சுவிதாவைப் பார்க்கப் பார்க்க அவளுடைய அம்மாவுக்குக் கோபம் வந்தது. ஏழாம் வகுப்புதான் படிக்கிறாள்; இந்த வயதிலேயே இவ்வளவு வாய் பேசுகிறாளே என நினைத்தாள். சுவிதாவின் நடவடிக்கைகளும் சில நாட்களாகச் சரியில்லை என்பதை அம்மா உணர்ந்தார். ஆனால், எதைக் கேட்டாலும் எரிந்துவிழுந்தாளே தவிர உருப்படியான பதில் எதுவும் அவளிடம் இருந்து வரவில்லை. பருவ வயதுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் மகளை அடித்தா கேட்க முடியும் என அம்மாவும் விட்டுவிட்டார். மகள் எங்கே போகப்போகிறாள்; எதுவாக இருந்தாலும் தன்னிடம்தானே சொல்லியாக வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு.
சுவிதாவுக்கு என்ன ஆச்சு?
இன்னும் சில மாதங்களில் மகள் பருவம் அடைந்துவிடக்கூடும் என்பதால் எப்போதும் அவளைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார் சுவிதாவின் அம்மா. பள்ளி முடிந்து சோர்வாக வீடு திரும்பிய சுவிதா, ஹாலில் அமர்ந்திருந்த மனிதரைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்தாள். அதை அம்மாவும் கண்டுகொண்டார். பக்கத்து வீட்டு மனிதரைப் பார்த்து இந்தப் பெண் ஏன் இப்படி மிரண்டுபோனாள் என அம்மாவுக்குப் புரியவில்லை. இவள் ஏதாவது தவறு செய்து அதை அவர் கண்டித்திருப்பாரோ என நினைத்தார். அவர் கிளம்பிய பிறகு மகளிடம் வந்து காரணம் கேட்டார். வழக்கம்போல் ஒன்றுமில்லையே என்பதைத்தவிர சுவிதாவிடமிருந்து வேறு எதுவும் அம்மாவுக்குக் கிடைக்கவில்லை. சுவிதா அன்று இரவு சாப்பிடாமல் தூங்கிவிட்டாள்.
மகள் பள்ளியில் ஏதும் பிரச்சினை செய்திருப்பாளோ என்ற கவலை அம்மாவுக்கு. அலுவலகத்தில் இருந்து முன்கூட்டியே கிளம்பி, மகளின் பள்ளிக்குச் சென்றார். வகுப்பு ஆசிரியரிடம் விசாரித்தபோது, “சுவிதா சில நாட்களாக யாருடனும் சரியாகப் பேசுவதில்லை, பாடங்களிலும் கவனம் செலுத்துவதில்லை” எனச் சொன்னார் ஆசிரியர். இப்போது அம்மாவின் கவலை அதிகரித்தது. எதுவுமே நடக்காதபோது சுவிதா ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என யோசித்துக் குழம்பினார்.
மகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தவர் கோபத்தில் கத்தினார். அதற்கும் சுவிதா அசைந்துகொடுக்கவில்லை. அமைதியாக வீட்டுப் பாடம் எழுதத் தொடங்கினாள். சிறிது நேரத்தில் சுவிதாவிடம் ஒரு டிபன் பாக்ஸைக் கொடுத்து பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டுவரச் சொன்னார் அம்மா. சுவிதா மறுத்துவிட்டாள். அம்மாவின் கோபம் எல்லை மீறியது. சுவிதாவைக் கண்டபடி திட்டுவிட்டு டிபன் பாக்ஸை அவளது கையில் திணித்தார். சுவிதா வெடித்து அழத் தொடங்கினாள். அம்மாவுக்கு எதுவும் புரியவில்லை. ஏன் இந்தப் பெண் இப்படி அழுகிறாள்; அடிக்கக்கூட இல்லையே எனக் குழம்பினார்.
மகளுக்கு நேர்ந்த துயரம்
அம்மாவுக்கு ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. சுவிதா அழுது முடிக்கும்வரை காத்திருந்தார். “என்ன நடந்ததுன்னு என்கிட்ட சொன்னாதானே அதுக்கேத்த மாதிரி முடிவெடுக்க முடியும்” என மகளிடம் பொறுமையாகச் பேசினார். கலங்கிய விழிகளுடன் அம்மாவைப் பார்த்த சுவிதா, “அந்த அங்கிள் என்கிட்ட தப்பா நடந்துக்கறார்மா” என்றாள். அம்மாவுக்கு அதிர்ச்சி. கல்லூரியில் படிக்கும் மகள் இருக்கிற அவரா இப்படி நடந்து கொண்டார் என நினைத்தார். “உன்கிட்ட சொன்னா நீ என்னை அடிப்பியோன்னுதான்மா இவ்ளோ நாளா சொல்லலை. கொஞ்ச நாளுக்கு முன்னால ஸ்கூல் விட்டு நான் வீட்டுக்கு வந்தப்போ எனக்குப் பாடம் சொல்லித்தர்றேன்னு சொல்லி அவங்க வீட்டுக்கு வரச் சொன்னார். ஆன்ட்டியும் அக்காவும் ஊருக்குப் போயிருந்தாங்க. ’பரவால்ல, நானே படிச்சிக்கிறேன்’னு சொன்னப்பகூட கேட்டகவே இல்லம்மா.
