தங்கம் பெற்றெடுத்த தீக்குச்சியே!


தம்பி

பட்டுக்கோட்டை பிரபாகர் ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ என்றொரு நாவல் எழுதியிருக்கிறார். அதில் வரும் கதாநாயகனின் முழங்கை முட்டி கூழாங்கல்லில் இடித்துக்கொள்ள மின்சாரம் பாய்ந்ததுபோல் ஒரு அதிர்ச்சி பரவுகிறது. ஆனால், அந்தக் கதாநாயகனுக்கோ அது ஆர்க்கிமிடிஸின் ‘யுரேகா’ தருணம் போன்று ஆகிவிடுகிறது. ஆம்! கல்லிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் (!?) என்று அந்தச் சிறு விபத்திலிருந்து அவன் கண்டுபிடிக்கிறான். இப்படிப் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்தது போன்ற கண்டுபிடிப்புகள் அறிவியல் உலகிலும் ஏராளம். அதில் ‘பாஸ்பரஸ்’ என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்ட கதை ‘நறுமணம்’ மிக்கது!

அறிவியலாளர்கள், சித்தர்கள், யோகிகள், பணக்காரர்கள், பணக்காரராக ஆக நினைத்தவர்கள் என்று பலரின் தேடுதல் வேட்டைக்கும் இலக்கு ‘Philosopher’s stone’ என்று அழைக்கப்பட்ட ‘இரசேந்திரம்’ என்ற கல்தான். இதற்குப் பழந்தமிழில் ‘பரிசவேதி’, ‘தெய்வமணி’ என்றெல்லாம் பெயர்களுண்டு. இரசேந்திரம் என்பது உலோகங்களைத் தங்கமாக மாற்றக்கூடியது என்று அக்காலத்தில் பலரும் நம்பினார்கள். நியூட்டன் போன்ற மகத்தான அறிவியலாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உலோகங்களைத் தங்கமாக மாற்றும் வேதிச்செயல்பாடுதான் ரசவாதம் (Alchemy). ரசவாதத்துக்காகச் சொத்துப்பத்துகளை இழந்தவர்கள், உயிரை இழந்தவர்கள் உலகெங்கும் ஏராளம். சித்துவிளையாட்டுகள் தொடர்புடைய துறை என்றாலும் வேதியியலின் வளர்ச்சிக்கு ரசவாதத்தின் பங்களிப்பு அளப்பரியது.

அப்படி ரசவாதத்தில் ஈடுபாடு கொண்டவர்தான் ஹென்னிக் பிராண்ட் (17-ம் நூற்றாண்டு). ஜெர்மனைச் சேர்ந்த ஹென்னிக் இரண்டு முறை திருமணம் செய்தவர். முதல் திருமணத்தால் கிடைத்த செல்வம் அவரை வேறு எந்தக் கவலையும் இல்லாமல் ரசவாதத்தில் கவனம் செலுத்த அனுமதித்தது. வீட்டின்அடித்தளத்தில் ஒரு ஆய்வகத்தைக் கட்டிக்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டார். மற்றவர்கள் தங்கத்தை எங்கெங்கோ தேடிக்கொண்டிருக்க, அவர்களைப் பார்த்து ஹென்னிக் ‘இருக்கும்’ இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே என்ற ரீதியில் மனதுக்குள் சிரித்துக்கொள்வது வழக்கம். ஆம், அவருக்குத் தங்கம் தரிசனம் தந்தது சிறுநீரில்! (‘இருக்கும்’ என்ற சொல்லுக்கு ஒற்றை மேற்கோள் ஏன் என்று இப்போது புரிகிறதா?) தங்கத்துக்கும் சிறுநீருக்கும் பொதுவான குணம் என்னவென்று கேட்டால் எல்லோருமே சட்டென்று சொல்லிவிடுவோ
மல்லவா ‘மஞ்சள் நிறம்’ என்று. அதுதான் ஹென்னிக் ஆய்வின் தொடக்கப் புள்ளி! ‘ஒன்றுக்கு’ இரண்டு முறை யோசித்துவிட்டு சிறுநீர் வேட்டையில் இறங்கினார் ஹென்னிக். அவரைப் பார்த்தாலே சுவரின் மேல் ஜெர்மானிய வரைபடத்தை வரைந்து கொண்டிருந்தவர்களெல்லாம் ‘ஜிப்’பைப் போடாமலேயே ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள். அவர் சிறுநீர் வேட்டை நிகழ்த்துவது தங்கத்துக்காக என்பது யாருக்கும் தெரியாது, ஏதோ பைத்தியக்காரத்தனமான ஆய்வுக்காக அவர் இப்படிச் செய்கிறார் என்றுதான் நினைத்தார்கள். அப்படியும் 50 வாளி நிறைய சிறுநீர் சேகரித்துவிட்டார்.

x