காலம் தோலுரித்துக் கொண்டே இருக்கிறது. காலத்துக்கேற்ற கோலம் போடுவதற்கு எல்லோரும் தயாராகி வருகிறோம். அதிலே பயன்பாட்டில் இருந்த பலவற்றை இழந்துவிட்டோம். நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது வீட்டுக் கொல்லையில் நின்ற பலா மரத்தை வெட்டி நடை வண்டி செய்து தந்தார் தந்தை. செய்து தந்த தச்சருக்குப் பாராட்டு விழா நடத்தாத குறைதான். அன்று நடை வண்டியில் நடந்து பழகிய நான் இன்றும் நடந்துகொண்டே இருக்கிறேன். காலம் மாறினாலும் சிலதை இழக்கவில்லை. ஒரு தேசாந்திரியைப் போல் முப்பது வருடமாக ஊர் ஊராய் அலைந்தும் உணவகங்களில் உண்டும் இன்னும் உப்பிப் போகாமலும் உருக்குலையாமலும் என்னைத் தக்கவைத்துக்கொள்ள அந்த நடைதான் உதவுகிறது.
நடை வண்டியும் விடை பெற்றுவிட்டது. நடத்தையும் விடை பெற்றுவிட்டது. இப்படி நாம் இழந்தவற்றில் ஒன்று கடிதம் எழுதுவது. மடல் தீட்டுகிற பழக்கம் மாதவி காலத்தில் தொடங்கியது. இப்போது மாதவி மீண்டு வந்தாலும் கோவலனுக்கு புலனத்தில்தான் ( whats app) தகவல் தருவாள். மடல் எழுதுவதிலும் வந்த மடலைப் பிரித்துப் படிப்பதிலும் கிடைக்கிற சுகம் அலாதியானது. தென்காசி திருவள்ளுவர் கழகத்துக்கு உரையாற்ற ஒப்புக்கொண்ட பெருமக்கள், ஒப்புதல் தெரிவித்து எழுதிய கடிதங்களை எல்லாம் தென்காசி திருவள்ளுவர் கழகம் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதி தஞ்சை வேர்ட்ஸ்வொர்த் புத்தக நிலையம் நடத்திய புத்தகக் கண்காட்சிக்கு ஒப்புதல் கேட்டு ஆண்டு பல கடந்தபிறகு அடியேனுக்கு ஒரு மடல் வந்தது. எனக்கு வந்த மடலுக்கு எழுதிய பதில் கடிதங்களை நகல் எடுத்து வைத்திருந்தால் ஒரு புத்தகம் போட்டிருக்கலாம்தான்.
அப்போதெல்லாம் சென்னை வந்தால், வருகிற மடல்களுக்குப் பதில் எழுதி அஞ்சல் செய்வதற்கு அண்ணாசாலை அஞ்சலகம் செல்வேன். அங்கிருந்த அலுவலர்கள், அதிகாரிகள் எல்லாம் எனக்கு அறிமுகமாகி நண்பர்களாகவும் உருமாறினார்கள். அஞ்சலகம் எதற்கும் அஞ்சாமல் தொடர்ந்து இயங்குவதே உங்கள் அஞ்சலை நம்பித்தான் என்று என்னை நையாண்டி செய்வார்கள். நானும் நகைத்துவிட்டு வந்துவிடுவேன். அப்படித்தான் ஒருநாள் மேடைப் பேச்சின் சுவாரஸ்யத்தைப் பற்றி பேச்சு வந்தபோது, “நாங்கள் அழைத்தால் உரையாற்ற வருவீர்களா? ’’ என்று வினவினார்கள். “அஞ்சாமல் வருவேன்” என்றேன். அண்ணாசாலை தலைமைத் தபால் அலுவலக தமிழ்ப் பேரவை உதயமாகிறது. மேல் மாடி கூட்ட அரங்கில் ‘கவிதை பிறந்த கதை’ என்ற தலைப்பில் எனது சொற்பொழிவு.
“வானத்தைப் பார்த்து ‘சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ’ என்றான் பாரதி. ‘ ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுதிட ; என்னை எழுதெனச் சொன்னது வானம்’ என்றான் பாரதி தாசன். சைக்கிளைப் பார்த்து ‘ அக்காளும் தங்கையும் போல் அவை செல்லும் அழகைப் பார்’ என்றான் கவிமணி. மண்ணரசையும் விண்ணரசையும் விரும்பாமல் திருமலையில் ஒரு மரமாக நிற்கவும் படியாகக் கிடக்கவும் ஆறாகப் பாயவும் திருவேங்கடச் சுனையில் மீனாகத் திரியவும் ஆசைப்பட்டபோது குலசேகராழ்வருக்குக் கவிதை பிறந்து விடுகிறது. ‘ ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன். தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் மதியுடையேன் ஆவேனே’ என்பது பாட்டு.
