ஒன்பதாம் வகுப்பு படிக்கும் வனிதாவுக்கு வீடு, வீடு விட்டால் பள்ளி. இவை இரண்டுதான் உலகம். ஆனால், நண்பர்கள் வட்டம் பெரிது. அவர்களோடு சேர்ந்து வெளியே சுற்றுவது இல்லையென்றாலும் உலக விஷயங்கள் அனைத்தையும் விவாதிப்பாள். பிறந்த நாளுக்காகப் பெற்றோர் வாங்கித் தந்த புது மாடல் செல்போன், அவளுடைய நட்பு வட்டத்தை விரிவடையச் செய்தது. தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எனப் பலருடனும் சமூக வலைதளங்கள் மூலமாகப் பழகினாள். வயதில் பெரியவர்கள் சொல்கிற சிறு சிறு கருத்துகள்கூட அவளை வியக்கவைத்தன.
மகளின் மயக்கம்
பள்ளிவிட்டு வந்ததுமே பள்ளியில் நடந்த அனைத்தையும் பெற்றோரிடம் வனிதா சொல்வதில்லை என்றாலும் முக்கியமானது என தான் நினைப்பவற்றைச் சொல்லிவிடுவாள். நண்பர்கள் குறித்தும் சொல்வாள். ஆனால், தனக்குக் கணக்கில் அடங்காத நண்பர்கள் கிடைத்திருப்பதைப் பெற்றோரிடம் சொல்லலாமா வேண்டாமா என யோசித்தாள். ’’தேவையில்லாமல் ஃபேஸ்புக்கில் இருக்காதே’’ என்று சொல்லி, தன்னிடம் இருக்கும் செல்போனைப் பெற்றோர் பறித்துக்கொண்டால் என்ன செய்வது என்ற பயத்தில் பெற்றோரிடம் வனிதா எதையும் சொல்லவில்லை.
அன்று காலை பள்ளிக்குக் கிளம்பியவள், தலையைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள். பதறிப்போன அப்பா, மகளை அக்கறையோடு விசாரித்தார். காலையில் பூரி சாப்பிட்டதால் தலைசுற்றுவதுபோல் இருப்பதாக வனிதா சொன்னாள். “முடியவில்லை என்றால் பள்ளிக்குச் செல்ல வேண்
டாம்’’ எனப் பெற்றோர் சொல்ல, சமாளித்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டுப் பள்ளிக்குக் கிளம்பினாள் வனிதா. சிறிது நேரத்திலேயே பள்ளியிலிருந்து போன் வந்ததும் பதறியடித்துச் சென்றனர் வனிதாவின் பெற்றோர். சோர்ந்துபோய் உட்கார்ந்திருந்தாள் வனிதா. காலையில் பிரேயரின்போது அவள் மயங்கி விழுந்துவிட்டதாகத் தகவல் சொல்லப்பட்டது. “மருத்துவமனைக்குப் போகலாம்’’ என்று சொன்ன பெற்றோரிடம் “வேண்டாம்’’ என மறுத்த வனிதா, “தூங்கி ஓய்வெடுத்தால் சரியாகிவிடும்” எனச் சொன்னாள்.
அம்மாவின் சந்தேகம்
பெற்றோர் இருவரும் அன்று விடுப்பு எடுத்து, மகளைப் பார்த்துக்கொண்டனர். மதிய உணவைச் சாப்பிட உட்கார்ந்த வனிதா, சட்டென எழுந்துவிட்டாள். வாந்தி எடுத்துவிட்டு முகத்தைத் துடைத்தபடி வந்தவள், சாப்பாடு வேண்டாம் எனச் சொல்லிவிட்டாள். பழச் சாறு குடித்தும் வாந்தி நிற்கவில்லை. அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவரும் வாந்தி நிற்பதற்கு மாத்திரை கொடுத்து அனுப்பினார். வீட்டுக்கு வந்த பிறகும் வனிதா சோர்வுடன் இருந்தாள். இடையிடையே ஃபேஸ்புக்கில் ஏதாவது படித்துக்கொண்டும் சாட் செய்துகொண்டும் இருந்தாள்.
