அரியநாச்சி 20 - வேல ராமமூர்த்தி


விடுதலையாகி...

அரியநாச்சியை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு உறைந்துபோயிருந்த கல்யாணக் கூட்டத்துக்குள், “அரியநாச்சிக்கு ஆம்பளைப் பிள்ளை பெறந்து இருக்கு!” என்கிற சத்தம் வந்து விழுந்ததும் சலசலப்பு உண்டானது.

‘என்னமோ ஏதோ’ என்று பதறிப்போய் நின்ற சக்கரைத் தேவன் முகத்தில் நிம்மதியும் சந்தோசமும் மிதந்தன.
சக்கரைத் தேவனின் கைகளைப் பிடித்துக்கொண்டார் கோவிந்தத் தேவர். “கல்யாணத்துக்கு வந்த இடத்திலே ரெட்டைச் சந்தோசம்ப்பா சக்கரை!”
“ஆமா… ம்மான். வந்த இடத்திலே இப்பிடி ஆகும்னு நான் நெனைக்கலே!”
“எல்லாம் பொருத்தமா நடந்திருக்குப்பா. அரியநாச்சிக்கு இது தலைப் பிரசவம். தலைப் பிரசவம் தாயார் வீட்டுலெதானே நடக்கணும்? அது நடந்திருக்கு!” சக்கரைத் தேவனிடம் சொல்லிச் சிரித்த கோவிந்தத் தேவர், பாண்டியின் பக்கம் திரும்பினார்.
“ஏப்பா பாண்டி… உனக்கு மருமகன் பெறந்திருக்கான். தாய்மாமனுக்குத் தம்பிடிக் காசு செலவு வைக்கலே. சந்தோசந்தானே?”
“செலவு கெடக்கட்டும் சித்தப்பூ” என்ற பாண்டியின் தொண்டை இறுகியது. “எங்காத்தா அப்பன் இல்லாத வீட்டிலே நடக்கிற எல்லாக் காரியங்களும் அடுத்த நிமிசம் என்ன நடக்குமோங்கிற பயத்திலேயே உச்சந்தலையிலே அறைஞ்ச மாதிரி, திடுதிப்புன்னுதான் நடக்குது. வெள்ளையத் தேவன் பிள்ளைக வாங்கி வந்த விதியை நெனச்சாதான்…” தொண்டை உடைந்து அழுதான்.
பாண்டியின் வலது தோளில் கோவிந்தத் தேவரும் இடது தோளில் சக்கரைத் தேவனும் தட்டி, “சரி சரி… விடு. புத்திசாலித்தனத்தாலே எல்லாத்தையும் ஜெயிக்கணும்” என்று ஆறுதல் சொன்னார்கள்.
மணக்கோலத்தில் அழுதுகொண்டிருந்த மாயழகி, அண்ணனையும் அக்கா புருசனையும் பார்த்தாள். வீட்டுத் தலைவாசலைப் பார்த்தாள். பாதிப் பெண்கள் வீட்டுக்குள் இருந்தார்கள். பிறந்த குழந்தையின் அழுகுரல் சின்னதாய்க் கேட்டது.
மாயழகி எழுந்து, கூட்டத்தை விலக்கிவிட்டு வாசலுக்கு ஓடினாள். பந்தலுக்குள் மிஞ்சி இருந்த சனமெல்லாம் மாயழகியைப் பார்த்தது. கோவிந்தத் தேவர் பதறினார். 
“ஏம்மா மாயழகி…” என்பதற்குள் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.
“மணவறையிலே உக்காந்த பொண்ணு, கழுத்திலே தாலி ஏறாம எந்திருச்சுப் போறது நல்ல சகுனமாப் படலையே!” கோவிந்தத் தேவர் புலம்பியது, சக்கரைக்கு உறுத்தியது.
மழை கொட்டுது.
மாப்பிள்ளை கருப்பையா பொம்மையாய் அமர்ந்
திருந்தான். போதை இளவட்டங்கள், எதிலும் நாட்டமில்லா
மல், உட்கார்ந்தவாக்கில் உறங்கிக்கொண்டிருந்தார்கள்.
“முகூர்த்த நேரம் தப்பப் போகுது” கோவிந்தத் தேவர் முணுமுணுத்தார். பேசப்பதிலின்றி, தலைவாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சக்கரைத் தேவன்.
“ஏம்மா வள்ளியைக் கொஞ்சம் கூப்பிடுங்கம்மா” கோவிந்தத் தேவர் பொதுப்படையாகச் சொன்னார். யாரும் காதில் வாங்கவில்லை. குமராயி தலை தெரிந்தது. “ஏம்மா குமராயி… வள்ளியைக் கூப்பிடு.”
