விஐபி-க்களின் விருந்து சாப்பாடு 23: எழுத்தாளர் ராஜேஷ்குமார்


ரோகிணி

சொல்லும் எதையுமே சுவையாக, சுவாரஸ்யமாக, வித்தியாசமாகச் சொல்லக்கூடியவர் க்ரைம் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமார். “உங்களைக் கவர்ந்த உணவகம், உணவு...” என்று நான் ஆரம்பித்ததுமே அத்தனை ஆனந்தமாய் விவரிக்க ஆரம்பித்துவிட்டார்.

“கோயமுத்தூர் ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணாவுக்கு அடுத்த சந்துல திருப்பதி மெஸ்ன்னு ஒரு உணவகம். பார்த்தா வீடு போலதான் இருக்கும். சாயங்காலம் ஏழு மணிக்கு கூட்டஞ்சேர ஆரம்பிச்சுடும். அங்குள்ள காம்பவுண்டுக்குள்ளேயே சேர், டேபிள் போட்டு டிபன் பரிமாறுவாங்க பாருங்க... எதைச் சாப்பிடறது. எதை விடறதுன்னே தெரியாது. அந்த அளவுக்கு சுவை மணக்கும்.

பார்த்ததுமே இட்லி, தோசை, ஊத்தாப்பம், ரோஸ்ட், ஆப்பம், இடியாப்பம்ன்னு கவரும். நாலஞ்சு வகை சட்னிகளும் இருக்கும். ராத்திரி பத்துப் பதினோரு மணி வரை கூட்டம்தான்.

அந்தக் கடைக்கு நான் பதினஞ்சு வருஷத்துக்கு மேல போறேன். பசங்க வெளியூர்லருந்து வந்தாலும் கூட அங்கதான் கூப்பிடுவாங்க. அவங்க விதவிதமா ஆர்டர் சொல்லிச் சாப்பிட்டாலும் எனக்குப் பிடிச்சது ஆனியன் ஊத்தாப்பமும், கத்திரிக்காய் சட்னியும்தான். அப்படியொரு ஆனியன் ஊத்தாப் பத்தை வேற எந்தக் கடையிலும் பார்க்க முடியாது. புளிப்பே தெரியாத மாவுல பாதிக்கும் வெங்காயம்தான் கொட்டிக் கிடக்கும். மொறு மொறுன்னு மேல பொடியெல்லாம் தூவிக் கொடுப்பாங்க. அதோட தேங்காய் சட்னி, கொத்துமல்லி சட்னி, சாம்பார் எல்லாம் தந்தாலும் அதைத்தாண்டி கத்திரிக் காய் சட்னின்னு ஒண்ணு கொடுப்பாங்க பாருங்க... அதுக்கும் அந்த ஆனியன் ஊத்தாப்பத்துக்கும் சும்மா... அப்படி இருக்கும். வயிறு கெடாது. விலையும் ரொம்ப சீஃப்.

நான் பார்த்த அளவுல அங்க கணவன், மனைவி ரெண்டு பேரோட கைப்பக்குவம்தான். சப்ளைக்கு மட்டும்தான் ஆள் வெச்சிருக்காங்க. அரசு அதிகாரிகள், ஐடி இன்ஜினீயர்கள், மார்வாடிகள்ன்னு பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக் காங்க. அங்கே சாப்பிட்டுப் பழகிட்டு எங்கியும் எனக்கு மட்டு மல்ல, என் குடும்பத்துக்கே பிடிக்கிறதில்லை” என்று முடித்தார் ராஜேஷ்குமார்.

வெங்கடேஷ் - உமாராணி தம்பதி

 அன்னபூர்ணா மட்டுமல்ல, நிறைய பெயர் பெற்ற அசைவ ஹோட்டல்களும் நிறைந்துள்ள பகுதியில் ஓர் ஓரமாகத்தான் இருக்கிறது அந்த திருப்பதி மெஸ். மாலை 6 மணி சுமாருக்கு அங்கு சென்றேன். சாத்தியிருந்த இரும்பு ‘கேட் ‘டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். சமையலறையில் சட்னி, மாவு எல்லாம் கிரைண்டரில் ஓடிக்கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் ஒரு ஆணும் பெண்ணும் வேகமாக ஓடிவந்தனர். அவர்கள்தான் அந்த மெஸ்ஸை நடத்தும் வெங்கடேஷ் - உமாராணி தம்பதி. விஷயத்தைச் சொன்னதும், “சப்ளை ஏழரை மணிக்குத்தான் ஆரம்பிக்கும். அப்ப வாங்களேன்” என்றனர்.  சின்னதாய் ஒரு நகர் வலம் அடித்து விட்டு மீண்டும் ஏழரை மணிக்கு அங்கே யூ டர்ன் அடித்தேன். கதவு திறந்திருக்க, அந்த காம்பவுண்டே புதுப்பொலிவு பெற்றிருந்தது. டேபிள், சேர்கள் எல்லாம் பரப்பப்பட்டு அத்தனையும் வாடிக்கை யாளர்களால் நிறைந்திருந்தது.

ராஜேஷ்குமார் குறிப்பிட்ட ஆனியன் ஊத்தாப்பம், கத்திரிக்காய் சட்னியுடன் இன்னும் சில சட்னி அயிட்டங்களையும் கொண்டுவந்து என் முன்னே வைத்துவிட்டுப் பேசினார் வெங்கடேஷ்.