அம்மாவுக்கு மட்டும் ஏதோ சரியில்லை என்பது புரிந்தது. போன மாதம் வாங்கிவைத்த சானிட்டரி நாப்கின்களைப் பார்த்தார். தான் பயன்படுத்தியதுபோக மீதி அப்படியே இருந்தது. மகளிடம் கேட்டார். “என்னன்னே தெரியலம்மா. இன்னும் பீரியட்ஸ் வரலை” என்றாள் வனிதா.
அம்மாவுக்குத் திக்கென்றது. மகள் தங்களிடம் எதையும் மறைக்க மாட்டாள் என்ற நம்பிக்கை அம்மாவை மேற்கொண்டு சிந்திக்கவிடாமல் செய்தது. சில நேரம் இப்படி நாள் தவறி மாதவிடாய் வருவது இயல்புதானே என்று விட்டுவிட்டார். மறுநாள் காலை மீண்டும் சிக்கல். வனிதாவுக்கு தலைச் சுற்றலும் வாந்தியும் நிற்கவில்லை.
இணையத்தால் வந்த வினை
கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு அம்மா மட்டும் வனிதாவுடன் வீட்டில் இருந்தார். எதையும் மறைக்காமல் தன்னிடம் சொல்லிவிடும்படி மகளிடம் சொன்னார். முதலில் வனிதாவுக்கு எதுவுமே புரியவில்லை. அம்மா தன்னிடம் என்ன கேட்கிறார் என்பது புரியாமல் விழித்தாள். “இங்கே பாரு வனிதா. எதுவா இருந்தாலும் நீ சொன்னாதான் அதுக்கு என்ன தீர்வுன்னு பார்க்க முடியும். ரெண்டு நாளா காலையில் இப்படி நீ வாந்தியெடுக்கறதைப் பார்த்தா எனக்கு ஏதோ தப்பா தோணுது” என்று அம்மா சொல்லவும் வனிதாவுக்கும் பயம் வந்துவிட்டது. ஒருவேளை, தான் கருவுற்றிருப்போமோ என நினைத்தாள். இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிந்தால் என்னவாகுமோ என நினைத்தவளுக்கு அழுகை வந்தது. மகள் அழவும் அம்மாவுக்குத் தன் சந்தேகம் உறுதியாகிவிட்டது புரிந்தது.
வனிதாவுக்கு ஃபேஸ்புக் மூலம் கிடைத்த நண்பர்களில் ஒருவன் சுந்தர். தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். நிறைய மீம்களை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வான் என்பதால் அவனை வனிதாவுக்குப் பிடித்துப்போனது. இரவில் பெற்றோர் உறங்கிய பிறகு அவனுடன் சாட் செய்யத் தொடங்கியிருக்கிறாள். ஃபேஸ்புக் பழக்கம் நேரில் சந்திக்கத் தூண்டியது. பள்ளிக்குச் செல்லாமல் அவனைச் சந்தித்தாள். சந்திப்பு அடுத்தடுத்த கட்டங்களை எட்டியது. அதன் ஒரு பகுதியாக இருவருக்கும் இடையே உடல் சார்ந்த நெருக்கமும் ஏற்பட்டது. ஆரம்பத்தில் தயங்கியவள் ஆர்வத்தாலும் அவனது வற்புறுத்தலாலும் அதற்கு இசைந்திருக்கிறாள். அதன் விளைவாகத்தான் தலைச்சுற்றலும் வாந்தியும் என வனிதாவுக்குப் புரிந்தபோது என்ன செய்வதென்றே தெரியவில்லை. மகள் சொன்னதைக் கேட்ட அம்மாவுக்கோ தலையில் இடி இறங்கியதைப்போல் இருந்தது. என்ன செய்வது, கணவருக்கும் உறவினர்களுக்கும் விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும், மகளின் எதிர்காலம் என்னவாகும் என்றெல்லாம் யோசிக்க யோசிக்க வனிதாவின் அம்மாவுக்கு மயக்கமே வந்துவிட்டது.
