ஓசூர் பகுதியில் தண்ணீரின்றி 60% தக்காளி விளைச்சல் பாதிப்பு


ஓசூர் அடுத்துள்ள காமன்தொட்டியில் தோட்டத்தில் தண்ணீரின்றி செடிகள் கருகியும், தக்காளி வெதும்பி சிறுத்தும் வீணாகி உள்ளன.

ஓசூர்: ஓசூர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீரின்றி 60 சதவீதம் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கெலமங்கலம், உத்தனப்பள்ளி, பாகலூர், தேன்கனிக்கோட்டை, காமன்தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.

இப்பகுதிகளில் சாகுபடி செய்யும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று அங்கிருந்து, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் நிகழாண்டு ஓசூர் பகுதியில் கோடை வெப்பம் கடுமையாக நிலவியதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளி செடிகளுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் செடிகளிலேயே தக்காளி சிறுத்து வெதும்பி கீழே விழுந்தன. விளைச்சல் பதிக்கப்பட்டுள்ளதால் இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தக்காளி விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் தக்காளி விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளையும் தக்காளி சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு தக்காளிக்கு நல்ல விலை கிடைத்ததால், நிகழாண்டு சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டது.

அறுவடைக்கு காத்திருந்த நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் செடிகள் கருகின. எலுமிச்சம் பழத்தை விட சிறிதாக தக்காளி விளைந்து, மொத்த விளைச்சலும் பாதிக்கப்பட்டது. அதே போல் கடும் வெயிலின் உஷ்ணத்தால் தக்காளி வெதும்பி பழுத்தது. விளைச்சல் பாதித்த தக்காளியை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு சென்றால் உரிய விலை கிடைப்பதில்லை.

இதனால் 60 சதவீதம் விளைச்சல் பாதித்த தக்காளியை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுள்ளோம். தற்போது தக்காளி வரத்து குறைந்ததால் கிலோ ரூ.30 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்பட்டும், விளைச்சல் பாதித்த தக்காளியை சந்தைப்படுத்த முடியவில்லை.

எனவே மழைக்கு சேதமாகும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது போன்று, கோடை வெயிலுக்கு தண்ணீரின்றி விளைச்சல் பாதித்த தக்காளி விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும், எனக் கூறினர். தற்போது வரத்து குறைந்தாலும் விளைச்சல் பாதித்த தக்காளியை சந்தைப்படுத்த முடியவில்லை.