சமத்துவப் பொங்கல்... ஜல்லிக்கட்டு... பேட்ட!- இது மும்பைத் தமிழர்களின் கொண்டாட்டம்


எம்.சோபியா

தமிழர்கள் வாழும் இடமெல்லாம், தமிழர் திருநாள் களைகட்டும் நேரமிது. 25 லட்சம் தமிழர்கள் வாழும் மாநகரம் மும்பை மட்டும் விதிவிலக்கா?

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எல்லாம் செங்கரும்பு, பொங்கல் பானை, பனங்கிழங்கு, வெள்ளைக் கத்தரி, சிறுகிழங்கு உள்ளிட்ட நம்மூர் காய்கறிகள், கோலப்பொடி என்று விற்பனை களை கட்டியிருக்கிறது. இந்தாண்டு பொங்கல் விழாவை எப்படியெல்லாம் கொண்டாடப் போகிறோம் என்ற முன்னறிவிப்புகள் அங்குள்ள 20 தமிழ்ச் சங்கங்கள் மற்றும் 126 அமைப்புகளின் அறிவிப்புப் பலகைகளை அலங்கரிக்கின்றன.

“சொந்த ஊரில் வாழ முடியாதவர்களுக்கு எப்படி ஊர்ப்பாசம் அதிகமிருக்குமோ, அப்படி தமிழ்நாட்டைவிட்டு வெளியேவந்து விட்டவர்களுக்குத்  தமிழ் மண்ணின் மீது  ஈர்ப்பும், பாசமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதன் வெளிப்பாடுதான் மும்பையின் பொங்கல் கொண்டாட்டங்கள். தமிழக நகரங்களில் பொதுவாக வீட்டுக்குள்ளேயேதான் பொங்கல் கொண்டாடுவார்கள். ஆனால், மும்பை தாராவியில் தமிழர்கள் தங்கள் அடையாளத்தைப் பெருமிதத்தோடு  வெளிக்காட்டிக் கொள்வதற்காக வீதியில் கூடி பொங்கல் வைக்கிறார்கள். தாராவியின் மையமான 90 அடி சாலையில், காமராஜர்இளநிலை கல்லூரியில் தொடங்கி காவல்நிலையம் வரையில் சுமார் ஆயிரம் பேர் பொங்கல் வைப்பார்கள். சாதி, மத வேறுபாடுகள் எதுவும் இல்லாமல் தமிழர்கள் ஒன்றுகூடி பொங்கல் வைப்பதைப் பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கும். அன்றைய தினம் அந்தச் சாலையில் போலீஸாரே போக்குவரத்தைத் தடை செய்துவிடுவார்கள்” என்று பெருமிதத்துடன் சொல்கிறார் மும்பையில் வசிக்கும் அம்பாசமுத்திரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மான்விழி.

x