மதுரைன்னா ஜல்லிக்கட்டு... கோவைன்னா ரேக்ளா ரேஸ்!


மூன்று பேர் வண்டியில் இருக்க... முன்னால் இருப்பவர்வாலை முறுக்கிறார். அவர் முதுகை ஒட்டியிருப்பவர் சாட்டையை வீளாசுகிறார். அவருக்கும் மேலாக நிற்பவர் அந்தக் காடே ஒலிக்கிற மாதிரி சப்தமெழுப்புகிறார். கால் குளம்புகளில் பொறி பறக்க ரேக்ளா வண்டியில் கட்டப்பட்ட காளைகள் இரண்டும் புழுதி கிளப்பி புயல் வேகத்தில் சீறிப் பாய்கின்றன. இருமருங்கிலும் நிற்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் இலக்கை நோக்கி சீறிப் பாய்கிற ரேக்ளா வண்டியை நோக்கி உற்சாகக் குரலெழுப்பி, கைத்தட்டி உற்சாகப்படுத்துகிறார்கள்.

டைம் மெஷினில் பின்நோக்கிப் பயணித்து, ஜெய்சங்கர், விஜயகாந்த் காலத்து சினிமா ஷூட்டிங் பார்க்கிற மாதிரி இருக்கிறது சூழல். சீறிப் பாய்ந்து வருகிற காளைகள் பக்கத்தில் வந்ததும், பயந்து ஒதுங்குகிறார்கள் பார்வையாளர்கள். 

‘அந்த வேகத்தில் பாய்ந்தால் என்னாவது?’ என்ற அச்சம்தான். அதையும் மீறி, “ஏய் வழியை விடுங்கய்யா. குறுக்கே போகாதீங்க...” என்று எச்சரித்தபடியே இருக்கிறது ஒலிப்பெருக்கியில் வழிகிற குரல்.

 “ஜமீன் ஊத்துக்குளி சின்னச்சாமி காளை அய்யனார் 19. 20 செகண்ட்” என அறிவிக்கப்படுகிறது.

x