தமிழர்களுக்குப் பெருமிதம் தந்தவர்


திரைபாரதி

இருபதாம் நூற்றாண்டின் சமூக வரலாற்றை ஆய்வு செய்யும் எவரும், தமிழ் சினிமாவின் வரலாற்றைக் கடந்து பயணிக்க முடியாது. ஆர்.நடராஜ முதலியார் தயாரித்து, இயக்கி 1917-ல் வெளியிட்ட ‘கீசக வதம்’ படத்தில் தொடங்கி, 1932 வரையிலான 15 ஆண்டுகளை மவுனப்பட காலம் எனலாம். 1931-ல் தொடங்கி, சினிமா வண்ணம் பூசிக்கொள்ளத் தொடங்கிய 1960-கள் வரையிலான 30 ஆண்டுகளைப் பேசும்பட காலத்தின் முதல் சகாப்தம் எனலாம். கறுப்பு – வெள்ளையாகத் திரையில் கனவுகளை விரித்துக் காட்டியதால் ‘வெள்ளித் திரை’ என்ற சொல்லாக்கம் பிறந்தது இந்த சகாப்தத்தின் படங்களால்தான். வெள்ளித்திரையின் இந்த முப்பது ஆண்டுகளைத் தமிழ் சினிமாவின் பொற்காலமாக மாற்றிக் காட்டிய மூன்று ஆளுமைகள் இந்திய சினிமாவின் மூவேந்தர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அந்த மூவரில், ஏவி.மெய்யப்ப செட்டியாரை ‘முயற்சிகளின் மன்னர்’ எனக் கொண்டாடலாம். திரையில் யாரும் செய்து பார்க்கத் துணியாத புதிய முயற்சிகளைத் தயக்கமின்றி பரிசோதனை செய்து பார்த்து வெற்றி கண்டதில் முதன்மையானவர் இவர். (மற்ற இருவர் எஸ்.எஸ்.வாசன்,எல்.வி.பிரசாத்).

வட்டித் தொழிலிருந்து தட்டுத் தொழில்!

ஏவி.எம் புரொடக்‌ஷன் என்ற சின்னத்துடன் ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற வாக்கியத்தைத் தனது தயாரிப்பு நிறுவனத்தின் ‘லட்சினை வாக்கியமாக’ அவர் சம்பிரதாயத்துக்காக வைக்கவில்லை. அதையே தனது வாழ்க்கையின் வெளிப்படையான வெற்றி ரகசியமாக அவர் கடைப்பிடித்தார். இன்றைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் ஆவிச்சிச் செட்டியாரின் மகனாக 1907-ல் பிறந்த மெய்யப்ப செட்டியார், பரம்பரைக் குலத்தொழிலான வட்டித் தொழிலில் ஈடுபடாமல், தனது தந்தையைப்போல மடை மாறினார். ஆவிச்சி செட்டியார், ஏவி.அண்ட் சன்ஸ் என்ற பெயரில் பலபொருள் வணிகக் கடை நடத்தி வந்தார். அதில் கிட்டப்பா, சுந்தராம்பாள் ஆகியோர் பாடிய கர்னாடக இசைப் பாடல்கள் அடங்கிய வினையல் இசைத்தட்டுகளை விற்றுவந்தார். அப்பாவுடன் வணிகத்தில் பங்கேற்ற மெய்யப்ப செட்டியார், வணிகத்தில் அனுபவம் பெற்றுத் தலையெடுத்ததும் சென்னையில் சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.

x