விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 25: மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா


என்.சுவாமிநாதன்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் ஐ.நா சபையில் உரையாற்றிய பெருமைக்குரியவருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாவை விஜபி விருந்து பக்கத்துக்காக அழைத்தேன். “சாப்பாடா...” என்று இழுவையுடன் தனது டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தவர், மண் மணம் கமழ பேச ஆரம்பித்தார்.

“தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி என்னோட பூர்வீகம். என்னோட உணவு கலாச்சாரமும் அங்க இருந்தே ஆரம்பிக்குது. எங்க ஊரு 
பக்கம் ‘ஸஹன்’ சாப்பாடு மறக்கவே முடியாது. தரையில உட்கார்ந்து ஒரே பீங்கான் தட்டுல நாலுபேரு ஒண்ணா சாப்பிடுவாங்க. திருமண வீடு, விசேஷ காலங்கள்ல இதைப் பார்க்கலாம். இதுக்கு தொட்டுக்க கத்திரிக்காய் பருப்பு, ஸ்வீட் பச்சடியும் கொடுப்பாங்க. இப்போ பீங்கானுக்கு பதிலா அது ‘தாளம்’ (பெரியதட்டு) ஆக மாறிடுச்சு. இப்படி எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுறது ஏற்றத்தாழ்வு அற்ற சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உணர்த்தும்.

உடன்குடி பக்கம் பதநீரைக் காய்ச்சி ‘காவா’ன்னு ஒண்ணு செய்வாங்க. அதையும் விரும்பிச் சாப்பிடுவேன். குழல் மிட்டாய், ஒட்டுமாவுன்னு எங்க ஊரோட பாரம்பரிய அடையாளமா சில உணவுகள் இருக்கு. எங்க ஊருல நான் அதிகமா ஹோட்டல்ல சாப்பிட்டது இல்ல. பெரும்பாலும் சென்னையில் இருப்பதால் என்னோட விருப்ப உணவகமும் சென்னையில்தான்!

 சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் ‘யெல்லோ பேஜஸ்’ பக்கமா இருக்கிற ‘க்ரில் பாக்ஸ் (grill box)’ உணவகம்தான் என்னோட ஃபேவரைட். அவங்களுக்கு ராகவைய்யா நகர்ல இன்னொரு கிளையும் இருக்கு.

இந்த ஹோட்டல்ல எனக்குப் பிடிச்சதே சாப்பாட்டுக்கு முன்னாடி அவங்க கொடுக்கிற ஸ்டாட்டர்தான். நாம உட்கார்ந்திருக்கும் டேபிளுக்கு நடுவிலேயே இளஞ்சூட்டில் ஸ்டாட்டருக்கான தயாரிப்புகள் நடக்கும். அதில் நீளமான இரும்புக் குச்சியில் சிக்கன், மட்டன்னு க்ரில் ஆகும். இங்க நாமளே எடுத்துச் சாப்பிடும் செல்ஃப் சர்வீஸ் முறையில்தான் சாப்பிடணும். அதனால் அன்லிமிடெட்தான். அசைவம் மட்டுமில்லாம சைவ ஐட்டங்களையும் ஒருகை பார்க்கலாம். போதும் போதும்ன்னு சொல்லுற அளவுக்கு ஐட்டங்களைப் பரப்பி வெச்சிருப்பாங்க. தீரத்தீர வந்துட்டேவும் இருக்கும். பெரிபெரி மீன், மட்டன் சி கபாப், கராச்சி கிரில் சிக்கன் இது மூணும்தான் அங்க எனக்குப் பிடிச்ச ஐட்டங்கள். இதையெல்லாம் எப்படி தயாரிக்கிறாங்கன்னு அவங்கட்டயே கேட்டுப்பாருங்க” என்றார் ஜவாஹிருல்லா.

க்ரில் பாக்ஸ் உணவகத்தில் உள்ளே சென்று அமர்ந்ததுமே முதலில் நன்னாரி சர்பத் கொடுக்கிறார்கள். பெரிபெரி மீன், கராச்சி க்ரில் சிக்கன், ப்ரான், தந்தூரி சிக்கன், மட்டன் சி கபாப், சிக்கன் விங்ஸ் ஆகியவை ஸ்டாட்டராக வழங்கப்படுகிறது. மதியமும் இரவும் இந்த உணவகம் இயங்குகிறது. மதியம் 12 மணி முதல் 2 மணி வரை, 2.30 மணி முதல் 4 மணி வரை என இரண்டு செக்‌ஷனாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இரவு டின்னரும் 7 மணி முதல் 9 மணி வரை, 9.30 மணி முதல் 11 என இரண்டு செக்‌ஷனாக நடக்கிறது. அநேகம் பேர் ரெகுலர் வாடிக்கையாளர்கள் என்பதால் முன்
கூட்டியே தங்கள் வருகையைத் தெரிவித்து இருக்கையை உறுதிசெய்து கொள்கின்றனர்.

