இந்திய வரலாறு, சோழ-நாயக்க-மராட்டிய மன்னர்கள் வரலாறு, தமிழக வரலாறு, தஞ்சை வரலாறு என்று அனைத்துச் சுவடுகளையும் சுவடிகளையும் தன் அலமாரிகளில் தாங்கிக்கொண்டிருக்கிறது தஞ்சையிலுள்ள சரஸ்வதி மஹால் நூலகம். ஐந்து நூற்றாண்டுகளைக் கண்ட இந்த நூலகத்தை தஞ்சை மராட்டிய மன்னர்களின் சந்ததியினர் 1918-ல் ஒப்படைத்தனர். நீரோடிய காலத்து நினைவுகளின் வளமான சேகரமாகத் திகழ்கிறது இந்த நூலகம். இங்கே தமிழ் பண்டிதராக இருக்கும் மணி.மாறனைச் சந்திப்பதற்காகச் சென்றோம்.
எம்.ஏ. தமிழ், எம்.ஏ. வரலாறு, நூலக அறிவியல், சம்ஸ்கிருதத்தில் பட்டயப் படிப்பு, சுவடிகளைப் படிப்பதில் தேர்ச்சி என்று பலதுறை அறிவைப் பெற்றிருக்கும் மணி.மாறன் தமிழர்களின் பாரம்பரிய நீர் மேலாண்மை குறித்து முனைவர் பட்டம் பெற்றவர். தாடிக்குள்ளிருந்து ஒரு சிரிப்பை நமக்குக் கொடுத்து வரவேற்று அமரச் செய்தார். சுற்றிலும் கண்ணாடி அலமாரிகளுக்குள் இன்னும் புத்தக வடிவம் பெறாத தமிழ், சம்ஸ்கிருதச் சுவடிகள் மூலிகை வாசம் கலந்து மூச்சுவிட்டுக்கொண்டிருந்தன.
நேரடியாகவே ஆரம்பித்தேன், “எந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் நீர் மேலாண்மை உச்சம் பெற்றது என்று கூற முடியுமா?”
“சோழர்கள் காலம்தான். அப்போது 30 ஆயிரம் ஏரிகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். பாரம்பரிய தொழில்நுட்பத்தில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். ஒரு எடுத்துக்காட்டு: ‘சுருங்கைச் சிறுவழி’ என்பது. ஒரு செய்தியைச் சொல்லும்போது சிறிய துளையுடைய காதுக்குள் சென்று பரந்த அறிவை எப்படி உருவாக்குகிறதோ அதைப் போல சின்ன வழியினூடாகப் போகும் நீர் மிகுந்த வளத்தைக் கொடுக்கும் என்று இலக்கியத்தில் பதிவு இருக்கிறது. இதைப் பின்பற்றி குமிழித் தூம்பு என்ற அமைப்பை சோழர்கள் காலத்திலும் பல்லவர்கள் காலத்திலும் ஏற்படுத்திவைத்தார்கள்.”
“குமிழித் தூம்பு என்பது ஏரிக்கரையிலிருந்து உள்ளே 300 அடி தூரத்தில் இருக்கும். நாம் மாவு அரைக்கும் இயந்திரத்தில் பயன்படுத்துவோமே அது போன்ற அமைப்பைத் தரையில் செருகி வைத்திருப்பார்கள் (காண்க: படம்). அதைத் தூக்கினால் ஒட்டுமொத்த ஏரி நீரும் சுழன்றடித்துக்கொண்டு ஏரியின் தரைப் பகுதிக்குள் செல்லும். தரைப் பகுதியில் சுரங்கக் கால்வாய் அமைத்துத் தண்ணீரை வெளியில் கொண்டுவந்தார்கள். ஏரி நீர் குமிழித் தூம்பு வழியாகச் சுழன்றடிக்கும்போது ஏரியில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை அது அடித்துக் கொண்டுசெல்லும். அதனால் விவசாய நிலங்களுக்கு வளமான வண்டல் மண் கிடைக்கும்; வண்டல் மண் தேங்கி ஏரிகள் தூர்ந்துவிடுவதும் தடுக்கப்படும். இந்த அற்புதமான தொழில்நுட்பம் இன்று நம்மிடையே வழக்கத்தில் இல்லை. வெண்டையன் பட்டி என்னும் ஊரிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடங்களிலும் குமிழித் தூம்பு அமைப்பைப் பார்க்கலாம்” என்றார் மாறன்.
“வேறு என்னென்ன நுட்பங்களைப் பாரம்பரிய நீர் மேலாண்மையில் பின்பற்றினார்கள்?” என்று கேட்டேன்.
