நீரோடிய காலம் 16: பாலும் எலியும்!


ஒரு மண் என்பது அதிலுள்ள மனிதர்கள், இயற்கைச் சூழல் போன்றவற்றால்தான் வளம் பெறும். தஞ்சையை ஒரே மண் என்று கூறினாலும் அதை உருவாக்கியவர்கள், கொண்டு செலுத்துபவர்கள் முகம் தெரியாத எளிய மனிதர்கள்தான். பயணத்தின் வழியில் அப்படித் தென்பட்ட இருவரைப் பற்றிய பகிர்வுகள்தான் இந்த வாரம்.

எடமேலையூர் ஏரிக்கருகில் சென்றுகொண்டிருந்தபோது அந்தப் பால்காரர் கண்ணில் தென்பட்டார். ஒரு காலத்தில் தபால்காரருக்கு அடுத்தபடியாக கிராமங்களை இணைத்தவர்கள் பால்காரர்கள். காலையில் பல ஊர்களுக்கு இடையில் புகுந்த வந்து ஒவ்வொரு வீடாய்ப் பால் கொடுத்துவிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் பழங்காதையோ புதுக்காதையோ பேசிவிட்டு வெற்று பால் கேனுடன் அவர்கள் திரும்பும்போது வெயில் நன்றாக வீச ஆரம்பித்திருக்கும். சொஸைட்டி பால்காரர்களைப் போல தனியாகப் பால் விற்கும் பால்காரர்களும் அதிகம். எங்கள் வீட்டுக்குப் பால் கொண்டுவரும் பால்காரர் மணியடிக்கும் சத்தம் கேட்டால், “தண்ணிப் பால்” என்று கூவிக்கொண்டே சொம்பு எடுத்துக்கொண்டு ஓடுவேன். அவரும் செல்லக்கோபத்துடன் தலையில் தட்டிவிட்டு பால் ஊற்றுவார். மேலதிகமாக வாயிலும் கொஞ்சம் ஊற்றிவிட்டு, “மாட்டுத் தண்ணிடா படுவா ராஸுகோல்” என்பார். நல்லது கெட்டதுக்கெல்லாம் அந்தப் பால்காரர் முன்னால் வந்து நிற்பார்.

தெருவுக்கொரு தொலைக்காட்சி இருந்தாலே அதிகம் அப்போது. வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டி இருக்கும். நாட்டு நடப்புகள், மாநில நடப்புகள் வானொலி வழியாகவும் செய்தித்தாள்கள் வழியாகவும் வந்துசேர்ந்தாலும் பக்கத்துக் கிராம நிகழ்வுகள், நல்லது கெட்டது போன்றவை பால்காரர் வழியாகவே வந்துசேரும். சமயத்தில், பால்காரர் வரும் வழியில் உள்ள ஊரில் இருக்கும் சித்தியோ அத்தையோ அவரிடம் பலகாரங்கள் கொடுத்து அனுப்புவதும் உண்டு. மாட்டுக்கும் அதன் பாலை அருந்தும் மனிதர்களுக்கும் நடுவே பால் நிறுவனங்களோ பெரும் சந்தைப்படுத்தலோ விளம்பரங்களோ வந்திராத காலத்தில் நமக்குப் பால்காரர் மட்டுமே இருந்தார்.

மாங்கு மாங்கென்று சைக்கிள் மிதித்துக்கொண்டு என் முன்னே போய்க் கொண்டிருந்த பால்காரரைப் பார்த்ததும் ‘பால்’ய நினைவுகள் முந்திக்கொண்டு சைக்கிள் மிதித்தன.

“பால்கார அண்ணே கொஞ்சம் நில்லுங்க” என்று சொன்னதும் வண்டியை நிறுத்தினார்.
என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரைப் பற்றிக் கேட்டேன்.
“என் பேரு சுபாஷ் சந்திர போஸ் தம்பி. என்ன அப்புடிப் பாக்குறீங்க? அப்பா கம்யூனிஸ்ட் கட்சியில இருந்தவரு. மன்னார்குடி நகரச் செயலாளர். அய்யாக்கண்ணுன்னு கேட்டா எல்லாருக்கும் தெரியும். ஹ்ம்ம்... அதெல்லாம் அம்பது அறுவது வருஷத்துக்கு முன்னாடி உள்ள கதை” என்று ஆரம்பித்தார்.

