​​​​​​​அதிரவைத்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள்!


ஆர்.ஷபிமுன்னா

‘நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டி’ - இப்படி கணிக்கப்பட்ட 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலையே புரட்டிப் போட்டிருக்கின்றன. மிக முக்கியமாக, ‘மோடி அலை’ என்று சொல்லி 2014-லிருந்து வித்தை காட்டி வந்த பாஜக மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்திருக்கிறது!

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இவற்றில், பாஜக ஆட்சியை இழந்த மூன்று மாநிலங்களும் இந்தி பேசும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானாவில் முன்கூட்டியே சட்டப்பேரவையைக் கலைத்து, திட்டமிட்டு வெற்றி பெற்றுள்ளார் அந்த மாநிலத்தின் முதல் முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ். மிசோரமில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது.
தோல்வியைத் தந்த இந்துத்துவ அரசியல்!

சத்தீஸ்கரிலும் மத்திய பிரதேசத்திலும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்தது. இவ்விரண்டு மாநிலங்களும் இந்தியாவின் இதயப் பகுதி என்று சொல்லக்கூடியவை. இந்த இதயத்தைத்தான் இப்போது காங்கிரஸிடம் தாரை வார்த்திருக்கிறது பாஜக. கூடவே, இந்திய வரைபடத்தின் வலது கை என்று சொல்லக்கூடிய ராஜஸ்தானும் இப்போது காங்கிரஸின் ‘கை’யாக ஆகிவிட்டிருக்கிறது.

x