வா வான்னு என்னை வற்புறுத்திக் கூட்டிக்கிட்டுப்போனார். என்னை மடியில உட்கார வச்சிக்கிட்டார்மா. அவர் பண்ணது எல்லாமே பேட் டச்மா. உடனே நான் எழுந்து ஓடி வர நினைச்சேன். அப்போ, ‘இதை நீ உங்க வீட்ல சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க, உன்னைத்தான் திட்டுவாங்க. சொல்லிப்பாரு, புரியும்’னு மிரட்டி அனுப்பினார்மா. அதுக்கு அப்புறம் நான் அவங்க வீட்டுக்குப் போகவே இல்லம்மா. ஆனா, அவர் என்னை வழியில எங்க பார்த்தாலும் ஏதாவது பேசி பயமுறுத்திக்கிட்டே இருக்கார்மா” என்று திக்கித் திணறி சுவிதா சொல்லி முடிக்க, அவளுடைய அம்மாவுக்கு அழுகை வந்தது. நாம் அழுதால் மகள் பயந்துவிடுவாள் என்பதால் கட்டுப்படுத்திக்கொண்டார். தங்கள் மீது உள்ள பயத்தால்தான் மகள் இதைச் சொல்லாமல் மறைத்தாள் என்பதை நினைக்க சுவிதாவின் அம்மாவுக்கு வேதனையாக இருந்தது. மகளிடம் இன்னும்கூட நட்பாக, நெருக்கமாகப் பழகியிருக்கலாம் என நினைத்தார். இப்போதும் எதுவும் கைமீறிவிடவில்லை. ஆரம்ப நிலையிலேயே மகள் சொல்லியதை நினைத்து ஆசுவாசப்பட்டார். வேறு ஏதாவது உடல் ரீதியாக மகள் துன்புறுத்தப்பட்டாளா என்பதை அவளிடமே கேட்டுத் தெரிந்துகொண்டார்.
சரியான அணுகுமுறை
தான் தவறாக நடத்தப்படுகிறோம் என்று தெரிந்ததுமே சட்டென சுதாரித்து அந்த இடத்திலிருந்து கிளம்பிவந்த மகளின் சமயோசித செயலைப் பாராட்டினார் சுவிதாவின் அம்மா. எது நடந்தாலும் முதலில் பெற்றோரிடம் சொல்லியிருக்க வேண்டிய அவசியத்தையும் மகளுக்குப் புரியவைத்தார். எது நடந்தாலும் நாங்கள் இருவரும் உன்னுடன் உனக்குத் துணையாக இருப்போம் என மகளிடம் சொன்னவர், கணவர் வந்ததும் ஆலோசித்து முடிவெடுக்க நினைத்தார். மகளைச் சமாதானப்படுத்தித் தூங்கவைத்தவர், கணவரிடம் விஷயத்தைச் சொன்னார். மறுநாள் மகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் இருவரும் பக்கத்து வீட்டுக்குச் சென்றனர். அந்த மனிதரை தனியே அழைத்து மகள் தங்களிடம் சொன்னதைச் சொன்னார்கள். அவரோ கோபப்பட்டுக் கத்தினார். “அப்படி எதுவும் நடக்கவில்லை” என்று சாதித்தார். “இன்னொரு முறை இப்படி நடந்துகொண்டால் உங்களுடைய மனைவியிடமும் மகளிடமும் விஷயத்தைச் சொல்லிவிடுவோம்” என சுவிதாவின் பெற்றோர் சொல்ல, கத்துவதை நிறுத்தினார். அதற்கு மேலும் தங்கள் மகளுக்குத் தொல்லை தந்தால் காவல் துறையில் புகார் அளிப்போம் எனச் சொன்னதும் அந்த மனிதர் அடங்கிவிட்டார்.