“ஏரிகளுக்கு நீர் கொண்டுவருவதற்காக நிறைய பாசனக் கால்வாய்களை சோழ மன்னர்கள் வெட்டியிருக்கிறார்கள். அவையெல்
லாம் அடுக்குத் தொடராக இருக்கும். மேட்டுநிலம் வழியாகக் கால்வாயைக் கொண்டுவந்து, ஏரியை நிரப்பிவிடுவார்கள். ஒரு ஊரில் 300 ஏக்கர் பாசனப் பரப்பு இருந்ததுஎன்றால் 300 ஏக்கரில் ஏரி இருக்கும். பாசனப் பரப்பு என்ன அளவோ அதற்குச் சமானமாக ஏரி நீர் நிரம்பி இருக்கும். இயற்கையாகவே ஏரியில் எந்தப் பகுதி பள்ளமாக இருக்குமோ அந்தப் பகுதியில் கலிங்கல் ஏற்படுத்துவார்கள். அந்தக் கலிங்கலிலிருந்துஅடுத்த ஏரிக்குத் தண்ணீர் கொண்டுசெல்வார்கள். இது ஒரு அற்புதமான நீர் வலைப்பின்னல். எவ்வளவு தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு தண்ணீரைத் தேக்கிவைத்துக்கொண்டுதான் கடலுக்கு நீரை அனுப்புவார்கள். நிலத்துக்கு உரிய நீர் நிலத்துக்கும் கடலுக்கு உரிய நீர் கடலுக்கும் போய்ச்சேர வேண்டுமல்லவா!” என்றார் மணி.மாறன்.
“நீர்நிலைகளை தெய்வத்துக்குச் சமானமாக வழிபட்டிருக்கிறார்கள் இல்லையா?” என்று கேட்டேன்.
“ நீர்நிலைகளை மட்டுமல்ல, அவற்றைப் பராமரிப்பவர்களையும் தெய்வத்துக்குச் சமானமாகக் கும்பிட்டிருக்கிறார்கள். கும்பகோணத்துக்கு அருகில் உள்ள மேக்கிரிமங்கலத்தைச் சேர்ந்த பிராமணர் ஒருவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கவிநாட்டுப் பேரேரியைப் பராமரிக்க வேண்டுமென்று தன் நிலத்தை தானமாகக் கொடுத்திருக்கிறார். அந்த நிலத்தின் வருவாயை வைத்து கவிநாட்டுப் பேரேரியைப் பராமரிக்க வேண்டுமாம். அந்த ஏரியில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. நிலத்திலிருந்து வரும் வருவாயைச் சுரண்டாமல் யார் ஏரியை ஒழுங்காகப் பராமரிக்கிறார்களோ அவர்களின் திருவடியைத் தலைமேல் வைத்துத் தாங்குவேன் என்று அந்த பிராமணர் எழுதியிருக்கிறார். இறைவனின் திருப்பாதத்தைத் தாங்குதல் என்பது வைணவ மரபு. நீர்ப் பராமரிப்பை தெய்வத் திருப்பணி போல் அந்தக் காலத்தில் கருதினார்கள்” என்றார் மணி.மாறன்.
“எது தேவையான மரபோ அதைத் தொலைத்து விட்டோம்!” என்றேன்.
“உண்மைதான். நம் உதாசீனத்துக்கு கொடுத்த விலைக்கு ஒரு உதாரணம், தஞ்சை மாவட்டத்தின் வண்டுவாஞ்சேரியில் உள்ள அஞ்சுதலை வாய்க்கால். அந்த ஊரில் பெய்யும் மழைநீரை வெளியில் கொண்டுசெல்வதற்கான வடிகால் அமைப்பு அது. ஒரே வாய்க்கால், அதன் நடுவில் நான்கு தடுப்புச் சுவர்கள் வைத்துத் தடுத்திருப்பார்கள். நான்காகத் தடுப்பதால் அதற்கு ஐந்து பிரிவுகள் ஏற்படும். அதனால் ஐந்து தலை வாய்க்கால் என்று பெயர். மழை பெய்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடும். பின்னால் வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதைப் பார்த்துவிட்டு, ஒரே வாய்க்கால்தானே, அதில் நடுவே எதற்கு நாலு தடுப்புகள் என்று அதையெல்லாம் புல்டோசரை வைத்து இடித்துத் தூக்கிய பிறகு மழை பெய்த காலங்களில் மூன்று நாட்கள் ஆனாலும் தண்ணீர் வடியாமல் இருந்திருக்கிறது. குறுகிய வழியில் செல்லும்போது நீர் வேகமாக அடித்துக்கொண்டு போகும். அகலப்படுத்தும்போது குறைந்துவிடும். இது தெரியாமல் நம் ஆட்கள் ஐந்து தலைகளை ஒரே தலையாக ஆக்கிவிட்டார்கள்” என்றார்.
