பாப்லோ தி பாஸ் 5: கிச்சனில் முளைத்த ‘கார்ட்டெல்!’


“என்னடா முறைக்கிற… அடிச்சுப் பல்லுக்கில்லு எல்லாத்தையும் பேத்துருவேன்…”
அந்த போலீஸின் வீரத்துக்கு முன்னால் உதட்டில் மெல்லிய புன்னகையுடன் எந்தவிதச் சலனமுமற்று நின்று கொண்டிருந்தான் பாப்லோ. அவன் இருந்தது இட்டாகுவி சிறையில். மெதஜின் நகரத்தின் மிகக் கடுமையான சிறைகளில் ஒன்று. அவன் அங்கு அடைபட்ட எட்டாவது நாள் அது.
‘எப்படி நான் இவங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்..? எங்கே, எப்போ, எப்படி, யார் செஞ்ச தவறு..?’ என்று அவன் யோசிக்கத் தொடங்கினான்.
‘காந்த்ராபாண்ட்’ தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்ட பிறகு, அடுத்து என்ன என்று பாப்லோ திட்டமிட்டுக் கொண்டிருந்தபோதுதான், கஸ்தாவோ கவீரியா ஒருவனைக் கூட்டி வந்தான். அவன் பெயர் கக்கரச்சோ.
“நீங்க ரெண்டு பேரும் என்கூட பெருவுக்கு வரணும். ஒரு பிஸினஸ் டீல். உங்களால அதைப் பண்ண முடியும்னு நினைக்கிறேன்...”
பாப்லோவும் கஸ்தாவோவும் ஒப்புக்கொண்டார்கள். பெரு நாட்டில், அவர்களை ‘பேஸ்ட்’ தயாரிக்கும் சில நபர்களிடம் அறிமுகப்படுத்தினான் கக்கரச்சோ.
“என்ன பேஸ்ட் இது..?” – பாப்லோ கேட்டான்.
“கொக்கைன் பேஸ்ட்...”
“கொக்கைனா..?” – கஸ்தாவோ சற்றே அதிர்ந்தான்.
“ஆமா… கொலம்பியாவோட ‘டோப்’ உலகத்துலயே பெஸ்ட். அடிச்சா, சும்மா சொர்க்கத்துல மிதக்கிற மாதிரி இருக்கும். நேரம், நாள் போறது தெரியாது. அவ்வளவு பவர். கஸ்தாவோ… ‘டோப்’னா என்னன்னு தெரியும்ல..?”
“சட்டத்துக்குப் புறம்பா எடுத்துக்கிற போதை மருந்துதானே..?”
“கரெக்ட்...”
“சரி… இந்த பேஸ்ட் எதுக்கு..?” பாப்லோ கேட்டான்.
“இது கொக்கோவாங்கிற விதையிலிருந்து தயாரிக்கப்பட்ட பேஸ்ட். இதை ஈதர், அசிட்டோன் மற்றும் இன்னும் சில கெமிக்கல்ஸோடு கலந்து அதிகபட்ச வெப்பத்துல சூடு பண்ணுனா, வெள்ளையா, சுத்தமான பவுடர் கிடைக்கும். அதுதான் கொக்கைன்…”
“ஓ.கே. இப்ப நாங்க என்ன செய்யணும்…” கஸ்தாவோ தனது தாடையைத் தேய்த்தவாறே கேட்டான்.
“ரொம்ப சிம்பிள்… இதை மெதஜின் நகரத்துக்குக் கொண்டு வரணும். என் மேல ஏகப்பட்ட கேஸ் இருக்கு. என்னை எப்பவும் சில பேர் கண்காணிச்சுக்கிட்டே இருக்காங்க. அதனால நான் இதைக் கொண்டு போறது கஷ்டம். அதான், புதுசான ஆட்களைத் தேடினேன். உங்க அறிமுகம் கிடைச்சது. உங்களை போலீஸுக்குத் தெரியாது. அதனால உங்களைச் சந்தேகப்பட மாட்டாங்க!”
“டீல் என்ன..?” பாப்லோ.
“இந்த பேஸ்ட்டை நீங்களே பவுடராக்கிக்குங்க. அதை வித்து வர்ற லாபத்துல, எனக்குப் பாதி கொடுத்துடுங்க”
“டீல் ஓ.கே” கஸ்தாவோ சந்தோஷத்தில் கத்தினான்.
