அன்பால் துரத்தப்பட்ட அன்றாடங்காய்ச்சிகள்!


சபாநாயகரிடம் வருந்திய முதல்வர்

மேகேதாட்டு அணை விவகாரத்துக்காக அண்மையில் தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டபோது, முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பிய சென்னையைச் சேர்ந்த திமுகவின் அதிரடி எம் எல் ஏ ஒருவர், முதலமைச்சரை ஒருமையில் பேசுமளவுக்குப் போய்விட்டாராம். முதல்வர் இதை கேட்டும் கேட்காது போல் இருந்தாலும் குன்னம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன், சம்பந்தப்பட்ட அந்த எம்எல்ஏ சபையில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தாராம். ஆனால், ஆளும் கட்சி எம் எல் ஏ-க்கள் மற்ற யாரும் இதை சீரியஸாகவே எடுத்துக்கொள்ளாததால் ராமச்சந்திரனின் குரல் எடுபடவே இல்லையாம். அதேசமயம், கூட்டம் முடிந்த பிறகு சபாநாயகரைச் சந்தித்த முதல்வர், “அந்தாளு பேசுனத பாத்தீங்களா... எப்படியெல்லாம் அவை நாகரிகம் இல்லாம நடந்துக்கிறாங்க பாருங்க...” என்று சொல்லி வருத்தப்பட்டாராம்.

அன்பால் துரத்தப்பட்ட அன்றாடங்காய்ச்சிகள்!

திருப்பூரில் கஜலட்சுமி திரையரங்கை ஒட்டி நொய்யலாற்றின் கரையில், சாலையோரம் 35 அன்றாடம்காய்ச்சி குடும்பங்கள் 13 ஆண்டுகளாக குடிசைபோட்டு வசித்து வந்தார்கள். கடந்த வாரம் இவர்களை எல்லாம் அதிரடியாய் குப்பை வண்டியில் ஏற்றி அப்புறப்படுத்தியது மாநகராட்சி. ஒரு காலத்தில் மதுபானக் கூடம் நடத்தி பணம் பார்த்தவர் அன்பகம் திருப்பதி. அதிமுக கவுன்சிலராகவும் இருந்த இவர், சின்னம்மாவுக்கு வேண்டப்பட்டவர் என்று சொல்லி அடிக்கடி அதிரடிகளும் நிகழ்த்துவார், இவர், கடந்தவாரம் கஜலட்சுமி திரையரங்கை ஒட்டியே தனது, ‘அன்பகம் ரெசிடென்ஸி’யைத் திறந்தார். அமைச்சர் பெருமக்கள் எல்லாம் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகத்தான் மாநகராட்சி அதிகாரிகளைக் கொண்டு அந்த அன்றாடம் காய்ச்சிகளை அப்புறப்படுத்தினார் அன்பகம் திருப்பதி. இப்படி அப்புறப்படுத்தியவர்களை, “ஏற்கெனவே உங்களுக்கு பட்டா வழங்கிய இடத்தில் குடியேறுங்கள்” என்று அதிகாரிகள் சொன்னார்களாம். ஆனால், அந்த நிலத்தை வேறுநபர்கள் ஆக்கிரமித்திருந்தார்களாம். இதனால், எங்கே போவது என்று தெரியாமல் அந்த 35 குடும்பங்களும் இப்போது வெட்டவெளியில் உட்கார்ந்திருக்கின்றன.

x