அப்பாவுக்கு தப்பாது பிறந்த மகள்- டி.ஆர்.மகாலிங்கத்தின் மகள் சாவித்ரி மகாலட்சுமி!


கே.கே.மகேஷ்

‘ஆடை கட்டி வந்த நிலவோ’, ‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை’ போன்ற பாடல்களோடு இன்னமும் உயிர்த்திருப்பவர் டி.ஆர்.மகாலிங்கம். வெறுமனே பாடகர் மட்டுமல்ல... பாடக நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் எனப் பல முகங்கள் உண்டு அவருக்கு.

14 வயதில் சினிமாவுக்குப் போனவர் டி.ஆர்.மகாலிங்கம். அந்தக் காலத்தில் மதுரையில் புகழ்பெற்று விளங்கிய ராஜரத்தினம் பிள்ளை பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்ந்திருந்தார் அவர். அப்போது நாடகம் தொடங்குவதற்கு முன்பு கூட்டம் சேர்வதற்காக நல்ல பாடகர்களை தொடர்ச்சியாகப் பாடவிடுவார்களாம். அப்படி சிறுவன் டி.ஆர்.மகாலிங்கம் பாடுவதைக் கேட்ட ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு அவரைப் பிடித்துப்போய்விட்டது. சோழவந்தான் அருகிலுள்ள தென்கரை கிராமத்திலுள்ள டி.ஆர்.மகாலிங்கத்தின் வீட்டுக்கே சென்று அவரது அப்பா, ராமகிருஷ்ண கணபாடிகளிடம், 5000 ரூபாய் கொடுத்து சிறுவனை சென்னைக்கு அழைத்துப் போனார் ஏ.வி.எம். 1937ல் டி.ஆர்.மகாலிங்கம் நடித்த முதல்படமான ‘நந்தகுமார்’ வெளிவந்தது-. பிறகு ‘பக்த பிரகலாதா’, ‘பரசுராமன்’ போன்ற படங்களிலும் சிறுவனாக நடித்த அவர், ‘ வள்ளி’ படத்தின் நாயகனானார். 1945ல் வெளிவந்த அந்தப் படம், தமிழகம் முழுவதும் 52 வாரங்கள் ஓடி, வசூலைக்குவித்தது.

தன் திறமையாலும், இனிய குரலாலும் கிட்டப்பாவின் இசை வாரிசு என்ற பெயரைப் பெற்ற டி.ஆர்.எம்., பிறகு நடிகராகவும் உச்சத்தை எட்டினார். அக்காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்.கே.தியாகராஜ பாகவதர் அப்போது, லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறையில் இருந்ததால், அந்த இடத்தை எளிதாக அடைந்தார் டி.ஆர்.மகாலிங்கம். 86 படங்கள் நடித்தவர் அவர்.

x