்து போனவர்களை சாட்சிக்கு இழுத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள்” என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். தகவல்களை வெளியிட்ட மேத்யூஸோ, இதன் பின்னணியில் முக்கியப் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக இப்போதும் கூறுகிறார்.
ஒன்றல்ல... இரண்டல்ல... கோடநாடு களவுச் சம்பவத்தையொட்டி, சங்கிலித் தொடர் நிகழ்வுகளாக ஐந்து உயிர்கள் பலியாகி இருக்கின்றன. வெறும் திருட்டு, தற்செயலான விபத்து என்றெல்லாம் இவற்றை ஒதுக்கிவிட முடியவில்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் கிளப்பப்பட்ட சந்தேகங்களுக்கு விடைதேடி விசாரணைக் கமிஷன் அமைத்திருக்கும் தமிழக அரசு, கோடநாடு சம்பவங்கள் தொடர்பாகவும் முறையாக விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்கு இந்நேரம் சொல்லி இருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் இப்போது யாரும் இதை வைத்து சர்ச்சை கிளப்பி இருக்க முடியாது.

x