தடுக்கி விழுந்தாலும் குழந்தை ஒன்று தவறிப் போனாலும் காதலி ஊடல் கொண்டாலும் காவலன் சினம் கொண்டாலும் கேட்டது கிடைக்காவிட்டாலும் நினைத்தது நடக்காவிட்டாலும் கவிதை பிறந்துவிடும். ஆனால், நமது வரலாற்றுப் பெருமைக்கும் வளமார்ந்த சூழலுக்கும் கட்டியம் கூறுகிற கவிதை பிறந்த கதையை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். வட புலத்து மன்னன் பிரகத்தன் என்பவன் தென் தமிழகத்துக்கு சங்கம் வைத்து தமிழ் வளர்த்த அந்த நாளில் சுற்றுலா வந்தான். காண வேண்டிய இடங்களை எல்லாம் கண்டுகளித்த பின்னால் மாடக்கூடல் மதுரை நகரில் சில நாட்கள் தங்கியிருந்தான். அந்தச் சமயத்தில் கபிலர் என்ற கவி அரசனுக்கும் பிரகத்தன் என்ற புவி அரசனுக்கும் எப்படியோ தொடர்பு உண்டாயிற்று. தமிழை பிழை இல்லாமல் உச்சரிக்க முடியாமல் தவித்த பிரகத்தன், கேள்வி ஞானத்தால் கிடைத்த அறிவைக் கொண்டு கபிலப் புலவனோடு குறைபட உரையாடினான். பிரகத்தன் தமிழ்ப் பேச்சு கேட்கும்படியாக இல்லை; நகைக்கும்படியாக இருந்தது. தமிழில் தடுமாறிய பிரகத்த மன்னன் கபிலப் புலவனிடம் ‘ தமிழின் இன்பப் பொருளின் நுண்மை துலங்குமாறு எழுதப்பட்ட காதற் காவியம் ஏதேனும் உளதோ?’ என்று வினவினான். பிரகத்த மன்னனின் தமிழ் அறியாமைக்கு வருந்தி அவனுக்கு தமிழறிவு புகட்ட வேண்டி வினவிய வினாவுக்கு விடை சொல்லும் முகமாக மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் அழகை எல்லாம் சொல்லக் கருதினார் கபிலர்.
தமிழ் மக்களின் காதல் வாழ்வில் ‘அறத் தொடு நிற்றல்’ என்றொரு துறை உண்டு. தான் கண்டு காதலித்தவனையே மணம் புரிய வேண்டும் என ஒரு பெண் கருதுவாள். கனாவும் காண்பாள். பெற்றெடுத் தவர்கள் இன்னொரு ஆடவனுக்கு அவளை மணம் செய்துவைக்கத் திட்டமிடுவார்கள். இந்த நிலையில் பெற்றோருக்குத் தனது காதலைத் தெரிவிக்க விரும்பினாலும் நாணம் வந்து வழி மறிக்கும். நாணமும் வெட்கமும் அவளைத் துரத்தும்போது தன் தோழியின் உதவியை நாடுவாள். பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்டபோது அவன்தான் என்னைக் காப்பாற்றினான். தன்னைக் கொல்ல வந்த மதம் பிடித்த யானையிடம் இருந்தும் அவன் என்னைக் காப்பாற்றினான். அதனால் அவனையே மணம் புரிய மனம் அவாவுகிறது என்றெல்லாம் தன் உள்ளக் கிடக்கையைத் தோழியிடம் சொல்ல... தோழியோ அத்தகவலை செவிலித் தாயிடம் சொல்லிவைக்க... தக்க நேரம் பார்த்து செவிலித்தாய் நற்றாயின் காதில் கச்சிதமாகப் போட்டுவைப்பாள். காரியம் ஆகிவிடும். கடி மணம் கைகூடும். கனிந்த காதல் கடி மணமாகக் கைகூட இத்தனை படிகளைக் கடந்தாக வேண்டும். இதைத்தான் அறத்தொடு நிற்றல் என்று சுட்டுகிறது. பண்பாடு நிறைந்த தமிழர் தம் நாகரிகத்துக்கு இது ஓர் நல்ல அடையாளம்.
