பேசும் படம் - 2: கழுகும் அந்தச் சிறுமியும்


ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடான், 1993-ல் மிக மோசமான காலகட்டத்தைச் சந்தித்தது. ஒருபக்கம் பஞ்சம், மறுபக்கம் உள்நாட்டுப் போர் என அந்நாட்டின் கழுத்து நெரிபட்டுக் கொண்டிருந்தது. சூடான் மக்கள் உணவில்லாமல் திண்டாடினார்கள். சர்வதேசப் பத்திரிகைகள் இதைப்பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதின.

இதற்காக சர்வதேசப் பத்திரிகையாளர்கள் சூடானில் முகாமிட்டு இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் கெவின் கார்ட்டர் (Kevin Carter). தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளரான இவர், தனது அரிய படங்கள் மூலம் பேசப்பட்டவர். இவர் எடுத்த அரிய படங்களை சர்வதேசப் பத்திரிகைகள் பலவும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கி வெளியிட்டன. சூடானின் நிலையை படங்களால் புரியவைக்கும் முயற்சியில் கேமராவும் கையுமாக சூடான் முழுக்க அலைந்தார் கார்ட்டர். ஒட்டிய வயிறுடன் பிச்சை எடுக்கும் சிறுவர்கள், உணவு வேன்களின் பின்னால் வெறிபிடித்து ஓடும் மக்கள் கூட்டம், ஒரு துண்டு ரொட்டிக்காக அடித்துக்கொள்ளும் மக்கள் எனப் பல விஷயங்களை இவரது கேமரா க்ளிக்கித் தள்ளியது.

அந்தச் சமயத்தில்தான் அயோட் (Ayod) என்ற கிராமத்தில் ஒரு காட்சி கார்ட்டரின் கண்ணில் பட்டது. பசியின் வாட்டத்தில் குழந்தை ஒன்று குற்றுயிரும் கொலையுயிருமாய் சோர்ந்துபோய் அமர்ந்திருக்க, அதன் அருகே கழுகு ஒன்று வட்டமிட்டுக் கொண்டிருந்தது. இதைப் பார்த்ததும் குழந்தையைக் காப்பாற்றுவதா அல்லது அந்தச் சூழலை படமெடுப்பதா என்று ஒரு மினி பட்டிமன்றமே கெவின் கார்ட்டரின் மனதில் நடந்தது. கடைசியில் கடமை உணர்ச்சிதான் வென்றது. கேமராவை ஸ்டாண்டில் பொருத்திவிட்டுக் காத்திருந்தார். சுமார் 20 நிமிட நேரம் குழந்தையை வட்டமிட்ட கழுகு, கடைசியில், அதனருகே போய் அமர்ந்தது. இதுதான் சமயமென்று, அதை க்ளிக்கினார் கார்ட்டர்.

இதுபற்றி “அந்தக் குழந்தையின் பெற்றோர்கள் விமானத்தில் இருந்து கீழே போடப்படும் உணவுகளை சேகரிப்பதில் கவனமாக இருந்ததால் குழந்தையைக் கவனிக்கவில்லை. இதனால் தனித் திருந்த குழந்தையைத் தாக்கும் எண்ணத்துடன் கழுகு நெருங்கிக் கொண்டிருந்தது. குழந்தையைக் காக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும், எனக்குள் இருந்த புகைப்படக்காரன் அதை முதலில் படமெடுக்கத் தூண்டினான். சில படங்களை எடுத்த பிறகு அந்தக் கழுகைத் துரத்திவிட்டு குழந்தையையும் காப்பாற்றினேன்” என்று பதிவு செய்திருக்கிறார் கார்ட்டர்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு விற்கப்பட்ட அந்தப் படம், ‘தி வல்ச்சர் அண்ட் தி லிட்டில் கேர்ள்’ (The vulture and the little gir) என்ற தலைப்பில் 1993-ம் ஆண்டு மார்ச் 26-ம் தேதி முதலில் வெளியானது. இந்த படத்தைப் பார்த்த வாசகர்கள் பலரும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையைத் தொடர்புகொண்டு, அந்தக் குழந்தை காப்பாற்றப்பட்டதா என்று பதற்றத்துடன் விசாரித்தனர். மேலும், அந்தச் சூழலில் குழந்தையைக் காப்பாற்றாமல் படமெடுப்பதில் ஆர்வம் காட்டிய கார்ட்டரை பலர் விமர்சிக்கவும் செய்தார்கள். இந்தப் படம், கெவின் கார்ட்டரை புகழின் உச்சிக்கு எடுத்துச் சென்றது. இதற்காக 1994-ம் ஆண்டில் அவருக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டது. ஆனாலும் சூடானில் தான் கண்ட காட்சிகளால் மனதளவில் பாதிக்கப்பட்ட கார்ட்டர், புலிட்சர் விருது வாங்கிய சில நாட்களிலேயே தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.

கெவின் கார்ட்டர்

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜொகன்னஸ்பர்க்கில் 1960-ல் பிறந்த கெவின் கார்ட்டர், சிறு வயதில் இருந்தே புகைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். ‘ஜொகன்னஸ்பர்க் ஸ்டார்’ என்ற பத்திரிகையில் புகைப்படக்காரராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர், பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி உள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் பஞ்சம் நிறைந்த பகுதிகளில் படம் எடுக்கச் செல்பவர்கள், அங்குள்ளவர்களைத் தொடவேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் இருந்து புகைப்படக்காரர்களுக்குத் தொற்று நோய் பரவலாம் என்பதால் இப்படிச் சொல்லப்பட்டிருந்தது. இதனால் கழுகுக்கு முன்னால் தான் படம் எடுத்த குழந்தை உட்பட, பசியால் பாதிக்கப்பட்டிருந்தவர்களைத் தொட்டு ஆறுதல் கூறக்கூட முடியாததால் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டார் கார்ட்டர். மேலும், வறுமை நிலையும் அவரை அலைக்கழித்தது. இறுதியில், 1994-ம் ஆண்டு, தான் சிறுவயதில் விளையாடிய பார்க்மோர் என்ற இடத்தில், ஒரு டிரக்கை இயக்கி அதன் புகைபோக்கி அருகே முகத்தை வைத்து, அதிலிருந்து வெளியான கார்பன் மோனோக்ஸைடை சுவாசித்து இறந்தார்.

x