வீட்டைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார் சாந்தி. ஹாலில் வைத்திருந்த இரண்டு உண்டியல்களில் ஒன்றைக் காணவில்லை. மகனுக்கும் மகளுக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த ஆளுக்கொரு உண்டியல் வாங்கித் தந்திருந்தார் சாந்தி. புத்தகங்களுக்குப் பின்னால் மறைந்திருக்குமா என நினைத்துத் தேடினார். அங்கும் இல்லை. வேறு அறையில் தேடியும் கிடைக்காததால் மகன் சந்தோஷை அழைத்தார். தங்கையின் உண்டியலைக் காணவில்லை என அம்மா சொன்னதும் தனக்குத் தெரியாது என்றான் சந்தோஷ். அம்மாவோடு சேர்ந்து அவனும் தேடினான்.
விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்த ஸ்வேதா, தன் உண்டியல் தொலைந்துவிட்டது எனத் தெரிந்த்தும் அழுதாள். மூவரும் சேர்ந்து வீடு முழுக்கத் தேடியும் உண்டியல் கிடைக்கவில்லை. இரவு அப்பா வந்ததும் கேட்டுக்கொள்ளலாம் என விட்டுவிட்டனர். கணவரும் தெரியாது என்று சொல்லிவிட, சாந்திக்குக் குழப்பமாக இருந்தது. வீட்டுக்குள் இருந்த உண்டியல் எப்படித் தொலைந்திருக்கும் என யோசித்தபடியே மீண்டும் தேடினார்.
பிறந்தநாள் பரிசு
சந்தோஷின் விளையாட்டுப் பொருட்களை எடுத்து அடுக்கிவைத்திருந்தவர் அங்கே புதிதாக இருந்த ‘ஹாட் க்ளூ கன்’னைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டார். அதை வாங்கித்தரச்சொல்லி மகன் ஒரு மாதத்துக்கும் மேலாக அடம்பிடித்துக் கொண்டிருந்தான். விலை ஆயிரத்துக்கும் மேல் என்பதால் சாந்தி மறுத்திருந்தார். நாம் வாங்கித்தராதபோது மகனிடம் எப்படி இது வந்திருக்கும் என யோசித்தார். மகனை அழைத்துக் கேட்டார். “போன வாரம் என் பிறந்தநாளுக்கு 200 ரூபாய் கொடுத்தீங்கல்லம்மா. அதை நான் உண்டியலில் போடலை. என் ஃப்ரெண்டும் கொஞ்சம் காசு தந்தான். அதையும் சேர்த்துத்தான் இதை வாங்கினேன். அப்பவே உங்ககிட்டே சொன்னேனேமா” என்றான் சந்தோஷ்.
சாந்திக்குக் குழப்பமாக இருந்தது. அன்று சமைத்தபடியே தோழியிடம் போனில் பேசிக்கொண்டிருந்தபோது கையில் ஏதோவொரு அட்டைப் பெட்டியை வைத்தபடி மகன் தன்னிடம் பேசியது நினைவுக்கு வந்தது. ஒருவேளை இதைத்தான் சொல்லியிருப்பானா; நாம்தான் அதை மறந்திருப்போமா என நினைத்தார். அம்மா சந்தேகமாகப் பார்ப்பதை உணர்ந்த சந்தோஷ், “அம்மா அன்னைக்குக்கூட ஸ்வேதாவுக்குக் கொடுத்திருந்த புராஜெக்ட் வேலையை இதை வச்சிதானேம்மா ஒட்டித்தந்தேன். நீங்ககூட பார்த்தீங்களே” என்று சொன்னான்.
சாந்திக்கு இப்போது நினைவுக்கு வந்துவிட்டது. ஆனால், இதன் விலை ஆயிரத்துக்கும் மேல் இருக்குமே எனத் தோன்றவும் மீதிப் பணத்தை எப்படி சந்தோஷின் நண்பனால் தந்திருக்க முடியும்; அவனும் இவனைப்போல் எட்டாம் வகுப்புதானே படிக்கிறான் என நினைத்தார். அதை மகனிடம் கேட்டபோது, “அம்மா விபின் வீட்ல அவன் ரொம்ப செல்லம். எவ்ளோ கேட்டாலும் குடுத்துருவாங்கம்மா. என் பர்த்டேவுக்கு கிஃப்ட் வாங்கணும்னு சொல்லி அவங்க வீட்ல இருந்து 200 ரூபாய் வாங்கியிருக்கான். ‘ஹாட் க்ளூ கன்’னை இப்ப டிஸ்கவுன்ட்ல போட்டிருக்காங்க. அதனால நாங்க ரெண்டு பேரும் சேர்ந்துபோய் இதை வாங்கிட்டோம்” எனப் பெருமையாகச் சொன்னான். ``இனிமே, நண்பர்களிடம் இருந்து பணமோ பொருளோ வாங்கக் கூடாது; அது தவறு” என மகனிடம் சொன்னார் சாந்தி.
