நீரோடிய காலம் 15: ஆஹாய்… அஹ்… தேய்… க்ர்ர்ர்ர்ர்ர்ரூ…


“ஏ... ஆக்காட்டி ஆக்காட்டி...
எங்கெங்க முட்டையிட்டே
எங்கெங்க முட்டையிட்டே”
ஆகா, இந்த ஊரிலும் ஒரு மக்களிசை கே.ஏ.குணசேகரனா என்று வண்டியை நிறுத்திப் பார்த்தேன்.
அது எடமேலையூர் என்ற கிராமம். மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்கும் இடையில் வடுவூருக்கு முன்பு பிரதான சாலையிலிருந்து உள்தள்ளி இருக்கும் ஊர். எங்கு பார்த்தாலும் வயல்களும் தோப்புமாய் எப்போதும் பசுமையாக இருக்கும் ஊர். அந்த ஊர் வழியாக வடுவூரை நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோதுதான் அந்தப் பாடல் என் காதில் விழுந்தது. பாடலுக்குச் சொந்தக்காரர் ஒரு கீதாரி. தூரத்தில் அவருடைய பாசக்காரப் புள்ளைகளான செம்மறியாடுகள் மேய்ந்துகொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தன. இரண்டு தோளுக்கும் குறுக்காக நீண்ட குச்சியைப் போட்டு அதன் மேலே ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ ராமராஜன் பாணியில் கைகளைப் போட்டுக்கொண்டிருந்தார். நாம் வண்டியை நிறுத்தியதும் சத்தம் நின்றுபோன உறுத்தலில் திரும்பிப் பார்த்தார். விருமாண்டி மீசை! தரையில் ஒரு அரிவாள், முகத்தில் ஒரு அரிவாள்!
கீதாரிகளும் அவர்களுடைய ஆடுகள், வாத்துக்
களும் இல்லையென்றால் தஞ்சையின் அழகு ஒரு படி கீழேதான் இருந்திருக்கும். பரிசலைப் போன்ற கூண்டு
களைத் தலையில் கவிழ்த்துக்கொண்டு வருவார்கள். அந்தக் கோலத்தில் பார்ப்பதற்கு அவர்களை ஏதோ
தேவலோகத்தினரோ என்றெல்லாம் நமக்குள் கற்பனை
கள் கிளர்ந்தெழும். அந்தக் கூண்டுக்குள் சென்று பார்க்க வேண்டும் என்பது என் சிறு வயது ஆசைகளுள் ஒன்று.
விருமாண்டி மீசை கீதாரியிடம் நம்மை அறிமுகப்
படுத்திக்கொண்டு பேச்சுக்கொடுத்தேன்.
“பத்திரிகைகாரத் தம்பிங்களா! நம்மகிட்ட என்னய்யா இருக்கு? ஆடுங்க, அதுகளை மேய்க்கிறது, கிடைபோடுறது இதத்தான வருஷம் முழுக்கச் செய்யுறோம்” என்று அலுத்துக்கொண்டு ஆரம்பித்தார்.
“ஏண்ணே, இது சாதாரண வேலையா! ராப்பகலா ஒழைக்கிறீங்க. ஒங்க வாழ்க்கையை மத்தவங்க தெரிஞ்சிக்க வேணாமா? ஒங்க பேரு என்னண்ணே? பூர்வீகம் எங்கே” என்று கேட்டோம்.
“எம் பேரு மூர்த்திங்க. ராம்நாடு பக்கம் ஆலங்குளம்தான் எங்க ஊரு. பேருக்குதான் ஊரு. வருஷம் முழுக்க இங்கதான் இருப்போம். ஏதாவது நல்லது கெட்டதுன்னா ஓடிட்டு மக்கா நாளே திரும்பிடுவோம்” என்றார்.
“குடும்பம்லாம் எங்கே இருக்குண்ணே?” என்று கேட்டேன்.
“சம்சாரம் ஆலங்குளத்துலதான் இருக்காங்க. வய வேலைக்குப் போவாங்க. பையன் இன்ஜினீயரு. மெட்ராஸுல வேலை பாத்துட்டுருக்கான். பொண்ணு ஒண்ணு தவறிடிச்சு” என்றார்.
“எத்தனை ஆடுங்க வச்சிருக்கீங்க?” என்று கேட்டேன்.