அந்த பேஸ்ட்டை, பெரு, ஈக்வடார் ஆகிய இரண்டு தேசங்களைத் தாண்டி கொலம்பியாவுக்குள் கொண்டு வர வேண்டும். எனவே மூன்று, ‘ரெனால்ட் 4’ மாடல் கார்களை ஒவ்வொரு நாட்டிலும் வாங்கிக் கொண்டான் பாப்லோ. ஏன் அந்த மாடல் கார்..?
காரணம், அந்த காரின் டிசைன் அப்படி. அந்த காரின் முன்பக்க சக்கரங்களுக்கு மேலே நிறைய இடம் இருந்தது. அதில் ஒரு சின்ன பெட்டி போல செய்து, அதில் பேஸ்ட்டைப் பதுக்கி வைத்து, காரை ஓட்டி வந்தான் பாப்லோ. போலீஸ் செக்போஸ்ட்டுகளில் கார் நிறுத்தப்படும்போது, போலீஸார் வழக்கமாக காரின் உள்பக்கம், டிக்கி போன்ற இடங்களில்தான் தேடுவார்கள். குனிந்து காருக்கு அடியில் பார்க்கிற அளவுக்கு அவர்களுக்கு நேரமோ சுறுசுறுப்போ இருக்காது.
கடைசியாக, கொலம்பியாவுக்குள் நுழைந்து மெதஜின் நகரத்தில் உள்ள பெலென் எனும் இடத்துக்கு அந்த பேஸ்ட்டைக் கொண்டு வந்தான் பாப்லோ. அங்கு அதை ‘பிராசஸ்’ செய்ய ஒரு கிச்சனை உருவாக்கினான். கிச்சன்..? ஆமாம்… கேங்க்ஸ்டர் மொழியில் ‘கிச்சன்’ என்றால், ஆய்வகம் என்று அர்த்தம். அந்த கிச்சனில்தான் உருவானது ‘மெதஜின் கார்ட்டெல்’. கார்ட்டெல் என்றால், கடத்தல் கூட்டமைப்பு என்று பொருள்..!
அந்த பேஸ்ட்டைப் பொடியாக்குவதற்குப் பெரிய அளவில் விஞ்ஞானிகள் எல்லாம் தேவைப்படவில்லை. ‘இப்படி இப்படிப் பண்ணுங்க’ என்று ஒரு முறை சொல்லிக்கொடுத்தால், அதன் படி செய்கிற கூலியாட்கள் போதும். அவர்களுக்கு ‘குக்’ (சமையல்காரர்கள்) என்று பெயர். பேக்கரியில் ஒரு கேக்கைத் தயாரிப்பதைவிடவும் சுலபமான வேலை இது. ‘ஆய்வகம்’ என்பது வெறும் பெயருக்குத்தான். ஆனால், வீடு, காடு என எங்கு வேண்டுமானாலும் இந்த ‘பிராசஸை’ மேற்கொள்ள முடியும்.
முதன்முதலில் இப்படியான ஒரு கிச்சனை அடுக்கு மாடி வீடொன்றில்தான் அமைத்திருந்தான் பாப்லோ. ஆனால், பேஸ்டைப் பவுடராக்கும்போது வெளிப்படும் வாசனையால், அருகில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக் காடு ஒன்றில் போய் ஒரு கிச்சனை உருவாக்கினான்.
பெருவில் இருந்து வரும்போது வெறும் ஒரு கிலோவுக்கு மட்டும் பேஸ்ட்டை வாங்கி வந்து பவுடராக்கினான். அந்த பவுடரைத் தனக்கு நெருக்கமான, ‘மாரியுவானா’ புகைக்கும் பழக்கம் உள்ள சில நண்பர்களிடம் கொடுத்தான். அவர்கள் அதைப் பயன்படுத்திப் பார்த்துவிட்டு, அருமையாக இருப்பதாகச் சொன்னார்கள். பாப்லோவுக்குப் புதிய வழி பிறந்தது. மெதஜின் நகரத்தின் பல இடங்களில் ‘கிச்சன்’கள் திறந்தான். பணம் புழங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக, கொலம்பியாவைத் தாண்டி இதர மத்திய அமெரிக்க நாடுகளுக்கும் கிளை பரப்பத் தொடங்கியிருந்தான். கக்கரச்சோவின் காதில் புகை வரத் தொடங்கியிருந்தது.