அம்பலமான பொய்
தன்னுடைய உண்டியலைக் காணவில்லை என்றதும் ஸ்வேதா அழுதாள். அப்பாவிடமும் முறையிட்டாள். தேடி கண்டுபிடித்துத் தருவதாகச் சொன்ன பிறகே உறங்கச் சென்றாள். இரண்டு நாட்கள் கழித்து சந்தோஷுக்கு டென்னிஸ் வகுப்பு இருந்ததால் அவனை அழைத்து வருவதற்காகப் பள்ளிக்குச் சென்றார் சாந்தி. அங்கே விபினைப் பார்த்ததும் அழைத்தார். மகனுக்கு அவன் வாங்கித்தந்த பிறந்தநாள் பரிசுக்கு நன்றி சொன்னார். இதுபோல் பணத்தைச் செலவழித்துப் பிறந்தநாள் பரிசு வாங்கித்தருவது சரியல்ல என்றும் சொன்னார். விபினுக்கு எதுவுமே புரியவில்லை. “என்ன சொல்றீங்க ஆன்ட்டி? நான் சந்தோஷுக்கு எதுவுமே வாங்கித்தரலையே. நானே செய்த பர்த்டே கார்டை மட்டும்தானே தந்தேன்” என்றான். மகன் தன்னிடம் எதையும் மறைக்க மாட்டான், பொய்யும் சொல்ல மாட்டான் என நினைத்திருந்த சாந்திக்கு விபினின் பதில் அதிர்ச்சியைத் தந்தது. விபினிடம் ஏதோ சொல்லி சமாளித்து அனுப்பி வைத்தார்.
வெளிப்பட்ட உண்மை
பயிற்சி முடித்துவிட்டு வந்த மகனிடம் எதுவும் பேசவில்லை. மகன் அவனுடைய வழக்கமான வேலைகளை முடிக்கும்வரை காத்திருந்தவர் அவனுடைய விளையாட்டுப் பொருளை எடுத்துவரும்படி சொன்னார். “என்னம்மா கிச்சன்ல எதையாவது ஒட்டணுமா. கப் ஏதாவது உடைஞ்சிருச்சா?” என்று கேட்டபடியே வந்த மகனைப் பொறுமையாகப் பார்த்தார். அவன் முகத்தில் பயமோ சலனமோ இல்லை. தவறு செய்ததற்கான குற்றவுணர்வு அதில் துளியும் இல்லை. அவனிடம் இருந்து அந்தப் பொருளை வாங்கியவர், அதன் அட்டைப்பெட்டி எங்கே என்றார். ஸ்வேதா ஓடிச்சென்று அதை எடுத்துவந்தாள். மகளை அனுப்பிவிட்டு அதில் விலையைப் பார்த்தார். 1500 ரூபாய் என அச்சிடப்பட்டிருந்தது. “அதுல அப்படித்தான்மா போட்டிருப்பாங்க. ஆஃபர் விலையை பிரின்ட் பண்ண மாட்டாங்க” என்றான் சந்தோஷ். “எனக்கு எல்லாமே தெரியும் சந்தோஷ். நீயா உண்மையச் சொல்லிடு. சாயந்திரம் ஸ்கூலுக்கு வந்திருந்தப்ப விபினைப் பார்த்தேன்” என்று அம்மா சொன்னதும் சந்தோஷின் முகத்தில் கலக்கம் படர்ந்தது. “விபின் மறந்துவிட்டிருப்பான், தான் எதையும் மறைக்கவில்லை” என்று திரும்ப திரும்பச் சொன்னான் சந்தோஷ். “அம்மா எவ்வளவோ நல்லப் பழக்கத்தைச் சொல்லித்தந்தும் நீ நிறைய பொய் சொல்றே சந்தோஷ். இப்ப செய்யற சின்னச் சின்ன தப்புதான் நாளைக்குப் பெரிய தப்புல கொண்டுபோய் விட்டுடும். எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லு, அப்போதான் அதைச் சரிசெய்ய முடியும்” என்று சாந்தி சொன்னார்.
திட்டமிட்ட திருட்டு
அம்மாவின் பொறுமை சந்தோஷைப் பேசவைத்தது. “ரொம்பநாளா இதைக் கேட்டுக்கிட்டு இருந்தேன்மா. நீங்கதான் வாங்கித்தரவே இல்லை. ரொம்ப ஆசையா இருந்துச்சு. அதான் நானே வாங்கிக்கிட்டேன்” என்று அழுதபடியே சொன்னான். “எங்கிருந்து பணம் வந்தது?” எனக் கேட்டார் சாந்தி. “நீங்க கொடுத்த பணம் கொஞ்சம் இருந்தது. மீதிப் பணத்தைத் தங்கச்சியோட உண்டியல்ல இருந்து எடுத்துக்கிட்டேன்” என்று சொல்லிவிட்டு அழுதான். உடைக்க முடியாது உயர் ரக உண்டியல் அது. எப்படிப் பணத்தை எடுத்திருப்பான் என சாந்திக்குப் புரியவில்லை. “உண்டியலை உடைச்சுப் பார்த்தேன் முடியல. கட்டரால அறுத்துப் பணத்தை எடுத்தேன். ஸ்வேதா விளையாடப் போயிருந்தா. அப்புறம் அந்த உண்டியலைக் குப்பையில போட்டுட்டேன்” என்றான். மகன் விவரிக்க விவரிக்க சாந்திக்கு அதிர்ச்சியாக இருந்தது. நம் கைகளுக்குள் இருந்த மகனா இப்படித் திட்டமிட்டுத் திருடியிருக்கிறான்; அதை நேர்த்தியாக நம்மிடமே மறைத்திருக்கிறான் என யோசிக்க யோசிக்க அழுகையும் கோபமுமாக வந்தது. தான் உண்டியலைத் தேடவில்லை என்றால் மகனின் இந்தத் தவறு கண்ணுக்கே தெரியாமல் போயிருக்குமோ எனப் பயந்தார்.