ஆண்களும் பாதிக்கப்படலாம்
தங்கள் மகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதை சுவிதாவின் பெற்றோர் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து அதற்குக் கச்சிதமாக முற்றுப்
புள்ளியும் வைத்துவிட்டனர். ஆனால், பெரும்பாலான பெற்றோரால் இப்படி எளிதில் கண்டறிய முடிவதில்லை. காரணம் குழந்தைகளைப் பாலியல்ரீதியாகத் துன்புறுத்துவோரில் 90 சதவீதத்தினர் குழந்தையின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ நண்பர்களாகவோ குழந்தைக்கு நன்கு அறிமுகமானவர்களாகவோதான் இருக்கிறார்கள் என்கின்றன ஆய்வு முடிவுகள். பெற்றோரிடம் நல்ல உறவில் இருக்கும் பெரியவர்கள் குறித்துப் புகார் சொன்னால் பெற்றோர் நம்மை நம்ப மாட்டார்கள் என்பதாலேயே பெரும்பாலான குழந்தைகள் பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்வதில்லை.
பல வீடுகளில் அன்பைத் தவறாகப் புரிந்துகொண்டதாகச் சொல்லி குழந்தைகளையே திட்டுகிறவர்களும் உண்டு. பெரியவர்களைவிடக் குழந்தைகள் மிக எளிதாக நல்லவர்களையும் தீயவர்களையும் கண்டுணர்ந்துவிடுவார்கள். யாரிடம் அவர்கள் அசவுகர்யமாக உணர்கிறார்களோ அவர்களிடம் குழந்தைகளை அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். பெண் குழந்தைகள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளும் பாலியல் சீண்டலுக்கு ஆளாகக்கூடும். அது பெரிய அளவில் வெளியே தெரிவதும் இல்லை; பேசப்படுவதும் இல்லை. பாலியல் துன்புறுத்தலால் பெண் குழந்தைகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறார்களோ அதே அளவுக்கு ஆண் குழந்தைகளும் மன/உடல் ரீதியாகப் பாதிக்கப்படக்கூடும். அதிகரித்துவரும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு நாம் சமீபத்தில் கேள்விப்படுகிற செய்திகளே சாட்சி. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பலர், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு அதன் விளைவாகக் கருவுற்று, அந்தக் கருவைக் கலைக்க நீதிமன்றங்களை நாடிய நிகழ்வுகள் ஏராளம். இப்படியொரு சூழலில் பெற்றோர் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும்.
வேண்டாமே மனத்தடை
“பதின் பருவக் குழந்தை களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கற்றுத்தர வேண்டும். ஆனால், நம் சமூகத்தில் நிறைந்திருக்கும் மனத்தடை, அதைச் செயல்படுத்தவிடாமல் தடுக்கிறது. வீட்டிலும் குழந்தைகளுக்குச் சிலவற்றைப் பெற்றோர் கற்றுத்தரலாம். ஆனால், முதலில் அவர்களுக்குப் பாலியல் கல்வி குறித்த புரிதல் இருந்தால்தானே குழந்தைகளுக்குச் சொல்லித்தர முடியும். இதையெல்லாம் எப்படிக் குழந்தைகளிடம் பேசுவது எனப் பலருக்கும் தயக்கம். ஒரே நாளில் குழந் தைகளிடம் அனைத்தையும் சொல்லிவிட முடியாது. மூன்று, நான்கு வயதில் குட் டச், பேட் டச் போன்றவற்றைக் கற்றுத்தருவதிலிருந்தே ஆரோக்கியமான உரையாடலைத் தொடங்கலாம்” என்கிறார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மன நல மருத்துவர் சுதாகர்.
பருவ வயதில் ஏற்படுகிற எதிர் பால் ஈர்ப்பு, உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் எனத் தொடங்கி படிப்படியாகக் குழந்தைகளிடம் பேசி அவர்களுக்குப் புரியவைக்கலாம் என்கிறார் அவர். “பள்ளிகள் முதலில் பெற்றோருக்கு விழிப்புணர்வு தந்துவிட்டுப் பிறகு மாணவர்களுக்கு அதைக்கொண்டுசெல்லலாம். வீட்டில் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதைப் பெற்றோர்தான் உறுதிசெய்ய வேண்டும். வீடு தவிர, பள்ளி, பயிற்சி வகுப்புகள் போன்றவற்றுக்குக் குழந்தைகளை அனுப்பினால், அங்கே குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழல் இருக்கிறதா என்பதையும் அடிக்கடி சரிபார்க்க வேண்டும்” என்கிறார் சுதாகர். அனைத்துக்கும் மேலாக குழந்தைகளிடம் ஏற்படுகிற சிறிய மாற்றத்தையோ அவர்கள் சொல்கிற புகாரையோ நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. அதுதான் பல நேரங்களில் அவர்கள் பிரச்சினையில் சிக்கிக்கொள்ளாமல் காக்கும் கேடயமாகவும் இருக்கும்.
(நிஜம் அறிவோம்...)