பாப்லோ தி பாஸ் - 3: மாஃபியா மன்னனின் திகில் வரலாறு


மெதஜின் நகரத்தில் உள்ள கால்பந்து மைதானம் அது. பாப்லோவுக்குச் சின்ன வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வம் மிகுந்திருந்தது. விளையாட்டை ரசிக்க மட்டுமல்ல, தானே இறங்கி விளையாடவும் செய்வான். எப்போதுமே சென்டர் ஃபார்வார்ட்தான். பிற்காலத்தில் அவன் பெரிய ‘டான்’ ஆன பிறகு, கொலம்பியாவின் மிக முக்கியமான கால்பந்து ‘கிளப்’களில் முதலீடும் செய்தான்.

ஆனால், அன்று அவன் சாதாரண ரசிகன். உள்ளூர் ‘கிளப்’களுக்கு இடையே போட்டி நடந்துகொண்டிருந்தது. பாப்லோ தன் நண்பர்களுடன் கைதட்டிக்கொண்டு, ஆரவாரம் செய்து, வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தான்.

“பாப்லோ...”

மைதான அரங்கம் ஆரவாரத்தில் இருந்ததால் அவன் அழைக்கப்பட்டது அவனுக்குக் கேட்கவில்லை. திரும்பவும் அழைக்கப்பட்டான். கூப்பிட்டவன், அவனது நண்பர்களில் ஒருவன். கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு அவனுக்கு அருகே வந்து அழைத்தான்.

“பாப்லோ... பாப்லோ...”

திரும்பி ‘என்ன?’ என்பது போல் பார்த்தான் பாப்லோ. கூட்டத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு வெளியே வந்தான்.
“ஒரு முக்கியமான விஷயம் பாப்லோ... பிஸினஸ்..!”

தலையசைத்தவாறே அரங்கத்தைவிட்டு அவனுடன் வெளியே வந்தான் பாப்லோ. அங்கே தன் காருக்கு அருகில் நின்று கொண்டிருந்தான் ரஃபேல் புவென்ட்.

மெதஜின் நகரத்திலிருந்த வெற்றிகரமான ‘காண்ட்ராபாண்டிஸ் டாஸ்’களில் ரஃபேலும் ஒருவன். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து சிகரெட்டுகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் துணிகள் ஆகியவற்றைக் கடத்திக் கொண்டு வருவதுதான் ரஃபேல் நடத்திய தொழில்.

மேற்கண்ட நாடுகளிலிருந்து வரும் கப்பல் கண்டெய்னர்கள் பனாமா நாட்டின் கோலோன் எனும் நகரத்தை வந்தடையும். அங்கிருந்து அவை கொலம்பியாவின் டுர்போ நகரத்துக்குக் கொண்டு வரப்படும். அங்கே ‘லோடுகள்’ இறக்கப்பட்டு, மெதஜின் நகரத்துக்குக் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ‘ஆர்டர்’ செய்த நபர்களுக்குத் தேவையான பொருட்கள் விநியோகிக்கப்படும்.

மெதஜின் நகரத்தில் அந்தப் பொருட்களைப் பாதுகாக்க நம்பக மான, தைரியமான, சாதுர்யமிக்க ஒரு ஆள் தேவைப்பட்டது. பல இடங் களிலும் ‘இதற்குச் சரியான ஆள் பாப்லோதான்!’ என்று பரிந்துரைக்கப் பட்டது. அந்த அளவுக்கு அவனது புகழ் பரவியிருந்தது. எப்படி..?
பலரும் பாப்லோவைப் படிக் காதவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது தவறு. பள்ளிக் கல்வியை முடித்தவுடன் ‘யுனிவர்ஸிதாத் த அண்டியோக்கியா’வில் அரசியல் அறிவியல் துறையில் பட்டப்படிப்புப் படித்து வந்தான். அவனுக்கு வரலாற்றிலும், கவிதையிலும் ஈடு பாடு இருந்தது. பிற்காலத்தில் ‘கிரிமினல் லாயர்’ ஆக வரவேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தான் பாப்லோ. அதனால் அவன் நிறைய புத்தகங்களை வாசித்தான். அவனது வீட்டு நூலகத்தில் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ இதழ்கள், லெனின், மாவோ ஆகியோ ரின் புத்தகங்கள் நிறைந்திருந்தன. 

இந்த வாசிப்புப் பழக்கம் அவனது மிச்ச வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது. வாசிப்பதோடு மேடைகளில் நன்றாகப் பேசவும் செய்வான்.
கல்லூரியில் படிக்கும்போது, கழிப்பறை முதல் நூலகம் வரை பல்வேறு அடிப்படையான தேவைகளை நிறைவேற்றக் கோரி, மாணவர் போராட்டங்கள் பல நடைபெற்றன. அந்தப் போராட்டங்களை பல்கலைக்கழகத்தினர் போலீஸாரின் துணைகொண்டு ஒடுக்கினர். இதைக் கண்டு கோபமுற்றான் பாப்லோ. அவனும் போராட்டங்களில் கலந்துகொண்டான். சில போராட்டங்களுக்குத் தலைமையேற்றான். “நாம் விரை வில் ஒரு மாபெரும் புரட்சியைக் கொண்டு வருவோம்!” என்று முழங்கினான்.

