தஞ்சை தனக்கென்ற பிரத்யேகமான அரசியல் கலாச்சாரத்தைக் கொண்டது. விவசாய பூமியென்பதால் நிலவுடைமை, அதற்குத் துணைபோகும் சாதியம், மதம் போன்றவையும் அவற்றுக்கு எதிரான மக்கள் இயக்கங்களும் ஒன்றையொன்று எதிர்த்து இந்த மண்ணின் அரசியலை உருவாக்கியிருக்கின்றன. சுதந்திரப் போராட்டக் காலத்தின் தொடக்கத்தில் காங்கிரஸ், அதன் பின் நீதிக்கட்சி, இடதுசாரி விவசாய இயக்கங்கள், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ இயக்கங்கள் என்று வளமான அரசியல் கலாச்சாரத்தைக் கொண்டது தஞ்சை. எனினும், திராவிட இயக்கங்களும் கம்யூனிஸ இயக்கங்களும்தான் இங்கே பிரதானமான அரசியல் பங்காளிகள்.
நாற்பது, ஐம்பது வீடுகள் கூட கண்ணுக்குப் படாத ஊர்களிலும்கூட கம்யூனிஸ இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் போன்றவற்றின் கொடிக்கம்பங்கள் வரலாற்றுச் சின்னங்களாக ஆகியிருக்கும். அந்தக் கம்பங்களின் கல்வெட்டுக்களில் சிலை திறப்பாளர்களின் அல்லது கொடியேற்றியவர்களின் பெயர்களாக பெரியார் ஈ.வெ.ராமசாமி, சி.என்.அண்ணாத்துரை, கருணாநிதி, பி.ராமமூர்த்தி, சீனிவாசராவ், பாலதண்டாயுதம், திருச்சி கல்யாணசுந்தரம், மணலி கந்தசாமி போன்றவர்களில் ஆரம்பித்து ஜோதிபாசு, மாணிக் சர்க்காரையும்கூட சில இடங்களில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கொடிக்கும் பின்னால் அவ்வளவு போராட்டங்கள் உள்ளன. இந்த அளவு கொடிக்கம்பங்கள் உள்ள பகுதிகளைத் தமிழ்நாட்டிலும் இந்தியாவின் வேறெங்கும் காண்பது அரிது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றைத் தீர்மானித்த ஊர்களான திருக்குவளை, கீழ்வெண்மணிக்குப் போகும் வழியில் கொடிகளின் யதார்த்தம் சுள்ளென்று வெயிலைப் போல நம் முகத்தில் உறைக்கும்.
திருவாரூரிலிருந்து கச்சனம் வழியாக திருக்குவளையை நோக்கிப் போய்க்கொண்டிருந்தேன். நான் சென்றுகொண்டிருப்பது கடைமடைப் பகுதிகளை நோக்கி என்பதால் திருவாரூரின் பசுமை, கடிகாரத்தின் ‘கவுன்ட் டவுன்’ போல குறைந்துகொண்டே வந்தது.
திருக்குவளைக்குச் சென்றபோது உச்சிவெயில் நேரம். தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற ‘பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் உள்ள ஊர்’ என்றும் ‘கலைஞர் பிறந்த ஊர்’ என்றும் புகழ்பெற்ற ஊர். இந்த ஊரில் கலைஞர் பிறக்கவில்லையென்றால் தமிழகத்தின் பின்தங்கிய குக்கிராமங்களுள் ஒன்றாகவே இருந்திருக்கும். தற்போதோ, ‘அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி’ அமைக்கும் அளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. தன்னைப் பிறப்பித்த ஊருக்கு கலைஞர் கருணாநிதியின் நன்றிக்கடன்களுள் ஒன்று இது.
கலைஞர் பிறந்த வீடான ‘அஞ்சுகம் இல்ல’த்துக்குச் சென்றோம். நடுத்தர அளவுள்ள வீடு. கலைஞர் இறந்து 20 நாட்கள் கழித்துப் போயிருந்தோம். உள்ளே நம்மை அந்த வீட்டின் பொறுப்பாளர் சுமதி வரவேற்றார்.
உள்ளே சென்றோம். சிறு கூடம் போன்ற பகுதியில் நடுவில் மேசை. அதன் மேல் வருகையாளர்களின் கருத்துகளுக்காக ஒரு நோட்டு. கூடத்தின் ஒரு பக்கச் சுவரின் நடுவே கலைஞர் சிரித்துக்கொண்டிருக்கும் பெரிய புகைப்படம் மாலை மாட்டி வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தின் இடது பக்கம் ஒரு பெரிய கண்ணாடிக் கூண்டுக்குள்ளே அஞ்சுகம் அம்மா பாக்கு இடித்துக்கொண்டிருந்தார். வலப் பக்கம் உள்ள கண்ணாடிக் கூண்டில் தந்தை முத்துவேலர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். உலகம் முழுவதும் சென்றுசேர்ந்த மகனைத் தங்கள் வீட்டுக்கு இறுதியில் வரவழைத்துப் பாசத்துடன் கொஞ்சும் பெற்றோர்கள் போல் அவர்கள் நமக்குத் தெரிந்தார்கள்.