“ஐந்நூறு செம்மறியாடுங்க, முப்பது வெள்ளாடுங்க வைச்சிருக்கோம். எல்லாம் பின்னாடி சேத்தது. ஆரம்பத்துல மத்தவங்க ஆட்டத்தான் மேச்சிட்டிருந்தோம். எங்க அப்பாரு ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னாடி இங்க என்னைய கூட்டிக்கிட்டு வந்தாரு. ஒரு பதினெட்டு வருஷம் வடுவூர் தென்பாதியில இருந்தோம். அப்புறம் நான் தலைப்பட்டு ஒண்ணு ஒண்ணா ஆடு வாங்கி இவ்வளவு சேத்துருக்கேன். ஊருல நாலு ஏக்கர் நெலமும் வச்சிருக்கேன். இங்க திருக்கருகாவூர் பக்கத்துல இருக்க மெலட்டூர்ல வீடும் கட்டிருக்கேன். குடவாசலுக்குப் பக்கத்துல நெலமும் வாங்கிட்டேன். ஆக மொத்தத்துல பூர்விகம் ராமநாதபுரம்னாலும் நாம வளந்தது, நமக்கு உசுரு கொடுத்துக்கிட்டிருக்கது எல்லாம் தஞ்சாவூருதாங்க” என்றார் மூர்த்தி.
“தஞ்சாவூர் ஒங்களுக்கு உசுரு கொடுக்குறது மாதிரி உங்களை மாதிரி உள்ளவங்கதான் தஞ்சாவூருக்கும் உசுரு கொடுக்குறாங்க” என்று சொன்னேன்.
“அது என்னமோ தெரியல தம்பி. இங்க உள்ளவங்கல்லாம் தாயா புள்ளையா பழகுறாங்க. நல்லது கெட்டதுக்கெல்லாம் சொல்லி அனுப்புவாங்க. கெடை போட வந்தா ‘நம்ம மூர்த்தியாய்யா, வாய்யா வாய்யா! நீ கெடை போடாம பின்ன வேற யாரு போடுவாங்க’ன்னு நம்மளை வரவேப்பாங்க” என்று நெகிழ்ந்தார் மூர்த்தி.
“கிடை போடுறதுல வருமானம் எப்புடிண்ணே?” என்று கேட்டேன்.
“ராத்திரிக்குக் கிடை போட்டா வயக்காரங்க, தோப்புக்காரங்க காசு கொடுப்பாங்க. பகல்லன்னா எங்க வேணும்னாலும் மேய்ச்சிக்கலாம். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூவா தாங்கன்னு கேட்டேன். அப்புடி இப்புடிப் பேசி எண்ணூறு ரூவா தர்றாங்க. அதுலதான் என்கிட்ட வேலை பாக்குறவங்களுக்கு டீ, சாப்பாடு, மத்த செலவுன்னு பாத்துக்குறது. இது தவிர வருஷத்துக்கு ரெண்டு மொறை ஆட்டுக்குட்டி விப்போம். அதைச் சேமிச்சு வைப்போம். கிடைபோடுறதுல கெடைக்கிற காசத்தான் செலவுக்கு வைச்சுப்போம்” என்றார்.
“வேலைக்கு ஆளு வச்சிருக்கீங்களா?” என்று கேட்டேன்.
“பின்னே? ஐநூத்தி சொச்சம் ஆடுகளையும் தனியாளா எப்புடிப் பாத்துக்குறது. நாலு ஆளுக என்கிட்ட இருக்காங்க. ராம்நாடு, புதுக்கோட்டைப் பக்கத்துலருந்து புடிச்சிக்கிட்டு வந்துருக்கேன். ஆளுங்களுக்கு டிமாண்ட் அதிகம். ஒரு லட்சம் ரெண்டு லட்சம்னு முன்பணம் கொடுத்தெல்லாம் கூப்புட்டு வந்திருக்கேன்” என்றார்.
கீதாரிகள் என்றாலே வறுமையானவர்கள் என்ற என் நினைப்பை மூர்த்தியண்ணன் பேச்சு மாற்றியது.
“பையன் வேலைக்குப் போயிட்டாரு, ‘ஏம்ப்பா இன்னும் ஆடு மேய்க்கிற’ன்னு ஏதும் கேக்கலையா?” என்று கேட்டேன்.
“பையன் கேக்கலை. ஏன்னா இது எங்களுக்குக் குலத்தொழில் மாதிரி. ஆனா, அவனோ அவனோட புள்ளங்களோ இந்த வேலையைப் பாக்க மாட்டாங்க. இன்னும் ஒரு இருவது வருஷம் திடகாத்திரமா இருக்குற வரைக்கும் ஆடுகளைப் பாத்துக்கிட்டு அப்புறம் வூட்டுல போயி செட்டிலாயிடுறதுன்னு முடுவுல இருக்கன்” என்றார்.