“இருபத்தெட்டு வருஷமா பால் யாவாரம் பண்ணுறேன். ஆரம்பத்துல வசதி வாய்ப்பா அண்ணந்தம்பி எல்லாம் ஒத்துமையா இருந்தோம். அண்ணன் ஆறு பேரை வச்சு வேலை வாங்குனாரு. நானும் பாலு கொண்டுட்டுப் போவேன். இப்பக் குடும்பம் திக்கால திக்காலப் போச்சு. நான் வெளியாளுக்குப் பால் எடுக்குறேன். உள்ளிக்கோட்டையில் ஒருத்தர்கிட்டதான் பால் எடுக்கிறேன். என் வீடு இருக்குறது எடமேலையூர். காலையில இங்கருந்து சைக்கிள மிதிக்க ஆரம்பிச்சன்னா உள்ளிக்கோட்டையில போயி பாலை எடுத்துக்கிட்டு நேரா மன்னார்குடி போய் வித்துட்டு வருவேன். இப்படி காலையில் ஒரு மொறை, சாயங்காலம் ஒரு மொறை” என்றார்.

“மொத்தம் எத்தனை லிட்டர் பால் விப்பீங்க? இதுக்காக தினமும் எத்தனை கிலோ மீட்டர் சைக்கிள் மிதிப்பீங்க?” என்று கேட்டேன்.
“காலை மாலைன்னு மொத்தமா எண்பத்தைஞ்சு தொண்ணூறு லிட்டரு போவும் தம்பி. முழுக்கப் பசும்பாலுதான், எருமை மாடே ஒழிஞ்சிடுச்சு. காலையில போய்ட்டு வர்றது, மதியானத்துக்கு மேலே போய்ட்டு வர்றதுன்னு ஒரு நாளைக்கு அறுபது எழுபது கிலோ மீட்டர் சைக்கிள் மிதிப்பேன் தம்பி” என்றார்.

“எனக்கும் ஆச்சு வயசு 51. ரெண்டு குழந்தைங்க பொறந்தும் தவறிப் போயிடுச்சு. வசதி இல்லாம காப்பாத்த முடியாமப் போச்சு. பொண்டாட்டிய மட்டும் காப்பாத்திட்டேன். புள்ளை இல்லையே ஒழிய நாங்க சந்தோஷமாத்தான் இருக்கோம் தம்பி” என்றார்.
“ஒரு நாள் சம்பளம் எவ்வளவுண்ணே?” என்று கேட்டேன்.

“சைக்கிள எடுத்தன்னா ஒரு நாள் சம்பளம் அறுநூறு ரூபா. நமக்கு இந்தச் சம்பளம் போதும். புள்ளையா குட்டியா? பிரச்சினை இல்லாம ஓடிக்கிட்டு இருக்கு. சபரிமலைக்கு 24 வருஷமா போய்க்கிட்டு இருக்கேன். தீவிர ஐயப்ப பக்தன் நான்.”
“பாக்கெட் பால் வந்ததுனால ஒங்களுக்கு பாதிப்பு உண்டா?” என்று கேட்டேன்.

“பெரிய பாதிப்பு இல்லை தம்பி. 30 வருஷத்துக்கு முன்னாடி ஹோட்டல்காரங்கள்லாம் நம்மகிட்ட ஓடிவந்து வாங்கிக்கிட்டுப் போவாங்க. இப்ப நாம போய் ஊத்துறோம். எந்தக் கலப்படமும் இல்லை. ஏன்னா புள்ளங்கல்லாம் குடிக்கிறாங்க இல்லியா! ஆனா, ஒண்ணு தம்பி எங்கே பாலு கறக்குறாங்க, எத்தனை நாளுக்கு முன்னாடி கறக்குறாங்க, எதைக் கலக்குறாங்கன்னு தெரியாம பாக்கெட் பாக்கெட்டா மக்கள் வாங்கிக் குடிக்கிறாங்க. ஆனா, நாங்க அன்னன்னைக்குக் கறந்த பால, கறந்து கொஞ்ச நேரத்துல மக்கள்கிட்ட போயி சேக்குறோம். இது பெரிய விஷயமில்லையா! நம்ம தொழில்ல இது ஒரு நிம்மதி தம்பி” என்றார்.

“இவ்வளவு தூரம் சைக்கிள் மிதிக்கிறீங்களே… உடம்பு வலிக்குமா?” என்று கேட்டேன்.
“பின்னே? அதான் கொஞ்சம் சரக்கு சாப்பிட்டுக்குவேன். டெய்லி ரெண்டு குவாட்டரு. முன்னைக்கு இப்போ பரவாயில்லை. கருக்கல்லயே குடிச்சிக்கிட்டுருந்த ஆளு நான். அப்படியெல்லாம் இப்ப குடிச்சிக்கிட்டிருந்தா இங்க நின்னு ஒங்களோட பேசிக்கிட்டிருக்கவே மாட்டேன். மேல போயிருப்பேன். ஐயப்பன் கோயிலுக்குப் போயித்தான் கொஞ்சம் கொறைஞ்சிடுச்சு. காசப் பாக்காம கொஞ்சம் ஒஸ்தியான சரக்கத்தான் வாங்கிக் குடிக்கிறது. ஆனா, சரக்கை ஒழிச்சாதான் நல்லது தம்பி. அரசாங்கம் அதைச் செஞ்சே ஆகணும்” என்று சலித்துக்கொண்டார்.