அதே கூடத்தில் ‘கலைஞரின் மனசாட்சி’ என்றழைக்கப்பட்ட முரசொலி மாறனின் மார்பளவுச் சிலையும் வைக்கப்பட்டிருந்தது. சுவர்களில் ஆங்காங்கே ஏதாவது ஒரு அரிய, முக்கியமான தகவல், கல்வெட்டுபோல் எழுதப்பட்டிருந்தது. ‘1953 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் திரு. முத்துவேல் கருணாநிதி அவர்களுக்கு, ‘கலைஞர்’ என்ற சிறப்புப் பட்டம் அளிக்கப்பட்டது’ என்ற தகவலை ஒரு கல்வெட்டு கூறியது.
அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் கலைஞரின் அரிய புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
அண்ணா, பெரியார், சிவாஜி என்று தமிழகத்து தலைவர்கள்-பிரபலங்களில் ஆரம்பித்து இங்கிலாந்து இளவரசி வரை கலைஞர் பலருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் படங்கள் நமக்கு ஏற்படுத்தும் உணர்வை விட திருக்குவளை போன்ற எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஊர்க்காரர்களுக்கு எத்தகைய உணர்ச்சியையும் நம்பிக்கையையும் தரும் என்பதை நினைத்துப் பார்த்தேன். எந்தெந்த ஊரிலிருந்தோ தங்கள் பிள்ளைகளுடன் அங்கு வந்திருந்தவர்கள் இவை ஒவ்வொன்றையும் பற்றி அவர்களுக்கு விளக்கிக்கொண்டிருந்தார்கள்.
அந்த வீட்டின் வருகையாளர் கருத்துகளடங்கிய நோட்டுகளை எடுத்துப் பார்த்தேன். நான் படித்த மன்னார்குடி பள்ளியொன்றின் ஆசிரியத் தம்பதியினர் எழுதியிருந்த கருத்துகள் என் கண்ணில் பட்டன. அதுவும் அன்று காலையில்தான் அவர்களும் வந்து சென்றிருக்கிறார்கள்.
“ராமஜென்ம பூமி எங்கள் ஐதீகம் கிருஷ்ண ஜென்ம பூமி எங்கள் வைதீகம் கலைஞர் ஜென்ம பூமி எங்கள் பௌதிகம்”
என்று எழுதி ஜி. பார்த்தசாரதி, ஓய்வுபெற்ற ஆசிரியர் என்று கையெழுத்துப் போடப்பட்டிருந்தது. அவருடைய மனைவியும் ஆசிரியருமான சாந்தகுமாரியும் “ஆசிரியர் சமுதாயத்தின் உயர்வுக்கு வித்திட்டு எங்கள் குடும்பம் தழைக்க வழிசெய்த முத்தமிழ் வித்தகரை என்றும் மறக்க மாட்டோம்” என்று எழுதியிருந்தார். ஆசிரியர்கள் மட்டுமல்ல, இன்னும் ஏராளமானோர் இதுபோல் எழுதியிருந்தார்கள். அந்த நோட்டைப் புரட்டிப்பார்த்தாலே கலைஞர் எத்தனை தரப்புகளின் வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார் என்பது நமக்குப் புலப்படும்.
அந்த இல்லத்தின் பொறுப்பாளர் சுமதி, நெகிழ்ச்சியான சில நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். “தலைவர் மறைஞ்சதுக்குப் பின்னாடி குளித்தலையிலருந்து பெரிய கூட்டமே இங்கே வந்து அழுதுட்டுப் போச்சு. முதன்முதல்ல தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி அதுங்கிற பாசம். இங்க வர்ற சின்னப் பசங்கள்லாம் கலைஞரோட சாதனைகளைப் பற்றிய விவரங்களையும் படங்களையும் பார்த்துவிட்டு இவ்வளவு சின்ன ஊர்லேருந்து இவ்வளவு பெரிய தலைவரா எப்படி வந்தார்னு ஆச்சரியப்பட்டுப் போறாங்க. யார்யாரெல்லாம் இங்க வர்றாங்கன்னு தலைவரோட பொண்ணு செல்வி அடிக்கடி என்கிட்ட போன்ல கேட்டுக்கிட்டே இருப்பாங்க” என்றார்.