குமராயி உள்ளே போய், வள்ளி வெளியே வந்தாள். தலை தெரியவும் சக்கரைத் தேவன் முந்திக்கொண்டு கேட்டான். “தாயும் பிள்ளையும் நல்லா இருக்காகளா சின்னத்தா?”
“நல்லா இருக்காகப்பே.”
“அரியநாச்சி தெம்பா இருக்குதா?” மறுபடியும் கேட்டான்.
“அதெல்லாம் கெதியா இருக்கிறா.”
“ஏம்மா வள்ளி… நல்ல நேரம் தப்பப் போகுது. குழந்தை பெறந்த சந்தோசத்தோட தாலியைக் கட்டீருவோம்.”
“கட்டீற வேண்டியதுதானே..?”
“பொண்ணுப்பிள்ளை மாயழகி வீட்டுக்குள்ளே இருக்குது. கட்டப்போற தாலி அரியநாச்சி கையிலே இருக்குது!”
“எதூ! தாலி அரியநாச்சி கையிலே இருந்துச்சா?” என்றபடி உள்ளே போனாள். வள்ளி அத்தையைத் தொடர்ந்து பாண்டி, வாசல் வரை போனான். கையில் தாலியுடன் வாசலுக்கு வந்த வள்ளி அத்தை, பாண்டியின் கையில் தந்தாள்.
கவனித்த கோவிந்தத் தேவர், “ஏம்மா வள்ளி! தாலியை மட்டும் கொண்டுவர்றியே! பொண்ணு எங்கேம்மா?” சத்தம் போட்டார்.
“இந்தா... வரச் சொல்றேன்” மறுபடியும் வீட்டுக்குள் போனாள்.
நடுப்பத்தி நிறைய பெண்கள் கூடி இருந்தனர். உள் அறைக்குள் பிள்ளையைப் பெத்துப்போட்ட அரியநாச்சி, அயர்ந்து படுத்திருந்தாள். வலது கைவாக்கில், பிறந்த சிசு கிடந்தான். பூவாயி கிழவி சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தாள். அரியநாச்சியின் ஓரம், குத்துக்கால் வைத்து அமர்ந்திருந்த மாயழகி, அக்காவையும் குழந்தையையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“மாயழகி! தாலிக் கட்டுக்கு நேரமாகுது. வா.”
மாயழகி, அரியநாச்சியையே பார்த்துக்கொண்
டிருந்தாள். அரியநாச்சி கண் திறந்தாள். மாயழகியின் கையைப் பிடித்தாள். “போ…” என்றாள்.
மாயழகியின் தோள்களைத் தொட்டு, வள்ளி அத்தை தூக்கினாள். நடுப்பத்திப் பெண்கள், வழி விட்டு ஒதுங்கி நின்றார்கள்.
“பொம்பளைக எல்லாம் வாங்கடீ… தாலியைக் கட்டீருவோம்.”
வாசல் வரை மாயழகியை நகர்த்திக் கூட்டிப்போன வள்ளி அத்தை, “அடியே குமராயி… இந்தா கூட்டிட்டுப் போ…” எனக் கை மாற்றினாள்.
மழையோடு பந்தல் வாசலில் வந்து நின்றான் சோலை. அண்ணன் சக்கரையோடு சேர்ந்து எல்லோரும் நின்றிருந்தார்கள். மணப்பலகையில் மாப்பிள்ளை கருப்பையா மட்டும் அமர்ந்திருந்தான். பொண்ணைக் காணோம். ஒன்றும் விளங்கவில்லை. கண்களை மூடி மூடித் திறந்தான்.
வீட்டுக்குள் இருந்து, மாயழகியை குமராயி அழைத்து வந்துகொண்டிருந்தாள். மாயழகியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். பந்தலுக்குள் நுழையாமல் மழையில் நனைந்துகொண்டே நின்றான்.
கருப்பையாவின் பக்கத்தில் மாயழகியை அமர்த்தி
னாள் குமராயி. கோவிந்தத் தேவர், தாலியை சக்கரையின் கையில் கொடுத்தார். “சக்கரை… உன் கையாலே தாலியைக் குடுத்து கட்டச்சொல்லுப்பா” என்றவர், “ஏய் மேளக்காரா… வாசிடா” என்றார். மேளக்காரர் வாசித்தார்.
“குடிமகனை எங்கே…?”
“அய்யா... நான் இந்தா இருக்கேன்...” குடிமகன் சங்கு ஊதினார்.