தஞ்சாவூர் சாலையில் வடுவூர் புதுக்கோட்டைக்கு முன்னதாக இருக்கும் குட்டி ஊர் உத்தங்குடி. வீடுகள் சாலையோரத்தில் மட்டும்தான். மற்றபடி சாலையின் இரண்டு பக்கங்களிலும் வயல்கள்தான். அப்படி ஒரு வயலில் அந்த மனிதரைப் பார்த்தேன். எலிக்குக் கிட்டிவைத்துக்கொண்டிருந்தார். கிட்டிகளையும் கிட்டிவைப்பவர்களையும் முன்பெல்லாம் அதிகம் காண முடியும். இப்போது விவசாயமே அருகிவிட்டதால் கிட்டிவைப்பவர்களும் அருகிவிட்டார்கள். சின்ன வயதில் வயலில் கிட்டிவைத்துப் பிடித்துவந்த எலிகளைச் சாப்பிட்ட நினைவுகள் அலைமோதின.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வரப்பில் கால்வைக்கும் முன்பு செருப்பைக் கழற்றிவிட்டு நடந்தேன். பயிர்களுக்கு நடுவே கிட்டியை வைத்துக்கொண்டிருந்தவர் என்னைப் பார்த்ததும் வரப்பில் ஏறினார். அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் தயக்கமில்லாமல் பேச ஆரம்பித்தார்.
“எம் பேரு கண்ணதாசன்ங்க. ஊரு இதே உத்தங்குடிதான். வரப்பு வெட்டுறது, நாத்துப் பறியல், கருதறுப்புன்னு விவசாய வேலைகள் எதையும் மிச்சம் வைக்க மாட்டேன். கூடவே, எலிக்குக் கிட்டியும் வைப்பேன்” என்றார்.

“இந்த வயல்ல எவ்வளவு கிட்டி வச்சிருக்கீங்க... எலிகள் எவ்வளவு மாட்டும்?” என்று கேட்டேன்.
“300 கிட்டி வச்சிருக்கங்க. ஒரு முப்பது நாப்பது எலிங்க மாட்டும். ஒரு எலிக்கு பத்து ரூவாயும் கொடுக்குறதுண்டு, பதினைஞ்சு இருபது ரூபாயும் கொடுக்குறதுண்டு” என்றார்.

“எலி பிடிக்கிறதுல வர்ற வருமானத்தை வச்சிக் குடும்பத்த ஓட்ட முடியுதா?” என்று கேட்டேன்.
“அது சிரமம்தாங்க. அதனால மத்த விவசாய வேலைகளுக்குப் போறதும் உண்டு. ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூவா சம்பளம். எனக்கு ரெண்டு புள்ளைங்க. சம்சாரமும் அப்பப்ப வய வேலைக்குப் போவா. அப்பாவும் எலி புடிச்சாரு. நானும் எலி புடிக்கிறேன். நம்ம புள்ளைங்களாவது ஏதாவது படிச்சுப் பொழைச்சுக்கிடணும்னு பாக்குறேன்” என்றார்.

“புடிக்கிற  எலியைச்  சாப்புடுவீங்களா?” என்று கேட்டேன்.

“உண்டுங்க. வயல் எலியத்தான் சாப்பிடுவாங்க. வீட்டுல இருக்குற எலிக்கு மோட்டெலின்னு பேரு. அத யாரும் சாப்பிட மாட்டாங்க. இடுப்பு வலிக்கு வயலெலிக் கறி நல்லது. டேஸ்ட்டாவும் இருக்கும்” என்றார்.

அவரிடம் சொல்லிவிட்டு, கரைபோலிருந்த சாலை மேட்டில் ஏறி வண்டியைக் கிளப்பினேன். வயலுக்கு நடுவே கிட்டிவைப்பவரைப் பார்த்தால் நடமாடும் சோளக்கொல்லை பொம்மை மாதிரி தெரிந்தது. தஞ்சை மண்ணில் விவசாயம் பொய்த்துப் போனது பலரையும் இப்படி நடமாடும் சோளக்கொல்லை பொம்மைகளாகத்தான் ஆக்கியிருக்கிறது. வயிற்றுப்பாட்டுக்கு எப்படியாவது நடமாடித்தானே ஆக வேண்டும்!

(சுற்றுவோம்...)

x