“மன்னர்கள் போலவே ஆங்கிலேயர்களும் நிறைய செய்திருக்கிறார்கள்?”
“நீர்நிலை பாதுகாப்பு, பராமரிப்பு போன்ற விஷயங்களில் நாம் பிரிட்டிஷாரைக் கொஞ்சமும் குறைத்து மதிப்பிட்டுவிடலாகாது. காட்டாறுகள் ஓடும் இடங்களில் இரண்டு ஆறுகள் ஒன்றோடொன்று கலக்காத வகையில் பாலம் கட்டியிருக்கிறார்கள். தஞ்சைக்கு அருகில் பள்ளியேரி என்ற ஊரில் ஒரு ஆற்றுக்குக் கீழே இன்னொரு ஆறு ஓடும். இந்த நீரும் அந்த நீரும் ஒரு சொட்டு கூட கலக்காது. விடுதலைக்குப் பிறகான ஆட்சியாளர்கள்தான் நீர்நிலைப் பராமரிப்பில் உதாசீனம் காட்டினார்கள். குளங்களைத் தூர்த்துப் பேருந்து நிலையம், நகராட்சி நூலகம், அரசு மருத்துவமனை என்று கட்டியிருக்கிறார்கள். எங்கள் ஊரில் குப்புசாமிக் குளக்கரை என்ற முகவரி இருக்கிறது. ஆனால், குப்புசாமிக் குளம் போய் 30 ஆண்டுகள் ஆயிற்று. தஞ்சாவூரின் அகழி இங்கு நிலத்தடி நீருக்கான முக்கியமான ஆதாரம். அதன் ஒரு பகுதி முழுக்கத் தூர்த்து மாவட்ட மைய நூலகம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, புறநகர்ப் பேருந்து நிலையம் என்றெல்லாம் மாற்றிவிட்டார்கள்” என்றார்.
“மக்கள் எந்த அளவுக்குப் பொறுப்புடன் இருக்கிறார்கள்?” என்று கேட்டேன்.
“மக்களும் மோசம்தான். ஏராளமான குளங்கள் இருந்த தஞ்சையில் இன்று பெரும்பாலானவற்றை இழந்துவிட்டோம். ஆட்சித் தலைவரிடம் முறையிட்டு சாமந்தான் குளம் என்ற குளத்தை மீட்டெடுத்தோம். அந்தக் குளத்தைச் சுற்றியுள்ள மக்களுக்குத்தானே அது நல்லது! ஆனால், அவர்களோ வீட்டுக் கழிவுநீரையெல்லாம் அதில் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள். மாடியில் குடியிருப்பவர்கள் மாடியிலிருந்து கேரி பேக் குப்பையை அப்படியே குளத்துக்குள் தூக்கியெறிகிறார்கள். இதுதான் நம் லட்சணம். அது மட்டுமல்ல, கட்டிடங்கள் கட்டும்போது இங்குள்ள பல குளங்களுக்கான நிலத்தடி வரத்துக்கால்கள் அடைபட்டுப் போய்விடுகின்றன. எந்தெந்த வழிகளில் வரத்துக்கால்களும் வடிகால்களும் ஓடுகின்றன என்பது குறித்துத் துறைகளுக்கிடையில் தகவல் பரிமாற்றம் இல்லை என்பதால்தான் இந்தச் சிக்கல்” என்றார் மணி.மாறன்.
“தஞ்சை மண்ணின் நீர் வளத்தின் எதிர்காலம் என்ன?” என்று கேட்டேன்.
“பயமாகத்தான் இருக்கிறது. இனி மன்னர்களைப் போலவோ ஆங்கிலேயர் போலவோ ஆறு குளங்களை நம்மால் வெட்டவே முடியாது. இருப்பதைக் கெடுக்காமல் பாதுகாத்தால் போதும். இல்லையென்றால் நம் எதிர்காலத் தலைமுறையினர் படும் சிரமங்களுக்கெல்லாம் நாமே காரணமாகிவிடுவோம்” என்று கோபத்தோடு முடித்தார் மணி.மாறன். அவருடைய கோபத்தை நம் தலைமுறையினர் புரிந்துகொண்டால் நீர் வளத்தை மண்ணில் காணலாம். இல்லையென்றால் சரஸ்வதி மஹால் நூலகத்தின் அலமாரிகளில் உறங்கும் பழைய வரலாறாகவே தஞ்சையின் நீர் வளம் ஆகிவிடும்.
(சுற்றுவோம்...)