“ஒங்க அப்பா இப்ப எங்க இருக்காங்க?” என்று கேட்டேன்.
“அப்பா தவறி அஞ்சு வருஷம் ஆகுது. இங்கதான் செத்தாரு. தூக்கிக்கிட்டு சொந்த ஊருக்கு ஓடுனேன். வருஷா வருஷம் திருவையாத்துல அவருக்குத் திதி கொடுப்பேன். ஏ… யப்பா, ஆட்டை மட்டுமா மேய்ச்சிருக்காரு, என்னையும்தானே! என்னைத் தோளுல தூக்கிக்கிட்டு அவரு அலையாத எடம் இல்லை. எட்டாவது புள்ள நான், கடைக்குட்டி. அதான் அவ்வளவு செல்லம்” என்று கண்கலங்கினார்.
“இந்தத் தொழிலை ஏந்தான் செய்யுறோம்னு என்னைக்காச்சும் வருத்தப்பட்டிருக்கீங்களா?” என்று கேட்டேன்.
“கடும் மழை பேயிறப்ப அப்படி நெனைக்கிறதுண்டு. நேரத்துக்குச் சாப்பிட முடியாது. ரவையில தூங்க முடியாது. நீளமான மூங்கில் தடி நுனியில குடையைக் கட்டிக்கிட்டு அதைத் தரையில ஊனிக்கிட்டு அதைப் புடிச்சுக்கிட்டே நின்ன நிலையில் தூங்குவோம். இல்லைன்னா மழையில ஆடுங்க எங்கயாவது போயிடும். ஏன்னா, மேய்க்க வந்த புதுசுலதான் அதுங்க ஆடுகளாத் தெரிஞ்சிது. இப்ப அதுக எனக்குப் புள்ளங்க. என் புள்ளையோட இருந்ததவிட அதுகளோடதான் அதிகம் இருந்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு தூரத்தில் சிதறிக்கொண்டிருந்த ஆடுகளை நோக்கி விசித்திரமாக ஏதேதோ சத்தங்களைக் கொடுத்தார்.
“ஆடுகளோட பேசுறதுக்குத் தனி பாஷை வச்சிருக்கீங்க போல” என்று கேட்டதும்,
“ஆமா தம்பி! தொண்டையை ‘ஹ்ஹே’ன்னு கனைச்சு அழைச்சா வரும். ஆஹாய்… அஹ்… தேய்…னும் கத்துவேன். தண்ணி காட்டயில க்ர்ர்ர்ர்ர்ர்ரூன்னு கத்துனா தண்ணி குடிக்கும்” என்றார்.
“சரி நான் வந்தப்போ ஒரு பாட்டை நிறுத்தினீங்கள்ல, அதை முழுசாப் பாடுங்களேன்” என்று கேட்டேன்.
மீசையை இரண்டு பக்கமும் முறுக்கிவிட்டுக்கொண்டு பெருங்குரலில் ஆரம்பித்தார்…
“ஏ... ஆக்காட்டி ஆக்காட்டி... எங்கெங்கே முட்டையிட்டே
எங்கெங்கே முட்டையிட்டே
கடலைக் கலைச்சிக்கிட்டு
கருங்கடலுல முட்டையிட்டேன்
இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூணு குஞ்சு
முட்டைக்குஞ்சு இரை தேட
மூணு மூலை சுத்திவந்தேன்
நாலு குஞ்சு இரை தேட
நாலு மூலை சுத்திவந்தேன்
தனக்கு இரை தேட
தவிச்சு வந்து குத்தவைச்சேன்
மாயக்குறத்தி மயன்
மறைஞ்சு நின்னு கண்ணி வைச்சான்
கண்ணி ரெண்டும் காலுக்குள்ள
றெக்கை ரெண்டும் மாரடிக்க
நானழுத கண்ணீரு
ஆறும் பெருகி ஆனை குளுப்பாட்ட
குளமும் பெருகி
குருத குளுப்பாட்ட” 
என்று பாட்டு நீண்டுகொண்டே போனது.
அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன். வண்டியைக் கிளப்பியபோது திரும்பிப் பார்த்தேன். ஆடுகளை நோக்கி ஏதோ விசித்திர சத்தம் ஒன்றைக் கொடுத்தார். பேக்பைப்பர் மந்திரவாதியின் இசைக்குக் கட்டுப்பட்ட குழந்தைகள் போல் ஆடுகளெல்லாம் அவரை நோக்கி வந்துகொண்டிருந்தன.

(சுற்றுவோம்...)

x