டெல்லியைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் திருப்தி ஷரன். மகப்பேறு மருத்துவராக தான் எதிர்கொண்டவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். “என் புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருந்தபோது, இந்தத் தலைமுறை இதைப் புரிந்துகொள்ளுமா எனத் தயக்கமாக இருந்தது. பள்ளி மாணவியின் பிரத்யேக அடையாளங்களான நீலநிறப் பாவாடையும் சிவப்பு ரிப்பனும் அணிந்த சிறுமி, தந்தையின் கையைப் பற்றியபடி மருத்துவமனைக்கு வருவதையும் சத்தமின்றி குழந்தையைப் பெற்றெடுப்பதையும் பிரசவ அறையின் படுக்கையிலிருந்து அவள் மெல்லக் கீழிறங்கி நடந்துசெல்வதையும் இந்தத் தலைமுறை எப்படிப் புரிந்துகொள்ளும்?
இன்னொரு கட்டுரையில், இளம் விதவை ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். எதிர்பாராத கருவுறுதலைக் கலைப்பதற்காக துடைப்பக்குச்சியொன்று அவரது கருப்பையினுள் நுழைக்கப்பட்டது. கரு கலைந்தததோடு செப்டிக் ஆகிவிட்டது. அதனால் அவரது குடலைச் சிறிதளவு வெட்டியெடுக்க நேர்ந்தது. இருந்தும் அவர் இறந்துவிட்டார். இந்த இரண்டு சம்பவங்களும் நடந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. இணைய வசதிகளோடு மேம்பட்டிருக்கும் இந்தத் தலைமுறை நிச்சயம் இப்படியான சம்பவங்களை எதிர்கொள்ள நேரிடாது என்ற நம்பிக்கையோடு அந்தப் புத்தகத்தை எழுதினேன். ஆனால், 2017-ன் தொடக்கத்தில் 19 வயதுப் பெண் ஒருவர் குடல் வெளித்தள்ளிய நிலையில் என்னிடம் அழைத்துவரப்பட்டார். கருவுற்று 20 வாரங்களைக் கடந்த நிலையில் கருக்கலைப்பு செய்ததால் ஏற்பட்ட விபரீதம் அது எனப் புரிந்தது. மருத்துவ வளர்ச்சி அவரைப் பிழைக்கவைத்துவிட்டது. இதைத் தவிர வேறெந்த மாற்றமும் நிகழ்ந்துவிடவில்லை. பதின் பருவத்துப் பெண்கள் பலர் கடைகளில் எளிதாகக் கிடைக்கிற கருச்சிதைவு மாத்திரைகளை வாங்கி, பெற்றோருக்குத் தெரியாமல் பயன்படுத்துகிறார்கள் என்பது நம் அனைவருக்குமான அபாய எச்சரிக்கை” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
விழிப்புணர்வு தேவை
டெல்லியில் எங்கோ ஒரு மகப்பேறு மருத்துவர் இப்படிச் சொல்கிறார் என்று எளிதில் புறக்கணித்துவிடுகிற செய்தியல்ல இது. உலக அளவில் பதின் பருவ அம்மாக்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. ‘பாப்புலேஷன் கவுன்சில் ஆஃப் இந்தியா’ சார்பில் நிரஞ்சன் சக்ருதி தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. இளைஞர்களின் ஆரோக்கியம், வளர்ச்சி, பாலியல், இனப்பெருக்க நலன் ஆகியவை சார்ந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வளர்ந்த பெண்களைவிட வளரிளம் பருவத்தைச் சேர்ந்தவர்களுக்கே முறையான கருத்தடை குறித்த விழிப்புணர்வு தேவை என்பதை அறியமுடிந்தது என்கிறார் நிரஞ்சன்.
