பிளாஸ்டிக் தடை... சரியான நடவடிக்கை!


வரும் ஜனவரி முதல் தேதியிலிருந்து, ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தவும், வைத்திருக்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்திருக்கிறது தமிழக அரசு.

சுற்றுச் சூழல் சீர்கேட்டைத் தடுக்கவும், மண் மலடாவதைத் தவிர்க்கவும் தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த முடிவை வரவேற்போம். ஆனால், தடையை அமல்படுத்துவதற்கு முன்பு, அரசு தகுந்த முன்னோட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக, அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் கருத்தையும் கேட்டறிந்திருக்க வேண்டும்.

2022-ம் ஆண்டு முதல், மக்காத பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை அறிவித்திருக்கிறது. இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட பிளாஸ்டிக்உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசியது மத்திய அரசு. ஆனால், தமிழக அரசு அப்படிப் பேசாதது பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பிளாஸ்டிக் உற்பத்தியில் தமிழகத்தில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. இதை நம்பி சுமார் மூன்று லட்சம் பேர் இருக்கிறார்கள்.

ஒருமுறை உபயோகத்திற்கான பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கவும் ஜனவரி முதல் தேதியிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், டிசம்பர் 31-ம் தேதி வரை உற்பத்தி செய்வதை என்ன செய்வார்கள்? இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், ஒரு தெளிவான திட்டமிடல் இல்லாமலே தடையை அறிவித்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. அதனால்தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களும் இன்னும் பெரிய அளவில் புழக்கத்திற்கு வரவில்லை.

x