திருந்திய மகன்
இந்தச் சூழலில் வேறெதைவிடவும் பொறுமை அவசியம் என்பதை உணர்ந்தார் சாந்தி. மகனிடம் அழுகையை நிறுத்தும்
படிச் சொன்னார். தவறு செய்துவிட்டு அதற்காக வருந்தும் மகன் நிச்சயம் அடுத்தடுத்து தவறு செய்யத் தயங்குவான் என்பதை உணர்ந்தார். “சந்தோஷ், நீ பெரியவனாகிட்ட. பாப்பா எல்லா நல்லதையும் கெட்டதையும் உன்னைப் பார்த்து தான் கத்துக்குவா. திருடுறது தப்புன்னு உனக்கே தெரியும். ஒரு தப்புதான் அடுத்தடுத்த தப்புக்கு வழிகாட்டும். நீயும் அப்படித்தான் செய்திருக்கே. ஒரு பொய்யை மறைக்க அடுத்தடுத்து நிறைய பொய் சொல்லியிருக்க. அம்மாவும் அப்பாவும் ஒரு பொருளை வாங்கித்தராம மறுத்தா அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும்னு உனக்குத் தெரியும்தானே” என்று சாந்தி சொல்ல, “இல்லம்மா எனக்கு இது வேணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். அதான் தெரியாம செஞ்சிட்டேன் சாரிம்மா” என்று அழுதான் சந்தோஷ். அப்பாவிடமும் தங்கையிடமும் சொல்ல வேண்டாம் என்று அழுதான்.
“நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். ஆனா, நீ அடுத்தவங்களை ஏமாத்தறதா நினைச்சு செய்யற எல்லாமே உன்னை நீயே ஏமாத்திக்கறதாதான் அர்த்தம். அது உன்னோட படிப்பையும் எதிர்காலத்தையும் வீணாக்கிடும்” என்று சொல்லும்போதே சாந்திக்கும் அழுகை வந்துவிட்டது. அதைப் பார்த்ததும் சந்தோஷ் பதறிவிட்டான். “அம்மா ப்ளீஸ்... அழாதீங்கம்மா. இனி நான் எந்தத் தப்பும் பண்ணமாட்டேன்மா” என்று அம்மாவின் கைகளைப் பற்றியபடி சொன்னான் சந்தோஷ். அம்மாவிடம் தான் சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினான் சந்தோஷ். தான் செய்ததை நினைக்கும்போது அவனுக்குக் குற்றவுணர்வு ஏற்பட்டது. அதுவே அவனை அடுத்தடுத்து தவறு செய்ய விடாமல் தடுத்தது.
திருடுகிறார்களா குழந்தைகள்?
கீர்த்தி ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறாள். பேனாவை எடுப்பதற்காக அவளது ஸ்கூல் பையைத் திறந்தார் அவளுடைய அப்பா. புத்தகத்தின் முனை மடங்கும்படி வைத்திருக்கிறாளே என நினைத்து அதைச் சரிசெய்ய எடுத்தார். புத்தகத்திலிருந்து ரூபாய் நோட்டுகள் கீழே விழுந்தன. புத்தகத்தில் ஆங்காங்கே இடைவெளிவிட்டு 10, 20, 50 என ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தாள். மகளிடம் எப்படி இவ்வளவு பணம் வந்திருக்கும், இந்தப் பணத்தை அவள் என்ன செய்வாள் என யோசித்தார். காய்கறி வாங்க வைத்திருந்த பணத்தில் அவ்வப்போது 100, 200 எனக் குறைவதாக மனைவி சொன்னது அவருக்கு நினைவு வந்தது. கீர்த்தி பணத்தைத் திருடுகிறாளா?
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மகன் விக்னேஷுக்குச் சூடாக டீ எடுத்துச் சென்றார் அம்மா. அவனது அறையில் கவிழ்த்துவைக்கப்பட்ட புத்தகம் மட்டுமே இருந்தது. எங்கே சென்றிருப்பான் என யோசித்தவர் படுக்கையறையில் சத்தம் கேட்பதுபோல் இருந்ததும் அங்கே சென்றார். கணவரின் பர்ஸைத் திறந்து மகன் பணம் எடுப்பதைப் பார்த்து அதிர்ந்தார். விக்னேஷ் ஏன் திருடுகிறான். பெற்றோரிடம் மறைக்கும் அளவுக்கு அந்தப் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறான்?
(நிஜம் அறிவோம்...)