பேசும் படம் - 4: மகிழ்ச்சியில் ஒரு முத்தம்!


அமைதி மிகவும் சுகமானது. அதிலும் நீண்ட போர்க்காலத்துக்குப் பிறகு, இனி துப்பாக்கிகளின் சத்தமோ, குண்டுகளின் முழக்கமோ கேட்காது, உயிரிழப்புகள் பற்றிய செய்திகள் வராது என்ற நிலை வரும்போது ஏற்படும் அமைதியையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. அப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் படத்தைத்தான் இங்கே நீங்கள் பார்க்கிறீர்கள்.

உலக மக்களை நீண்ட நாட்களாக வருத்திக் கொண்டிருந்த இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடற்படை வீரர் ஒருவர் உற்சாக மிகுதியில் தனது அருகில் இருந்த ஒரு நர்ஸுக்கு முத்தம் கொடுத்த படம்தான் இது.

1939-ல் தொடங்கி 1945-ம் ஆண்டுவரை நீடித்த இரண்டாம் உலகப் போர், சர்வதேச அளவில் மக்களை கடுமையாக பாதித்தது. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒரு பக்கம் உயிர்கள் கொத்துக் கொத்தாக பலியாக, மறுபக்கம் உணவு இல்லாமலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் மக்கள் தினந்தோறும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் 1945-ம் ஆண்டு, நேச நாடுகளிடம் சரணடைவதாக ஜப்பான் அறிவித்ததைத் தொடர்ந்து இப்போர் முடிவுக்கு வந்தது.

உலகெங்கிலும் உள்ள மக்கள் இதை ஒரு மிகப்பெரிய பண்டிகைபோல் கொண்டாடினார்கள். 1945-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் ஸ்குயர் பகுதியில், மக்களின் கொண்டாட்டங்களைப் புகழ்பெற்ற புகைப்படக்காரரான ஆல்பிரட் ஈசண்டேட்,  படமெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரால் எடுக்கப்பட்ட இந்தப் படம், புகழ்பெற்ற ‘லைஃப்’ பத்திரிகையில் வெளியானது. அன்றிலிருந்து இன்றுவரை இரண்டாம் உலகப் போர் என்றதும் நினைவுக்கு வரும் முக்கியப் படங்களில் ஒன்றாக இப்படம் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

இதைப்பற்றி கூறியுள்ள ஆல்பிரட் ஈசண்டேட், ``அன்றைய தினம் நியூயார்க் நகரமே மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருந்தது. சாலையில் செல்வோரெல்லாம் முன்பின் தெரியாத நபர்களைக்கூட கட்டி யணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். அத்தனை காட்சிகளையும் என் கேமரா வில் பதியவேண்டும் என்ற எண்ணத்தில் கேமராவுடன் வெறித்தனமாக சுற்றிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த முத்தக் காட்சியைக் கண்டேன். போர் முடிந்ததன் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் அவர்களின் முகத்தில் பார்க்க முடிந்தது. உடனடியாக அந்தக் காட்சியைப் படமெடுத்தேன்” என்கிறார்.

 படமெடுத்ததில் காட்டிய உற்சாகத்தை, அவர்களின் பெயரை அறிந்துகொள்ள ஆல்பிரட் காட்டவில்லை. இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு, அந்தப் படத்தில் இருந்தது தான்தான் என்று ரோட் ஐலண்டைச் சேர்ந்த மெண்டோன்சா என்பவர் அறிவித்தார். தான் முத்தமிட்ட நர்ஸ், தனக்கு முன்பின் அறிமுகமில்லாதவர் என்றும், போர் நின்றுவிட்டதை அறிந்த உற்சாகத்தில் தான் அப்படிச் செய்ததாகவும் அவர் அறிவித்துள்ளார். இதைப்பற்றி அமெரிக்க பத்திரிகையாளர்கள் மேலும் விசாரித்ததில் அதில் இருந்த பெண்ணின் பெயர் கிரீடா சிம்மர் ஃபீட்மேன் என்று தெரியவந்தது.

ஆல்பிரட் ஈசண்டேட்

ஜெர்மனியில் 1898-ல், பிறந்த ஆல்பிரட் ஈசண்டேட், 20-ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த புகைப்படக் கலைஞராக விளங்கினார். குறிப்பாக, இரண்டாம் உலகப் போரின்போது இவர் எடுத்த  படங்கள்  மிகவும் புகழ் பெற்றவையாக உள்ளன. இவரால் எடுக்கப்பட்ட 90-க்கும் மேற்பட்ட படங்கள் லைஃப் பத்திரிகையின் அட்டையை அலங்கரித்துள்ளன. 1989-ல், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கையால் நேஷனல் மெடல் ஆஃப் ஆர்ட்ஸ் விருதுபெற்ற இவர், மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 1995-ல், இவர் காலமானார்.

x