எத்தனை நாளுக்கு ‘ரெனால்ட் 4’ காரில் கடத்துவது..? நிறைய ட்ரக்குகளை வாங்கினான் பாப்லோ. பெருவில் இருந்து கொண்டு வரும் பேஸ்ட்டை, மெதஜின் நகரம் வரை கொண்டு வருவதற்கு, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ட்ரக் டிரைவர்களை நியமித்தான். அதில் ஒருவன் கவிலான். பாஸ்ட்டோ நகரத்திலிருந்து மெதஜின் நகரத்துக்கு பேஸ்ட்டைக் கொண்டு வரும் பொறுப்பு அவனுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை வெற்றிகரமாக பேஸ்ட் வந்து சேரும்போது, பாப்லோ அவனுக்குப் பணம் கொடுப்பான்.
அந்தப் பணத்தைக் கொண்டு அவன், பைக், கார், விதவிதமான வெளிநாட்டுத் துணிகள் என்று வாங்கிக் குவிக்க... அவனது மச்சினனுக்குச் சந்தேகம் வந்தது. அவன் கொலம்பியாவின் எஃப்பிஐ என்று அழைக்கப்படும் ‘திபார்த்தமென்ட்டோ அத்மினிஸ்திராட்டிவோ த செகுரிதாத்’ (சுருக்கமாக ‘டி.ஏ.எஸ்’) அமைப்பில் போலீஸாக இருந்தான்.
“ஒண்ணுமில்ல… பாப்லோன்னு ஒருத்தன் இருக்கான். அவனுக்காக பாஸ்ட்டோ நகரத்திலிருந்து கிழங்குகளை மெதஜின் நகரத்துக்குக் கொண்டு வர்றேன். அவன் எனக்குப் பணம் தர்றான்” என்றான் கவிலான்.
‘டி.ஏ.எஸ்’ போலீஸார் விசாரணையை முடுக்கினார்கள். வழக்கமான, பாப்லோவுக்கு வேலை செய்கிற, உள்ளூர் போலீஸாருக்குத் தெரியாமல், அந்த விசாரணை ரகசியமாக நடந்தது. ஒருமுறை பாப்லோவும் கஸ்தாவோவும் பேஸ்ட்டைக் கடத்திக்கொண்டு வரும்போது, பிடிபட்டுவிட்டார்கள்.
“என்னடா… கேட்டுக்கிட்டே இருக்கேன். ஒண்ணும் சொல்லாம சிரிக்கிறே” என்று சொல்லியவாறு துப்பாக்கியை பாப்லோவின் நெற்றியில் வைத்தான் ‘டி.ஏ.எஸ்’ போலீஸ். பாப்லோ நினைவு திரும்பினான்.
எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், பாப்லோ தன் உயிருக்காக போலீஸாரிடமோ, எதிரிகளிடமோ, போட்டியாளர்களிடமோ பிச்சை கேட்டதில்லை. மாறாக பேரம் பேசினான்.
“ஒரு மில்லியன் பெஸோஸ்… ஓ.கே.வா..?” அவர்களிடம் கேட்டான் பாப்லோ. இந்திய மதிப்பில் சுமார் 35 லட்சம் ரூபாய். பணத்தாசை யாரை விட்டது..? அந்த போலீஸார் பணிந்தார்கள். கஸ்தாவோவை பணத்தைக் கொண்டு வரச் சொன்னார்கள். பாப்லோவும் அவர்களும் சேரில் உட்கார்ந்து அரட்டை அடிக்கத் தொடங்கினார்கள். அவனை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டன.
சிறையிலிருந்து வெளிவரும்போது அவன் கேட்டான். “எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க…?”
“என்ன..?”
“உங்களுக்கு யாரு துப்புக் கொடுத்தது..?”
“கக்கரச்சோ…!”
விடுதலையான பிறகு பாப்லோ செய்த முதல் வேலை, கக்கரச்சோவைக் கொன்றான். அது கொக்கைன் கடத்தலில் அவன் ‘காட்ஃபாதராக’ வருவதற்கு, போடப்
பட்ட முதல் பிள்ளையார் சுழி..!

(திகில் நீளும்...)

x