“பொம்பளைக... குலவை போடுங்கம்மா” பெண்கள் குலவை இட்டார்கள்.
சக்கரை, தாலியை கருப்பையாவின் கையில் கொடுத்தான்.
இளவட்டங்கள் கைத்தட்டினார்கள்.
கருப்பையா தாலி கட்டினான்.
மழையில் நனையும் சோலை, கண்களை இறுக மூடி, அசையாமல் நின்றான்.
கோவிந்தத் தேவர் ஏவிக்கொண்டிருந்தார்.
“பொண்ணும் மாப்பிள்ளையும் மாலையை மாத்திக்குங்க.”
இருவர் கழுத்திலும் கிடந்த துணை மாலைகள், மாறி மாறி, மூன்று தடவை மாறின.
“பொண்ணும் மாப்பிள்ளையும் மூணு தடவை சுத்தி வாங்க.”
பொண்ணும் மாப்பிள்ளையும் எழுந்து, வலது கை சுண்டு விரல்களைப் பின்னிக்கொண்டார்கள். மாயழகிக்கு முன்னால் குமராயியும் கருப்பையாவுக்குப் பின்னால் கள்ளராமனும் மணப்பலகையைச் சுற்றி வந்தார்கள்.
மழையில் நனையும் சோலை, கருப்பையாவையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
கோவிந்தத் தேவர், வாசலைப் பார்த்து சத்தம் போட்டார். “ஏம்மா வள்ளி... உள்ளே பாலு பழம் ரெடி பண்ணி இருக்கீகளா?”
“ரெடியா இருக்குண்ணேன்.”
“ஏம்மா குமராயி... பாலு பழம் சாப்பிடப் பொண்ணு மாப்பிள்ளையை உள்ளே கூட்டிட்டுப் போ.”
போதைக்கார மச்சினன் முறைகார இளவட்டங்கள் உள்ளங்கைகளைத் தேய்த்துக்கொண்டு எழுந்தார்கள். நலுங்கடி அடிக்க வேண்டுமல்லவா!
முன்னே குமராயி நடக்க, மாயழகியும் கருப்பையாவும் தொடர்ந்தார்கள்.
மைத்துனன்மார், கருப்பையாவை நெருக்கிப் போனார்
கள். “நலுங்கடி அடிக்கிற மச்சினன்மாரு கொஞ்சம் இதம்
பதமாப் பாத்து அடிங்கப்பா. அடிச்சு ஆளை விழுத்தாட்
டீறாதீக” கோவிந்தத் தேவர் சிரித்துக்கொண்டே சொன்னார். சிரிப்பில் சந்தோசம் தெறித்தது. எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கல்யாணத்தை முடித்துவைத்த சந்தோசம். சக்கரைத் தேவனின் கைகளைப் பற்றினார். “நீ வந்து, முன்னே நின்னு இந்தக் கல்யாணத்தை நடத்திவச்சதிலே ரெம்ப சந்தோசம்ப்பா.”
பாண்டியின் பக்கம் திரும்பினார். “ஏலே பாண்டி! சக்கரை மாதிரி உனக்கு ஒரு மச்சினன் கெடைக்கிறதுக்கு நீ ஏழேழு ஜென்மத்துக்கும் குடுத்து வச்சிருக்கணும்! இனிமேலாவது மனுச மக்களை அனுசரிச்சுப் போகப் பழகிக்கோ.”
பாண்டி தலை கவிழ்ந்தான்.
பொண்ணும் மாப்பிள்ளையும் தலைவாசலை நெருங்கி இருந்தார்கள். நலுங்கடி அடிக்கப்போற மச்சினன்மார், தலைவாசலை நெருக்கி நின்றார்கள். குமராயியும் மாயழகியும் வாசலில் நுழைய, மாப்பிள்ளை கருப்பையாவும் நுழையப்போனான்.
பிடரியில் முதல் அடி விழுந்தது. கருப்பையா சிரித்துக்கொண்டே வாங்கினான். வரிசையாய் மைத்துனன்மார்களின் அடி விழுந்தது. எல்லா அடிகளையும் கருப்பையா சிரித்துக்கொண்டே வாங்கினான். ஊடே… ஒரு குத்து, வலுவாய் விழுந்தது. அதையும் சிரித்துக்கொண்டே வாங்கினான். மறு குத்து, இன்னும் வலுவாய் விழுந்தது. மூன்றாவது குத்துக்குப் பிடரியைக் கொடுக்காமல் திரும்பிப் பார்த்தான்.