 “1998-ல் நாலு பேர் சேர்ந்து பக்கத்துல கொஞ்சம் தள்ளி ஒரு டிபன் கடை ஆரம்பிச்சோம். ஒரு வருஷம் நடந்துச்சு. பார்ட்னர்களுக்குள் சரி வரலை. அதனால பிரிச்சுட்டு இங்கே வந்து தனியா கடை போட்டோம். ஆரம்பத்துல கூட்டம் கம்மியாத்தான் இருந்துச்சு. ஆனா இப்ப, ஒரு நாளைக்கு ஐந்நூறு பேருக்குக் குறையறதில்லை. எல்லாமே என் மனைவியின் சமையல்தான். கூடமாட ஒத்தாசை மட்டும்தான் நான் செய்யறேன். கூட்டம் ஜாஸ்தியா வந்ததால சப்ளையர் மட்டும் வச்சுட்டோம். ஒரு தடவை இங்கே சாப்பிட்டுப் பார்த்தவங்க அப்புறம் ஃபேமிலியவே கூட்டீட்டு வந்துடுவாங்க; இல்லாட்டி பார்சல் வாங்கிட்டுப் போவாங்க.

என்னதான் விலைவாசி ஏறினாலும் தரத்துலயும், அளவுலயும் நாங்க குறை வைக்கிறதில்லை. சுத்தமான சன்ஃபிளவர் ஆயில், நல்ல பதமா விளைஞ்ச காய்கறிகதான் பயன்படுத்தறோம். காலையில மாவு ஆட்டி வச்சா, அதை சாயங்காலம் கரெக்டா பயன்படுத்திடுவோம். மாவு பழசு, புளிச்சுப் போச்சுங்கிற கம்ப்ளைன்ட் வராம பார்த்துக்கறோம். ராஜேஷ்குமார் எங்களோட ரொம்ப நாள் கஸ்டமர். பெரும்பாலும் குடும்பத்தோடதான் வருவார். அவர் ஆனியன் ஊத்தாப்பத்தோடு ரெண்டு இட்லியும் சில சமயம் சாப்பிடுவார். ரெண்டுக்குமே கத்திரிக்காய் சட்னியத்தான் இஷ்டப்பட்டு எடுத்துக்குவார்” என்று சொன்ன வெங்கடேஷ், ஆனியன் ஊத்தாப்பம், கத்திரிக்காய் சட்னி செய்முறை பக்குவத்தையும் சொன்னார்.

ஆனியன் ஊத்தாப்பம்: ஒரு கிலோ அரிசிக்கு 200 கிராம் உளுந்து. இரண்டையும் தனித்தனியா 12 மணி நேரம் ஊற வச்சு தனித்தனியாவே கிரைண்டர்ல ஆட்டிக்கணும். இதுல உளுந்தம் மாவு  ஆட்டறதுலதான் பக்குவமே இருக்கு. ஒரேயடியா  தண்ணிய ஊத்திடாம தண்ணிய தெளிச்சுத் தெளிச்சு  உளுந்த மாவை ஆட்டணும். காலையில மாவு ஆட்டி வச்சா, சாயங்காலம் சரியான புளிப்புப் பதத்துக்கு வந்துடும். 100 மிலி மாவில் ஊத்தாப்பம் ஊற்றினால் அதில் 100 கிராம் அளவுக்கு நறுக்கிய  வெங்காயம் தூவணும். தேவைப்பட்டால் இட்லிப் பொடி, குருமிளகுத்தூள், பெருங்காயப் பொடி இவற்றையும் தூவி நன்றாக மொறுக வேகவிட்டு எடுத்தா அருமையான ஆனியன் உத்தாப்பம் ரெடி.

கத்திரிக்காய் சட்னி: அரைக் கிலோ கத்திரிக்காயையும் அரைக் கிலோ தக்காளியையும் நன்றாகக் கழுவி, அறுத்து வெச்சுக்கணும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கருவேப்பிலை தாளிக்கணும். அதோட வெங்காயம், பச்சை மிளகாய், வரமிளகாய் எல்லாம் போட்டு வதக்கணும். பிறகு அதில், அறுத்து வச்ச தக்காளியையும் கத்திரிக்காயையும் போட்டு அரை லிட்டர் தண்ணி சேர்த்து வேகவிடணும். அது வெந்ததும் தண்ணிய வடிகட்டிட்டு வெந்த தக்காளி, கத்திரிக்காய் கலவையை மட்டும் அரைச்சு எடுத்தா கத்திரிக்காய் சட்னி ரெடி. தேவைப்பட்டால் வடிகட்டி வச்ச தண்ணீரையும் இந்தச் சட்னியில் கலந்துக்கலாம்.

வெங்கடேஷ் பக்குவம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் தந்த ஆனியன் ஊத்தாப்பத்தையும் கத்திரிக் காய் சட்னியையும் ஒரு கை பார்த்தேன். அவர் தந்திருந்த வெங்காய ஊத்தாப்பத்திற்கு  பயன்படுத்திய  மாவைக்  கொண்டு மற்ற ஹோட்டல்களில் இரண்டு ஊத்தாப்பம் ஊத்திவிடுவார்கள். அதையும் சில இடங்களில், வெந்தும் வேகாததுமாய் கொண்டு வந்து வைப்பார்கள். அல்லது அதுபோக்கில் கருக விட்டிருப்பார்கள். அப்படி எந்தக் குறையும் சொல்லமுடியாத படிக்கு நேர்த்தியாகத் தந்திருந்ததைப் பார்த்தபோதே வெங்கடேஷ் - உமாராணி  தம்பதியின் தொழில் பக்தியைப் புரிந்து கொள்ள முடிந்தது.

x