பொறுமையான அணுகுமுறை
இப்போது, ஆத்திரப்படுவதைவிடப் பொறுமை முக்கியம் என்பதை அவர் உணர்ந்தார். “அப்பா அம்மாவுக்குத் தெரியாம நீ எதையோ செய்ய நினைச்சா அது தப்பான வேலைன்னு உனக்குத் தெரியாதா வனிதா” என்று மகளிடம் அமைதியாகக் கேட்டார். அதற்கு மேல் வனிதாவிடம் ஒரு கேள்விகூட கேட்கவில்லை. கணவரிடம் போனில் தகவல் சொல்லிவிட்டு மகளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனைகளுக்குப் பிறகு, வனிதாவின் வயிற்றில் இரண்டு மாத கரு வளர்வது உறுதியானது. பயமும் அழுகையுமாக சோர்ந்துபோயிருந்தாள் வனிதா. அதற்குப் பிறகான ஒரு வார காலத்தில் உடலாலும் உள்ளத்தாலும் சோர்ந்துபோனாள் அவள். பெற்றோர் தன்னை வெறுத்து ஒதுக்கிவிடுவார்களோ என நினைத்த வனிதாவுக்கு அவர்கள் அப்படி நடந்துகொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது; குற்றவுணர்வாகவும் இருந்தது.
முதல் வேலையாக ஃபேஸ்புக் கணக்கை டெலிட் செய்தாள். அதைத் தொடர்ந்த சில சிக்கல்களையும் பெற்றோரின் துணையோடு சரிசெய்தாள். எந்தவிதத்திலும் தன் மீது தவறான பார்வை பிறருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையுடன் அணுகிய பெற்றோரின் செயல்பாடு வனிதாவுக்குத் தெம்பைத் தந்தது. படிப்பின் மூலம் மட்டுமே பெற்றோரின் அன்பையும் அரவணைப்பையும் திரும்பப்பெற முடியும் என்பதை உணர்ந்து வனிதா செயல்படத் தொடங்கினாள்.
முன்னெச்சரிக்கை அவசியம்
வனிதாவின் விஷயத்தில் பெற்றோர் கூடுதல் கவனத்துடன் இருந்திருந்தால் இந்தச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம். பதின்பருவத்தில் இருக்கும் மகளுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்ததில் தொடங்கியது அவர்களது சறுக்கல். அதில் அவள் என்ன செய்கிறாள், யாருடன் பழகுகிறாள் என்பதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மகளின் சின்னச் சின்ன மாறுதல்களை வைத்தே அவளது செயல்பாடுகளைக் கணித்திருக்கலாம். வாரம் ஒரு முறையாவது பள்ளிக்குச் சென்று ஆசிரியரைப் பார்த்திருந்தால் அவள் பள்ளிக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்ததையோ மாலை நேர வகுப்புக்குச் செல்லாததையோ கண்டுபிடித்திருக்கலாம்.
பதின் பருவக் குழந்தைகளுக்கு மாதவிடாய் தள்ளிப்
போகிறது என்றாலே உடனே அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தேவையில்லை. சிலருக்கு சீரற்ற மாதவிடாய் இருக்கக்கூடும். அதேநேரம், காரணமே இல்லாமல் மாதவிடாய் தள்ளிப்போனால் அதைக் கண்டுகொள்வது அவசியம். எல்லாக் குழந்தைகளும் இப்படி நடந்துகொள்வார்கள் என்று சொல்லவில்லை. ஆனால், இந்தத் தலைமுறையினருக்குக் கிடைத்திருக்கும் கட்டற்ற சுதந்திரமும் அவர்கள் சுற்றித்திரியும் இணைய
வெளியும் அவர்களுக்கு நல்லவற்றுக்கு இணையாக வேண்டாதவற்றையும் கற்றுத்தருகின்றன. அதனால் பெற்றோர் விழிப்புடன் இருப்பதுடன் குழந்தைகளும் விழிப்புடன் இருக்க வழிகாட்ட வேண்டும்.
பதின் பருவத்தில் ஏற்படும் இயல்பான - ஏற்றுக்கொள்ளத் தகுந்த மாற்றங்களை நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. ஆனால், எல்லை மீறுகிறவற்றை கண்டிக்கத்தான் வேண்டும். சில விஷயங்களில், விட்டுப்பிடிக்கலாம் என நாம் நினைப்பது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும். பதின்பருவக் குழந்தைகள் எதில் எல்லாம் எல்லை மீறக்கூடும்? அடுத்த வாரம் பார்ப்போம்.
(நிஜம் அறிவோம்…)