திருக்குவளையிலிருந்து கால்மணி நேரப் பயணத் தொலைவில்தான் வெண்மணி இருந்தது. திருக்குவளைக்கு நேர்மாறாக வளர்ச்சியின் தடங்கள் மிகக் குறைவாகக் காணப்படும் ஊர். 1968-ம் ஆண்டுதான் வெண்மணியை மிக மோசமான முறையில் உலகுக்குப் பிரபலப்படுத்தியது. கூலி உயர்வு கேட்டதற்காக விவசாயக் கூலிகளாக இருந்த தலித் மக்கள் 44 பேரை ஒரு குடிசைக்குள் வைத்துக் கொளுத்தி அங்குள்ள நிலச்சுவான்தார்கள் அடியாட்கள் மூலம் படுகொலை செய்த ஆண்டு அது. அந்த ஆண்டின் 50-வது நினைவை நாம் தற்போது அனுசரித்துக்கொண்டிருக்கிறோம். சாதிய-நிலவுடைமை சமூகத்தின் கோரத்தாண்டவத்தை நினைவுபடுத்துவதும், அந்த எரிக்கப்பட்ட குடிசை இருப்பதுமான பகுதிக்குச் சென்றோம். பக்கத்திலேயே சி.பி.ஐ.(எம்) கட்சியின் நினைவு மண்டபமும் இருந்தது. எரிக்கப்பட்ட குடிசையைச் சிறியதாகக் கட்டி, நினைவிடமாக ஆக்கியிருந்தார்கள்.
அந்தக் குடிசைக்கு முன்னால் இருந்த நினைவு ஸ்தூபியைச் சுற்றிலும் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி இங்கே விளையாடிக்கொண்டிருந்த சில சிறுவர்களும் தற்போது ஸ்தூபியில் பெயர்களாய் இடம் பெற்றிருக்கின்றனர். வாசுகி, செல்வி என்று மூன்று வயது குழந்தைகளின் பெயர்களைப் பார்த்ததும் நெஞ்சு துடித்தது. எரிக்கப்பட்ட குடிசையின் உள்ளுக்குள்ளே சென்றேன். ஒற்றைச் சுவாலையின் வடிவில் சிலை அமைக்கப்பட்டு அதன் முன்னால் ஒரு கலசத்தில் அங்கே படுகொலை செய்யப்பட்டவர்களின் அஸ்தி வைக்கப்பட்டிருந்தது. காற்றோடு காற்றாக, நீரோடு நீராகப் போயிருக்கக் கூடிய அந்த அஸ்தியை சுதந்திரப் போராட்டவீரர் மதுரை மாயாண்டி பாரதி போராடி அங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். அஸ்திக் கலசத்தைப் பார்த்ததுமே கட்டுப்படுத்த முடியாத அழுகை வெளிப்பட்டது. அந்தச் சிறிய குடிசையில் 44 பேர் தங்கள் இறுதிக் கணத்தில் எப்படியெல்லாம் துடித்திருப்பார்களோ?!
நிலச்சுவான்தாரர்களாக இருப்பவர்கள் இந்தப் படுகொலையை நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்று நீதிமன்றத்தால் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டார்கள். இதனால் கொதித்தெழுந்த சிபிஐ (எம்.எல்) இயக்கத்தினர் படுகொலைக்குப் பழிதீர்க்கும் படலத்தை ஆரம்பித்தார்கள். 1980-ல் இந்த நினைவிடத்துக்கு அருகேயே கோபாலகிருஷ்ண நாயுடுவை வெட்டிக்கொன்றார்கள்.
சிபிஐ (எம்) இயக்கம் ஒரு வகையில் இந்த மக்களின் அரணாக இருந்ததென்றால் வினோபா பாவேயின் பூதான இயக்கத்தைச் சேர்ந்த காந்திய தம்பதியினர் கிருஷ்ணம்மாள் – ஜெகநாதன் ஆகிய இருவரும் நிலமற்ற விவசாயிகள் பலருக்கும் நிலங்களைத் தானமாகப் பெற்றுத்தந்தார்கள். ஆனால், இன்று விவசாயம் பொய்த்துவிட்ட சூழலில் அந்த மக்களின் வாழ்வாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
கீழ்வெண்மணி நம் சமூகத்தின் மனசாட்சியில் இன்னும் அணையாது எரிந்துகொண்டிருக்கும் தீ. அங்கு நடந்த எதையும் அறியாமல் தற்போது விளையாடிக்கொண்டிருந்த அந்தப் பிள்ளைகளைப் பார்க்கும்போது இவர்களை எந்தத் தீயும் அண்டாமல் எதிர்காலம் பாதுகாக்கட்டும் என்ற உணர்வே மேலோங்கியது.
அருகருகே இரண்டு ஊர்கள்! இரண்டுமே எழுச்சியின் வரலாறு!
(சுற்றுவோம்...)