சாராய நாற்றமடிக்க, தலை முதல் உடம்பெல்லாம் ஈரம் சொட்ட, மூன்றாவது குத்துக்குக் கை ஓங்கினான் சோலை.
கூட்டத்துக்குள் இருந்து பாய்ந்து வந்தான் பாண்டி.
“பங்காளியை அடிக்கிறியேடா முறைகெட்ட நாயே!” சோலையின் பிடரியில் ஓங்கி அறைந்தான்.
தாழ்வாரக் கூட்டம் சிதறியது. சக்கரை அலறியடித்து ஓடி வந்தான். உள் வீட்டுப் பெண்கள் எல்லாம் தலைவாசலுக்கு ஓடி வந்தார்கள்.
பாண்டியின் நெஞ்சில் முட்டி, தூக்கிக்கொண்டு போய், இடுப்பொடிய சுவரில் சாத்தினான் சோலை. “கூடப்பெறந்தவளைக் கூட்டிக்கொடுத்த அவத்தப் பயலே!”
மாயழகி, மலங்க மலங்க விழித்தாள். “கூட்டிக்
குடுத்தாகளா!”
வீட்டுக்குள் ஓடினான் கருப்பையா.
பாண்டியும் சோலையும் மல்லுக்கட்டி உருண்டார்கள்.
வள்ளி அத்தை, பூவாயி கிழவியோடு சேர்ந்து பொம்பளைகள் எல்லாம், “ஆத்தாடீ வினையை இழுத்துட்டான்ங்களே!” தலையிலும் நெஞ்சிலும் அடித்துக்கொண்டு கத்தினார்கள்.
கலவரச் சத்தம் கேட்டு, அரியநாச்சி எழுந்து உட்கார்ந்தாள்.
கோவிந்தத் தேவர், தலையில் இடி விழுந்தது
போல், அரண்டுபோய் நின்றார். “கூட்டைக் கலைச்சிட்டான்ங்களே!”
ஓடி வந்த சக்கரை, சோலையையும் பாண்டியையும் அடித்து விலக்கினான். விலகியவர்கள் மறுபடியும் பாய்ந்தார்கள். வள்ளி அத்தையும் சக்கரையும் ஆளுக்கொருவனைப் பிடித்து இழுத்தார்கள்.
உள் வீட்டுக்குள் இருந்து, வாளோடு ஓடி வந்த கருப்பையா, சோலையைக் குறி வைத்து வெட்டினான். குறி தப்பி, சக்கரையின் கழுத்தில் விழுந்தது.
“ஆத்தாடீ... ஏம் பிள்ளையைக் கொன்னுட்டான்ங்
களே!” வள்ளி கத்தினாள்.
அரியநாச்சி, தலைவாசலுக்கு வந்தாள். அரியநாச்சியைக் கட்டிப்பிடித்துக்கொண்டு மாயழகி கத்தினாள். “எக்கா… எக்கா…”
தாழ்வார ஓட்டு இடைவாரத்தில் செருகியிருந்த அரிவாளை எடுத்த பாண்டி, “ஏந்… தங்கச்சியை கூட்டிக்குடுத்தேனா…” சோலையின் நெஞ்சில் இறக்கினான்.
பிணமான சக்கரையும் சோலையும் தாழ்வாரத் திண்ணை ரத்தத்தில் கிடந்தார்கள். கண்கள் நிலைகுத்த நின்ற பாண்டியின் அரிவாளும் கருப்பையாவின் வாளும் கை நழுவிக் கீழே விழுந்தன.
ஓடி வந்த அரியநாச்சி, வாளை எடுத்தாள். அருகே நின்ற வள்ளி அத்தையும் அரிவாளை எடுத்தாள்.
“என்னை நம்பி வந்த என் பட்டத்து யானையைச் சாய்ச்சிட்டீங்களேடா…” கருப்பையாவின் நெஞ்சை வாளால் பிளந்தாள் அரியநாச்சி.
“வெள்ளாங்குளத்து வம்சத்தை வேரறுத்திட்டீங்க
ளேடா…” பாண்டியின் கழுத்தோடு அரிவாளை வீசினாள் வள்ளி அத்தை.
நான்கு பிணங்களும் ஒன்றாய்க் கிடந்தன.
உள் வீட்டுக்குள் உருண்டாள் மாயழகி.
பிறந்த குழந்தை, தனியே கிடந்து கத்திக்கொண்
டிருந்தது.
தன் ரெண்டு பெண் மக்களும் தாலி அறுத்த சேதி தெரியாத வெள்ளையத் தேவன், விடுதலையாகி, வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார்.
 (அரியநாச்சி... அரியநாச்சி...) 

x