ஹாட் லீக்ஸ்: ஃப்ளெக்ஸ் வைத்துப் பாராட்டும் எஸ்பி!


ஃப்ளெக்ஸ் வைத்துப் பாராட்டும் எஸ்பி!

விழுப்புரம் மாவட்ட எஸ்பி-யாக ஜெயக்குமார் பதவியேற்று 18 மாதங்கள் ஆகின்றன. இதுவரை, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகவும், மணல் கடத்தல், கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு துணை போனதாகவும் சுமார் 500 காவலர்களை இடமாற்றம் செய்தும், பணியிடை நீக்கம் செய்தும் நடவடிக்கை எடுத்திருக்கிறார். தவறுசெய்வோர் மீது நடவடிக்கை எடுப்பது போல் சிறந்த சேவை செய்யும் காவலர்களைப் பாராட்டி ரொக்கப் பரிசளித்து கவுரவித்தும் வருகிறார் எஸ்பி. அத்துடன், இப்படி சேவையாற்றும் காவலர் துறையினரின் பெயர்களையும் அவர்கள் செய்த சாதனையையும் பட்டியலிட்டு வாரா வாரம் எஸ்பி அலுவலகத்தின் நுழைவு வாயிலில், ‘இந்த வாரம் மெச்சத்தகு நற்பணியாற்றியவர்கள்’ என்று தலைப்பிட்டு ஃப்ளெக்ஸ் போர்டு வைத்தும் ஊக்கப்படுத்தி வருகிறார் ஜெயக்குமார்!

மல்லுக்கு நிற்கும் மணிகண்டன்

ராமநாதபுரத்தின் முரட்டுக்காளை என்று திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறார் அமைச்சர் மணிகண்டன். கடந்தவாரம், ராமநாதபுரம் எம்பி அன்வர்ராஜாவின் பேத்திக்கு திருமணம். அதற்காக அமைச்சர் உதயகுமார், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோரை வரவேற்று ஃப்ளெக்ஸ் போர்டுகளை வைத்து அமர்க்களப்படுத்திய ஆளும்கட்சியினர் அண்ணன் மணிகண்டனை அவ்வளவாய் கண்டு கொள்ளவில்லை. இதனால் கடுப்பான மணிகண்டன், வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாராம். இது போதாதா... இரவோடு இரவாக அந்த ஃப்ளெக்‌ஸ் போர்டுகளை கிழித்து எடுத்து துவம்சம் செய்துவிட்டது மணியார் கோஷ்டி. இந்த விவகாரத்தில் கட்சியின் தென்மண்டல தளபதி போல் வலம் வரும் அமைச்சர் உதயகுமாரையும், “ராமநாதபுரத்தின் அடுத்த எம்பி நான்தான்” என்று பிரகடனப்படுத்தி வரும் ராஜகண்ணப்பனையும் ஏகத்துக்கு உஷ்ணமாக்கி உட்கார வைத்திருக் கிறதாம்!

x