கட்டற்ற சுதந்திரம்
இந்தியாவில் பதின் பருவக் கருவுறுதலுக்கு முக்கியக் காரணம் குழந்தைத் திருமணங்கள். பாலியல் வல்லுறவும் இளைஞர்கள் தாமாக விரும்பி ஏற்படுத்திக்கொள்ளும் உறவும் கணிசமான அளவில் பதின் பருவ கர்ப்பத்துக்குக் காரணமாகின்றன. தங்களுக்குக் கிடைக்காத எல்லாமே தங்கள் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்றே பெரும்பாலான பெற்றோர் நினைக்கிறார்கள். அதனால் குழந்தைகள் கேட்கும் முன்னரே அவர்களுக்கு அனைத்தையும் வாங்கித் தருகிறார்கள். குழந்தைகளிடம் அதிகக் கண்டிப்பு கூடாது; நட்புடன் பழக வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்களுக்குத் தரப்படும் கட்டற்ற சுதந்திரமே பல குழந்தைகளைப் பாதைமாற வைத்துவிடுகிறது.
தனித்துச் சந்திக்கும் பருவம்
பதின் பருவத்தில் எதையுமே பரிசோதித்துப் பார்க்கும் துடிப்பும் ஆர்வமும் இருபாலருக்குமே உண்டு. அவற்றுடன் ஹார்மோன்களின் தூண்டுதலும் சேர்ந்துகொள்ள அவர்கள் மிக எளிதாக எல்லைக்கோட்டைத் தாண்டிவிடுகிறார்கள். “ஆறாவது ஏழாவது படிக்கிற குழந்தைகள்கூட காதலில் விழுந்துவிடுகிறார்கள். பத்தாம் வகுப்பைத் தாண்டியதுமே சில குழந்தைகள் உடல் ரீதியான நெருக்கத்தை விரும்புகிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் பதின் பருவத்தினர் தனித்துச் சந்திக்கும் இடங்கள் குறைவு. ஆனால், கிராமங்களில் தனிமைக்கான இடங்கள் ஏராளம். அதனாலேயே நகரங்களைவிடக் கிராமங்களில் பதின் பருவத்தில் கருவுறும் பதின் பருவக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம்” என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத சென்னையைச் சேர்ந்த மாணவர்களுக்கான உளவியல் ஆற்றுப்படுத்துநர் ஒருவர்.
ஆபத்தும் பாதிப்பும்
பள்ளிப் பருவத்திலேயே கருவுறும் குழந்தைகள் விவரிக்க முடியாத மன/உடல் ரீதியான பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ரத்தசோகையும் மன அழுத்தமும் அவர்களை ஆட்கொள்ளும். 20 வாரத்துக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க சட்டத்தில் வழியில்லை என்பதாலும் வீட்டில் சொன்னால் பிரச்சினை பெரிதாகும் என்பதாலும் பலர் தாங்களாகவே மாத்திரைகளைச் சாப்பிடுகின்றனர். கிராமங்களில் கருக்கலைப்புக்கு மேற்கொள்ளப்
படும் கைவைத்திய முறைகளையும் சிலர் முயல்கின்றனர். இப்படி ஆபத்தான முறையில் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்பால் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சில நேரம் மரணத்துக்கும் அது வழிவகுக்கிறது. தொடர்ச்சியான உறவில் ஈடுபடும் குழந்தைகள் பாலுறவின் மூலம் பரவும் நோய்கள், கர்ப்பவாய்ப் புற்றுநோய் போன்றவற்றுக்கும் ஆளாக நேரிடுகிறது.