அறத்தொடு நின்ற கவினுறு காதல் கரை சேர்ந்த குறிஞ்சி வளத்தையும் குறிஞ்சி நிலத்தில் மலரும் நூற்றுக்கும் அதிகமான தமிழர் தம் பயன்பாட்டில் இருந்த வண்ண மலர்களையும் தேன் சொட்டும் குறிஞ்சி நிலத்தில் தான் பெற்ற அனுபவங்களையும் இழைத்தும் குழைத்தும் ஆரிய மன்னன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்த கபிலர் தந்த கவிதையே குறிஞ்சிப் பாட்டு. ஆழ்ந்த புலமையும் குறைவிலாத திறமையும் கொண்ட கபிலர் வட புலத்து மன்னன் பிரகத்தனுக்கு தமிழை அறிவுறுத்த பாடிய குறிஞ்சிப் பாட்டில்தான்...
..........வள் இதழ்
ஓண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம்,
எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா,
விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
தாழை, தளவம், முள் தாள் தாமரை,
ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி,
நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும்” என்று நான் சொன்னதும் அதிகாரிகள், அலுவலர்கள் என அத்தனை பேரும் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்.
“ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழை அறிவுறுத்த கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் இத்தனை மலர்கள் பூத்துச் சிரிக்கிறது என்றால் குறிஞ்சி நிலத்தில் இயற்கைத் தாயின் நாட்டியம் எவ்வாறு எல்லாம் எங்கள் மண்ணில் இருந்தது என்ற பெருமிதத்தில்தானே கபிலர் பாடியிருப்பார். சீர்காழித் திருக்குளத்தில் நீராடி விட்டுவந்த தந்தை தன் மூன்று வயது பாலகன் சம்பந்தரிடம் கடைவாயில் எச்சில் ஒழுகுவது கண்டு உனக்குப் பாலூட்டியவர் யார் என்று கேட்டதுதான் தாமதம்.’தோடு உடைய செவியன்; விடை ஏறி ஓர் தூவெண் மதி சூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்’ என்று பாடத் தொடங்கி சிவம் என்னும் செம்பொருள் உறையும் இடத்துக்கெல்லாம் கால்நடையாகவே நடந்து சம்பந்தர் பதினாயிரம் திருப்பதிகங்கள் பாடினார் என்றபோது வியக்காமல் இருக்க முடியவில்லைதானே!
இப்படி அப்பரும் சுந்தரரும் சம்பந்தரும் பாடிய தேவாரப் பனுவல்கள் எழுதியதெல்லாம் கிடைத்ததா? பாடிய பதிகங்களை நம்மால் பாதுகாக்கத்தான் முடிந்ததா? இருமுறை கண்ட சோழன் என்று தமிழுலகம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் இராசாதித்த சோழன் முயன்றிருக்காவிட்டால் தேவாரம் என மூவர் இறைவனுக்குச் சூட்டிய பாவாரம், தமிழன்னையின் கழுத்தை அலங்கரிக்கும் பூவாரம் நமக்குக் கிடைத்திருக்காது என்றல்லவா வரலாறு சொல்கிறது.
திருக்கோயில்களில் நாள்தோறும் ஓதுவார்க்கு வரியிலா நிலங்களையும் பொன்னையும் பொரு ளையும் வாரிக்கொடுத்தான் சோழ மன்னன். கல்யாணம் செய்துகொள்ள காசில்லாமல் அவதிப்பட்ட பிரம்மச்சாரி தருமிக்காக ஆலவாய்அப்பனே ‘கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி’ என்ற அகவல் பாட்டை எழுதினான் என்றால்ஆண்டவனே ஆனாலும் அருந்தமிழில் எழுதினால் தான் மரியாதை மிஞ்சும் என்பதல் லவா தமிழின் நிலையாக இருந்தது. இன்று தமிழ்த் தேரின் வடம் பிடிக்க தமிழர்கள் தயாரில்லை. ஆரிய மன்னனுக்குத் தமிழின் அருமையை உணர்த்த கபிலர் குறிஞ்சிப் பாட்டு பாடிய மண்ணில் இன்று மூச்சில் தைத்த முள்ளாக பேச்சிலும் எழுத்திலும் கூட தமிழ் வராமல் பார்த்துக்கொள்கிற நம்மை தமிழ்த்தாய் மன்னிப்பாள் என்றா கருதுகிறீர்கள்?’’ எனப் பேசி முடித்தபோது கை குலுக்கிய பெரியவர் ‘எக்ஸலன்ட்’ என்று சொன்னார் என்றால், நான் எந்தக் கோயிலில் போய் முறையிடுவேன் என்று ஏங்கியவனாய் அரங்கை விட்டு வெளியேறி னேன். ஆனாலும் அண்ணாசாலை அஞ்சலக அலுவலர்கள் தமிழுக்கு எடுத்த விழாவை நினைக்காத நாளில்லை.
( இன்னும் பேசுவேன்...)