அதுவொரு அழகிய பொற்காலம்


திரைபாரதி

தனக்குப் பிடித்தமான நடிகர், நடிகையரின் பெயர் திரையில் ஒளிரும்போது, கைத்தட்டி விசிலடித்துப் பாராட்டுவதே சாமானியன் ரசிக மனம். 60-களில் ஒரு இயக்குநருக்கும் அந்தப் பாராட்டு கிடைத்தது. அத்தகைய பெருமைக்குரிய நட்சத்திர இயக்குநர் ஏ.பீம்சிங். ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க – ஏ.பீம்சிங் டைரக்‌ஷனில்’ என்ற கொட்டை எழுத்துகளுடன் அன்றைய செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியானால் போதும், அடுத்த சில நாட்களில் அந்தப் படத்தின் வியாபாரம் அனைத்து விநியோகப் பகுதிகளுக்கும் விற்றுத் தீர்ந்துவிடும். இந்த அதிசயத்தை சிவாஜி – பீம்சிங் கூட்டணி தொடர்ந்து நிகழ்த்தி வந்தது. விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையும் கண்ணதாசனின் வரிகளும் இந்தக் கூட்டணிக்கு காவிய வெற்றிகளைப் பெற்றுத் தருவதில் பெரும் பங்காற்றின. அதேபோல, ஆரூர்தாஸ் வசனமும் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் வில்லன் வேடங்களும் இக்கூட்டணியின் இன்னொரு ட்ரேட் மார்க்.

குடும்ப உறவுகளை மையப்படுத்தும் உணர்ச்சிக் கொந்தளிப்பு மிக்க கதைகளை, பிரபலமான நடிகர்களை வைத்து இயக்கி தொடர் வெற்றிகளைக் கொடுத்தார் பீம்சிங். குடும்பம் இல்லாத பீம்சிங்கின் படங்களே இல்லை. காட்சிகளில் நிறைந்திருக்கும் உணர்ச்சிப் போராட்டம், பாடல்களிலும் இடம்பெற்றுவிடுவது அவரது படங்களின் தனித்த அம்சம். 60-களின் சமூக வாழ்க்கையில் மதிப்பளிக்கப்பட்ட மதிப்பீடுகள் அனைத்தையும் கட்டிக்காக்கும் அரணாகவே இவரது படங்கள் இருந்தன. கவர்ச்சி நடனங்களும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களுக்குப் போதையூட்டத் தொடங்கிவிட்ட அந்தக் காலத்தில் அவற்றை அடியோடு தவிர்த்துப் படமெடுத்த வகையில் பீம்சிங்கின் தர நிர்ணயத்தைத் தெரிந்துகொள்ளமுடியும்.

பத்திரிகை, எடிட்டிங், இயக்கம்

x