கா.சு.வேலாயுதன்
அசரடிக்கும் ஆறடி உயரம். அத்லெடிக் உடம்பு. கழுத்தைத் தாண்டி முதுகைத் தொடுகிற நீ...ள தலைமுடி, தாடி எல்லாம் பார்த்துவிட்டு நரேஷ்குமாரை ஏதோ வடநாட்டிலிருந்து கோவைக்கு சுற்றுலா வந்திருப்பவர் என நினைத்தேன். “நான் பொறந்தது சென்னை வண்ணாரப்பேட்டைங்க” என அழகுத் தமிழில் பேச ஆரம்பிக்கிறார்.
‘‘அப்பா அம்மாவுக்கு படிப்பில்லை. நான் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் படிச்சுட்டு அமெரிக்காவுல ஒரு கம்பெனியில வேலை பார்த்தேன். சென்னையில அப்பா அம்மா வசிக்க நல்லதா ஒரு வீடு கட்டிக்குடுத்துட்டு எங்களுக்கு இருந்த கடனை எல்லாம் அடைச்சேன். இனி நமக்காக வாழலாம்னு நினைச்சேன். ஒருமுறை நான் நேபாள் போயிருந்தப்ப, ஒரு பெரியவர் 12,13 வயசுப் பொண்ணுங்களைக் கூட்டிக்கிட்டு என்கிட்ட வந்து, ‘ எந்தப் பொண்ணைப் பிடிச்சிருக்கோ எடுத்துக்கோ... கம்மியான ரேட்டுதான்’ன்னு சொன்னார். அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்துட்டேன். விசாரிச்சப்ப, இப்படி உலகம் முழுக்க செக்ஸ் டிராஃபிக்கில் பில்லியன் கணக்கா டாலர்களைக் கொழிக்கிறாங்கன்னு தெரிஞ்சது. அந்த சின்னஞ்சிறு குழந்தைகளோட கண்கள் பல நாட்கள் என்னை தூங்கவே விடாம செய்தன.
ஏதோவொரு கம்பெனிக்கு இயந்திரமா சம்பாதிச்சுக் கொடுத்திக்கிட்டிருக்கோமே, இந்தச் சமூகத்துக்கு என்ன செய்தோம்னு யோசிக்க ஆரம்பிச்சேன். அதுதான் என் பாதைக்கான முதல் விதை. பார்த்துக்கிட்டிருந்த வேலையை விட்டுட்டு செயல்ல இறங்கினேன். உலகம் முழுவதும் சுமார் 60 லட்சம் குழந்தைகள் இப்படி செக்ஸ் டிராஃபிக்கில் இருக்கதா ஒரு சர்வே சொல்லுது. அதப் பத்தி மக்கள் மத்தியில விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக நியூஸிலாந்தின் கேத் கெயிங்காவில் ஆரம்பிச்சு ப்ளப் வரை ‘டீ ப்ரா ருஃபா’ ரூட்டின் 3350 கிலோமீட்டர் தூரத்தை ஓடிக் கடக்கத் திட்டமிட்டேன். மைனஸ் பத்து டிகிரி குளிரிலும், மழையிலும் ஓட ஆரம்பிச்சேன். எதிர்ப்பட்டவங்க ‘ஏன் இப்படிக் குளிர்ல ஓடறே?’ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அவங்கட்ட எல்லாம் செக்ஸ் டிராஃபிக் பற்றிச் சொல்லி, ‘முடிஞ்சா மீட்க உதவுங்க. இல்லைன்னாகூட பத்துப் பேருக்காவது இதைப் பற்றிச் சொல்லுங்க’ன்னு சொன்னேன்.