ஸ்டாட்டருக்குப் பிறகு, மட்டன் பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் என 6 வகையான அசைவ உணவுகளோடு மிளகு சூப், சிக்கன் சூப், சிக்கன் சாலெட், சாதம், ரசம், நாண் தருகிறார்கள். இதுபோக பத்துவகையான சைவ உணவுகள், தோசை கவுன்டரில் செட்டிநாடு மீன் பெப்பர் தோசை, சில்லிசிக்கன் தோசை, பெப்பர் சிக்கன் தோசை, கடல் உணவு பெப்பர் தோசை, சிக்கன் கீமா தோசை, இருவகையான மோமோஸ், பத்துவிதமான கேக் வகைகள், ரசமலாய், குலோப் ஜாமூன், ஃப்ரூட் சாலட்கள் இத்தனையையும் ருசிக்கலாம். இதுதவிர, பிரத்யேகமாக ஐஸ்கிரீம், பஞ்சுமிட்டாய், பாப்கார்ன் கவுன்டர்களும் உண்டு. இத்தனைக்கும் சேர்த்தே (திங்கள் - சனி) மதியச்சாப்பாடு 580 ரூபாய், இரவு டிபன் 650 ரூபாய். ஞாயிறு மட்டும் இரண்டு வேளைக்கும் 699 ரூபாய்.

ஜவாஹிருல்லா விரும்பிச் சாப்பிடும் மூன்று ஐட்டங்களின் ரெசிபிகளை உணவகத்தின் உரிமையாளர் அகமது மீரானிடம் கேட்டேன். பக்குவமாய் எடுத்துவைத்தார்.

பெரிபெரி மீன்: வறுவலுக்குத் தகுந்த மீன்களை வாங்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கணும். அதோடு மிளகாய் தூள், இஞ்சிப்பூண்டு பேஸ்ட், எழுமிச்சைச்சாறு கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கணும். பிறகு, அதனுடன் பெரிபெரி பவுடர் (ஆப்பிரிக்காவில் விளையும் பெரிபெரி எனும் ஒருவகை மிளகாயிலிருந்து இந்தப் பவுடர் தயாரிக்கப்படுகிறது), மிளகாய்த்தூள் (மீண்டும்) தயிர், உப்பு, கரம்மசாலா, எண்ணெய் சேர்த்து மறுபடியும் ஊறவைக்கணும். இதை இரும்புக் குச்சியில் குத்தி நெருப்பில் க்ரில் செய்யணும். இது ஓரளவு க்ரில் ஆனதும் வாடிக்கையாளரின் டேபிளில் வைத்து மீண்டும் க்ரில் செய்யும்போது சூடான சுவையான பெரிபெரி மீன் தயாராகிவிடும்.

கராச்சி க்ரில் சிக்கன்: சுத்தம் செய்யப்பட்ட சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சிப்பூண்டு கலவை, உப்பு, எழுமிச்சைச்சாறு கலந்து அரைமணிநேரம் ஊறவைக்கணும். அது ஊறிய பின்பு மிளகாய்த்தூள், அரைகுறையாய் அரைத்த காய்ந்த மிளகாய், சீரகப்பொடி, கரம்மசாலா, வெண்ணெய், தயிர், உப்பு, மிளகுப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து மறுபடியும் ஊறவைக்கணும். நன்கு ஊறியதும் அதை அப்படியே க்ரில் செய்தால் சுவையான கராச்சி க்ரில் சிக்கன் ரெடி.

மட்டன் சி கபாப்: முதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கணும். எலும்பு இல்லாத மட்டனை நன்றாகக் கழுவி தண்ணீரை வடிகட்டி வெச்சுக்கணும். ஒரு பாத்திரத்தில் வெங்காயம், இஞ்சிப்பூண்டு பேஸ்ட், வெண்ணெய், பப்பாளிக்காய் பேஸ்ட், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து அத்துடன் மட்டனையும் சேர்த்து பிசைஞ்சு வெச்சுக்கணும். இந்தக் கலவை நன்றாக ஊறிய பிறகு அதை மிக்ஸியில் போட்டு ஒருசுற்று அடிக்கணும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து பொரியலுக்குப் போதுமான அளவுக்கு எண்ணெய் ஊற்றணும். எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும் மட்டன் கலவையை நீளவாக்கில் உருட்டி உருட்டி எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மட்டன் கபாப் ரெடி.

படங்கள்: பு.க.பிரவீன்

x