எப்போதும் கேட்கும் பெருவெடிப்பின் ஓசை!


ஆசை

ஒரு புள்ளியிலிருந்துதான் எல்லாம் தொடங்கியது. அந்தப் புள்ளி சாதாரணப் புள்ளி இல்லை, எல்லாம் தனக்குள்தான் அடங்கியிருக்கிறது என்ற திமிர் பிடித்த புள்ளி. எல்லாம் என்றால் காலம், இடம் என்று எல்லாம்தான். ஏனெனில் அந்தப் புள்ளி வேறு எந்த இடத்திலும் இருக்கவில்லை, அந்தப் புள்ளியில்தான் இருந்தது; காலமும் அந்தப் புள்ளியிலிருந்துதான் தொடங்கியது. அந்தப் புள்ளிக்கு முன்பு என்ன இருந்தது என்றால் ‘ஏதும் இல்லை’ என்பதுதான் பதில். அப்படிப்பட்ட புள்ளி, புள்ளியாகவே எஞ்சியதா என்றால் அதுவும் இல்லை. தன்னோடு காலத்தையும் இடத்தையும் உருவாக்கிக்கொண்ட அந்தப் புள்ளியை நாம் அப்போது பார்க்க முடிந்திருந்தால் அதனைப் புள்ளியாகக் கூட மதித்திருக்க மாட்டோம். (அந்தப் புள்ளிக்கு வெளியில் இருந்துகொண்டு பார்ப்பதற்கு இடம் என்று ஏதும் இல்லை என்பதால் ஒரு கற்பனைக்காக அப்படி வைத்துக்கொள்வோம்). ஆனால், இன்று அதனை பிரபஞ்சம் என்று சொல்கிறோம்.

காலம், இடம் இல்லாத சூனியத்திலிருந்து தான்தோன்றிப் புள்ளியொன்று, நினைத்தே பார்க்க முடியாத கால அளவுக்குள் நினைத்தே பார்க்க முடியாத சக்தியுடன் வெடித்துச் சிதறியது. இப்படியாக, கண்ணுக்கே தெரியாத புள்ளி என்ற நிலையிலிருந்து ஒரு நிமிடத்துக்குள் பல கோடிக் கணக்கான மைல்கள் குறுக்களவு கொண்டதாகப் பிரபஞ்சம் விரிவடைந்தது. பிரபஞ்சத்தில் தற்போது தோன்றியிருப்பவற்றில் 98 சதவீதப் பருப்பொருள் (matter), பிரபஞ்சம் உருவான முதல் மூன்று நிமிடத்துக்குள் தோன்றிவிட்டது என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

பிரபஞ்ச வரலாற்றை பூமி போன்று கோள வடிவில் ஹாக்கிங் கற்பனைசெய்தார். பிரபஞ்சத்தின் காலத்தை பூமியின் அட்சக்கோடாக நாம் கற்பனை செய்வோம் என்றால் காலம் வடதுருவத்தின் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி தெற்கு நோக்கிச் செல்கிறது. ‘பெருவெடிப்பு’க்கு முன்பு என்ன நிகழ்ந்தது என்று கேட்பவர்களுக்கு ஹாக்கிங்கின் பதில் இது: “வட துருவத்துக்கு வடக்கே என்ன என்று கேட்பதுபோல்தான் இது. பெருவெடிப்புக்கு முன்பு இடமும் இல்லை, காலமும் இல்லை.”

x