கரு.முத்து
கவியரங்கம், பட்டிமன்றம் என்று ஓடிக்கொண்டே இருப்பவர் கவிஞர் நந்தலாலா. என்னதான் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடினாலும் நல்ல சாப்பாட்டைத் தேடிப் பிடிக்கவும் சலிப்பதில்லை. நல்ல சாப்பாட்டுக் கடைகளைத் தேடித் தேர்ந்தெடுத்து உண்கிறார். நந்தலாலாவின் சொற்திறமும் நயமும் நாடறிந்தது. இனிய தமிழ் சொற்கள் பிறப்பதற்கு அவரின் சுவையரும்புகளின் உணர்திறனும் ஒருகாரணம் என்பதை அவரைச் சந்தித்த சமயத்தில் உணர்ந்துகொள்ள முடிந்தது.
“சாப்பாட்டுல வெரைட்டியா சாப்பிடறதுதான் எனக்குப் பிடிக்கும். என் மனைவி நல்லா சமைப்பாங்க. பொதுவா, சமைக்கும்போது அதுல சாப்பிடறவங்களோட முகம் தெரியணும். அப்பதான் அதுல கூடுதல் ருசியிருக்கும். அதேபோல, சாப்பிட்டு முடிச்சவுடனே அத பாராட்டி நாலு நல்லவார்த்தை சொல்லணும். அப்பதான் சமைச்சவங்க முகம் மலரும். அதுக்கப்புறம் சாப்பாடும், வாழ்க்கையும் இன்னும் கூடுதலா மணக்கும்.
இப்ப நெறையபேரு சாப்பாட்டை மருந்தா நெனச்சு சாப்பிடறாங்க. இதச் சாப்பிட்டா அது கிடைக்கும், அதைச் சாப்பிட்டா இது சரியாயிடும்னு சாப்பிடறாங்க. எனக்கு அது சரியாப்படல. நமக்குப் பிடிச்ச உணவுகள் எல்லாத்துலயுமே உடம்புக்குத் தேவையான ஏதாவது ஒரு சத்து கிடைக்கும். நம்மளோட உணவுகள் அந்த அடிப்படையிலதான் வடிவமைக்கப்பட்டிருக்கு. இப்பெல்லாம் ஊறுகாய் கூடவே கூடாதுன்னு சொல்றாங்க. ஆனா, எனக்கு ஊறுகாய் இல்லாம சாப்பிடவே பிடிக்காது. அதுவும் பூண்டு ஊறுகாய்னா உசுரு. எங்க வீட்டம்மா பூண்டு ஊறுகாய வித்தியாசமா செய்வாங்க. பூண்டை தட்டி எலுமிச்சைச் சாறுல பத்துநாள் ஊறவெச்சு எடுத்து கொஞ்சம் காரம் கூடுதலா போட்டு அவங்க செய்யுற ஊறுகாய்க்கு நான் அடிமை.
அதேபோல, பூண்டுபோட்டு காரக்குழம்பு வைப்பாங்க. எண்ணெய் மிதக்கிற அதை ரெண்டு மூணு நாளைக்கு வச்சிருந்து ஊத்திக்குவேன். புளிக்கு பதிலா எலுமிச்சைச்சாறு கலந்து ரசம் வைப்பாங்க. அது அப்படியே நாக்குல ஒட்டிக்கும்.
எந்தக் குழம்பாயிருந்தாலும் நெறைய காய்கறிகள் போட்டு வெச்சா அது தனி ருசிதான். நெறைய காய்கறிகள், கொஞ்சமா சோறு என்பது என் வழக்கம். வீட்டுலயும் அப்படித்தான் செய்றாங்க. ஆனா, ஒரே நேரத்துல ரெண்டு மூணு காய்கறிகளுக்கு மேல செய்ய முடியாதுல்லையா. அதை நிவர்த்தி செய்யுற சாப்பாடு திருச்சி அரசுத் தலைமை மருத்துவமனைக்கு எதிர்ல இருக்கிற செல்லம்மாள் சமையல்லதான் கெடைக்குது.
மகள் சென்னையில இருக்கிறதால மனைவியும் அடிக்கடி சென்னை போயிடறாங்க. அதனால ஹோட்டல் சாப்பாடு சாப்பிடற சூழல் ஏற்படுது. வாழப்பூ உருண்டைக் குழம்பு, சவ்சவ் அல்லது பெரண்டைத் துவையலும், பனிவரகு அல்வா இதெல்லாம் செல்லம்மாள் கடையில சூப்பரா இருக்கும்னாங்க. நானும் அந்தக் கடையைத் தேடிப்போனேன். அதோட பாரம்பரிய சுவை பிடிச்சுப்போய் இப்ப என்னோட நண்பர்கள், இலக்கியவாதிகள், விருந்தினர்கள்னு எல்லாத்துக்கும் பிடிச்சது செல்லம்மாள் சமையல் என்றாகிவிட்டது” எனத் தீர்மானமாகச் சொன்னார் நந்தலாலா.
திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனியில் உள்ள செல்லம்மாள் சமையல் உணவகத்துக்கு ஏகப்பட்ட சிறப்புகள் உண்டு. இங்கே முழுக்க முழுக்கப் பெண்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள். சமையல் அனைத்துமே விறகடுப்பில் வைத்து மண்பானைகளிலும் மண் சட்டிகளிலும் மட்டுமே சமைக்கப்படுகிறது. மசாலா சாமான்களை அங்கேயே உள்ள எந்திர அம்மி மற்றும் உரல்களில் அரைத்துப் போடுகிறார்கள். சமையலுக்கு நாட்டுமரச் செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். 18 வகையான காய்கறிகள், காய்கறி சூப், பானகம், மூலிகைக் குடிநீர், சிறுதானியப்பாயசம் எனக் கலந்துகட்டி முழுமையான விருந்தாக இருக்கிறது மதியச்சாப்பாடு.
பஃபே சாப்பாடு 180 ரூபாய். அது வேண்டாமென்றால் வறுவல், பொறியல் வகையறா தலா 20 ரூபாய், குழம்பு வகையறா தலா 15 ரூபாய், சாதம் 15 ரூபாய். எது வேண்டுமோ அதை மட்டும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு நடையைக் கட்டலாம். சாப்பாட்டில் நாம் விரும்பிய சுதந்திரம் கிடைக்கிறது என்பதாலேயே நந்தலாலா உள்ளிட்டவர்கள் இங்கு வருகிறார்கள்.
இதை நிர்வகிக்கும் செல்வி மோகன் குடும்பத்தலைவி. அரசாங்க அதிகாரியான கணவர் கொடுத்த ஊக்கத்தில் 2012-ல் இந்த உணவகத்தைத் தொடங்கி இருக்கிறார். பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சிக்கு மக்கள் கொடுத்த ஒத்துழைப்பால் தற்போது திருச்சியின் முக்கிய அடையாளமாகவே மாறியுள்ளது இந்த உணவகம். விஐபிக்கள் முதல் சாமானியர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இந்த உணவகத்தைத் தேடி வருகிறார்கள்.
இனி, நந்தலாலாவுக்குப் பிடித்த வாழைப்பூ உருண்டைக் குழம்பு, பனிவரகு அல்வா செய்முறையைப் பார்ப்போம்
வாழைப்பூ உருண்டைக் குழம்பு: ஐந்து நபர்களுக்குத் தேவையான உருண்டைக் குழம்புக்கு - கடலைப் பருப்பு 150 கிராம், துவரம் பருப்பு 150 கிராம், வாழைப்பூ 1, வரமிளகாய் 6, இஞ்சிப்பூண்டுபேஸ்ட் 25 கிராம், சின்ன வெங்காயம் 50 கிராம், சோம்பு பத்துகிராம், உப்பு, மஞ்சள்தூள் ஆகியவை தேவையான அளவு. கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து எடுத்துக்கொண்டு அத்துடன் கழிவு நீக்கப்
பட்ட வாழைப்பூ உள்ளிட்ட மற்ற பொருட்களையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
பின்பு அந்தக் கலவையை சிறுசிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
குழம்புக்குத் தேவையானவை - எண்ணெய் 25மிலி, சின்ன வெங்காயம் 50 கிராம், தேங்காய் ஒரு மூடி, பட்டை 4, கிராம்பு 4, இஞ்சிப்பூண்டு பேஸ்ட் 25 கிராம், சோம்பு 10 கிராம், தக்காளி கால்கிலோ, மிளகாய், மல்லி, மஞ்சள்தூள் ஆகியவை தலா 25 கிராம், தேவையான அளவு உப்பு.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டைகிராம்பு போட்டு பொன்னிறமாக பொறித்தபின், இஞ்சிப்பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் அத்துடன் சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும் மல்லி, கருவேப்பிலை, மிளகாய், மல்லி, மஞ்சள் தூளையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயையும், பிடித்து வைத்துள்ள உருண்டைகளையும் குழம்பில் போட வேண்டும். உருண்டைகள் நன்றாக வெந்து மேலேவந்ததும் குழம்பை இறக்கிவிடலாம்.
பனிவரகு அல்வா:தேவையான பொருட்கள் - பனிவரகு அவல் 100 கிராம், நாட்டுச்சர்க்கரை 200 கிராம், நெய் சிறிதளவு. பனிவரகு அவலை வாணலியில் போட்டு சிறிதளவு நெய்சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சூடு ஆறியதும் அதை மிக்சியில் போட்டு குருணையாக அரைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் 150 மிலி தண்ணீர் சேர்த்து வேகவிட வேண்டும். நன்றாக வெந்ததும் அத்துடன் நாட்டுச்சர்க்கரையை சிறிது சிறிதாகச் சேர்த்து கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாகக் கெட்டியானதும் நெய் ஊற்றி இறக்கிவிடலாம். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையுடன் நான்கைந்து ஏலக்காயைத் தட்டிப்போட்டால் பனிவரகு அல்வா இன்னும் சுவைக்கும் - மணக்கும்!