எல்லை தாண்டுவது தவறு
பருவ வயதில் எதிர் பால் ஈர்ப்பும் அதைத் தொடர்ந்த உடல் ரீதியான விழைவும் இயல்பானவைதான். ஆனால், அவற்றை எப்படி நெறிப்படுத்துவது, மடைமாற்றுவது, எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்வது என்பவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும். “இன்று இருக்கும் வாழ்வியல் முறைகளும் தொழில்நுட்ப வளர்ச்சியும் குழந்தைகளை இளம் வயதிலேயே வேறு தளத்துக்குக் கொண்டுசெல்கின்றன. ஸ்மார்ட் போன்களும் திரைப்படங்களும் அவர்களைக் காட்சி ரீதியாகக் கட்டிப்போட்டுத் தூண்டிவிடுகின்றன. சில வீடுகளில் குழந்தைகள் கருவுற்றிருப்பது தெரியாமலேயே பெற்றோர் இருப்பார்கள். முறையற்ற மாதவிடாயாக இருக்கக்கூடும் என நினைத்து அதைக் கண்டுகொள்வதில்லை. குழந்தை கருவில் நன்றாக வளர்ந்த பிறகே பெற்றோருக்கு விஷயம் தெரியவரும். ஆணோ பெண்ணோ எந்தக் குழந்தையாக இருந்தாலும் சிறு வயதிலேயே அவர்களிடம் நாம் பேசத் தொடங்க வேண்டும். உடல் மாற்றங்களை எடுத்துச் சொல்வதுபோல் உடல் தேவைகள் பற்றியும் அவர்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிப்பதுபோல் உடலின் தேவையும் இயல்பானதே என்பதையும் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். ஆனால், அதற்கான பருவம் இதுவல்ல என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டும். செடி வளர்ந்து மரமாகும்போதுதான் அது கனிகளைத் தாங்கும் வலிமையைப் பெறுகிறது; அதுபோலத்தான் ஒரு கருவைத் தாங்கும் அளவுக்கு உடலும் மனமும் வலுப்பெறும்வரை நாம் காத்திருக்க வேண்டும் என்பதைக் குழந்தைகளுக்குச் சொல்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் வந்தனா.
கவனிப்பு அவசியம்
குழந்தைகளிடம் ஒன்றை மறுத்துப் பேசும்போது அவர்கள் நம் பேச்சைக் கேட்பதில்லை அல்லது நாம் மறுக்கும் விஷயத்தை நமக்குத் தெரியாமல் செய்வார்கள். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தக் கூடாது என்றால் அதைப் பயன்படுத்தும் ஆர்வம் அதிகரிக்குமே தவிர, நாம் சொன்னவை அவர்களின் காதுக்குள் ஏறாது. அதற்குப் பதிலாக ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அவர்களுக்குச் சொல்லிவிட்டு, குறிப்பிட்ட நேரம் மட்டுமே போனைப் பயன்படுத்த வேண்டும் எனச் சொன்னால் அதற்கு ஓரளவு பலன் கிடைக்கும். இதே உத்தியைத்தான் பதின் பருவக் குழந்தைகளின் உடல் ரீதியான விழைவுக்கும் நாம் செயல்படுத்த வேண்டும். “குழந்தைகளின் நடவடிக்கைகளை நாம் கவனித்துவந்தாலே வேண்டாத விஷயங்களை நாம் தவிர்த்துவிட முடியும்” என்கிறார் வந்தனா.
பெற்றோரே முன்னோடி
“குழந்தைகள் அவர்களின் இயல்பான நிலையிலிருந்து மாறினால் ஏதோ சிக்கல் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். திடீரென எரிச்சல்படுவது, கோபப்படுவது, அமைதியாகிவிடுவது, தனிமையை நாடுவது, தேவையில்லாமல் அதிகமாகப் பேசுவது என அவர்களின் இயல்புக்கு மாறானவற்றைச் செய்வதே குழந்தைகள் பிரச்சினையில் இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி. அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவது மட்டும்தான் அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும். தவிர, இந்தக் காலத்துக் குழந்தைகளை உற்சாகப்படுத்துவது கடினம். முன்பெல்லாம் மிட்டாய் வாங்கித் தந்தாலே சந்தோஷப்பட்டு பெற்றோர் சொல்வதைக் கேட்பார்கள். ஆனால், இன்று குழந்தைகளுக்கு எல்லாமே கிடைக்கிறது. அவற்றைத் தாண்டி அவர்களை உற்சாகப்படுத்தி வழிக்குக் கொண்டுவருவது பெற்றோருக்கு இருக்கும் மிகப் பெரிய சவால். பெற்றோரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றோ என் பெற்றோர் திட்டுவார்கள் என்றோ சொல்கிற குழந்தைகள் இன்று குறைவு. இப்படியான சூழலில் பெற்றோர்தான் குழந்தைகளை விழிப்புடன் கையாள வேண்டும்” என்கிறார் வந்தனா. ஆனால், வனிதாவின் பெற்றோர் இதைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை. அதனால்தான் அவள் அப்படியொரு சிக்கலில் மாட்டிக்கொண்டாள். அது என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.
(நிஜம் அறிவோம்...)