பணம்... பயம்... பதவி..!- செந்தில் பாலாஜி `செக் அவுட்'!


குள.சண்முகசுந்தரம்

வதந்தியா, உண்மையா என்று தெரியாமல் 20 நாட்களாக வட்டமடித்துக் கொண்டிருந்த செய்திக்கு உயிர் கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமமுக அமைப்புச் செயலாளராக இருந்த அவர், தன்னை கடந்த வெள்ளிக்கிழமை மதியம் திமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

செந்தில்குமாராக இருக்கும்போது அரசியலில் அடியெடுத்து வைத்த இவர், நியூமராலஜி பார்த்து தனது பெயரை செந்தில் பாலாஜியாக மாற்றிக் கொண்டவர். காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக, அதன் பிறகுதான் இவருக்கு அரசியலில் ஏற்றமும். 1996-ல் சுயேச்சை கவுன்சிலர் அந்தஸ்தில் இருந்த இவர், 2000-ல் அதிமுகவுக்கு வந்த பிறகுதான் ஏறுமுகம் கண்டார். 2006-ல் கரூர் தொகுதியில் நின்று எம்எல்ஏ, அடுத்த தேர்தலில் அமைச்சர் பதவியுடன் இணைந்த மாவட்டச் செயலாளர் பதவி என செல்வாக்கு உயர்ந்த செந்தில் பாலாஜி, போயஸ் தோட்டத்தின் சூட்சுமங்களையும் சீக்கிரமே படித்துக் கொண்டார்.

கார்டனில் கோலோச்சிய இளவரசி தரப்பினருடன் இவர் காட்டிய நெருக்கம் ஓபிஎஸ் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களையே மிரள வைத்தது. ஒரு கட்டத்தில், “அண்ணன்தான் அடுத்த சிஎம் தெரியும்ல...” என்று செந்தில் பாலாஜியின் விசுவாச வட்டம் ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்குப் போனது. இதையெல்லாம் உள்வாங்கிய ஜெயலலிதா, ஒரு கட்டத்தில் இறுக்கிப் பிடித்தார். 2015-ல், இவரை அமைச்சரவையிலிருந்து தூக்கியதோடு கரூர் மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்தார்.

x