எல்லாம் சரி… கல்லூரியில் படிப்பைத் தொடர முடிந்தால்தானே இதையெல்லாம் சாதிக்க முடியும்? கல்விக் கட்டணத்தைச் சரிவரச் செலுத்த முடியாததால், கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டான் பாப்லோ. அவனது கனவுகள் எல்லாம் தகர்ந்து போயின. ‘படிப்பைத்தான் தொடர முடியவில்லை, ஏதேனும் வேலையாவது செய்யலாம்’ என்று நினைத்தவனுக்கு அதுவும் கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் லஞ்சம்… சிபாரிசு… நெப்போடிஸம்..!
பாப்லோவைப் போன்று நிறைவேறா கனவுகளும், வறுமை சூழ்ந்த வாழ்க்கையும் கொண்டவர்களின் மனதில் பணம்தான் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். அது பாப்லோவுக்கும் இருந்ததில் ஆச்சரியமில்லை. தன் பிள்ளையின் கனவு சிதைந்து போவதைக் கண்ட ஹெர்மில்டா கண்ணீர் சிந்தினாள். அதைப் பார்த்து மனம் வெதும்பிய பாப்லோ இப்படிச் சொன்னான்: “கவலைப்படாதேமா… இருபது வயசுக்குள்ள நான் கோடீஸ்வரனா வருவேன். நம்ம கவலை எல்லாம் தீரும்..!”

பணம் சம்பாதிக்கும் வழிகளை அவன் யோசித்தான். தனது உறவினன் கஸ்தாவோ கவீரியாவுடன் சேர்ந்து, இரவில் கல்லறைத் தோட்டங்களில் உள்ள சமாதிகளின் பெயர்ப் பலகைகளைப் பெயர்த்தெடுத்து, அதிலுள்ள பெயர்களை அழித்துவிட்டு, அந்தப் பலகைகளை விற்க ஆரம்பித்தான் பாப்லோ. கையில் கொஞ்சம் காசு சேர்ந்தது. ஆனால், அது வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாக இருந்தது.

அடுத்து என்ன என்று யோசித்தவன், கார்களைத் திருட ஆரம்பித்தான். அவன் கைது செய்யப்பட சாத்தியங்கள், சாட்சியங்கள் பல இருந்தும் ஒவ்வொரு முறையும் அவன் தப்பித்து வந்தான். காரணம், கீழ்மட்ட போலீஸாருக்கு அவ்வப்போது அவன் கொடுத்த லஞ்சம்! எப்போதெல்லாம் உயர் அதிகாரிகள் அவனைத் தேடத் தொடங்குகிறார்களோ அப்போதெல்லாம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் அவனுக்குத் தகவல் கொடுத்து உதவினர்.
இந்தக் காரணங்களால், அவன் பெயர் நகரமெங்கும் பரவ, அவனைத் தேடி வந்திருந்தான் ரஃபேல். நெஞ்சு வரை பட்டன்கள் போடாமல், ‘டக் இன்’ செய்யாமல், ‘ஸ்லீவ்’களை முழங்கை வரை மடக்கிவிட்டு, இரண்டு கைகளையும் தனது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, தனக்கு முன்னால் ‘கேர் ஃப்ரீ’யாக நிற்பதைப் பார்த்த உடனே, ரஃபேலுக்கு பாப்லோவைப் பிடித்துவிட்டது. நேரடியாக விஷயத்துக்கு வந்தான் ரஃபேல்.
“என்னோட பொருட்கள் அடிக்கடி திருடு போகுது. இதனால என்னோட லாபம் குறையுது. யார், எங்கே, எப்படித் திருட றாங்கன்னு தெரியலை. என்னோட பொருட் களுக்கு நீ ‘பாடிகார்ட்’ ஆக இருக்கணும். லாபத்துல உனக்கு 10 பெர்சன்ட். ஓ.கே.வா..!”

“லாபம் பத்தியெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல என்னோட வேலை பிடிச்சிருக்கான்னு பாருங்க..!”
வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனுக்குப் பிரச்சினையின் வேர் புரிந்துவிட்டது. கன்டெய்னர்களிலிருந்து பொருட்களைப் பிரிக்கும் இடத்தில் சுமார் 50 பேரை வேலைக்கு அமர்த்தியிருந்தான் ரஃபேல். அவர்களுக்குக் கூலியை அவன் முறையாக வழங்கவில்லை. எத்தனையோ முறை இதுகுறித்து அவனிடம் முறையிட்டும், அவன் காதுகொடுத்துக் கேட்கவே இல்லை. இதனால் கோபமடைந்த அவர்கள், அவனது பொருட்களில் கைவைத்தனர். அதை வெளியே விற்று, தங்களின் கோபத்தைத் தீர்த்துக்கொண்டனர். இதை அறிந்துகொண்ட பாப்லோ, அவர்களை எல்லாம் அழைத்து ஒரு கூட்டம் போட்டான்.

“கைஸ்… இங்க பாருங்க. நாம நம்மோட பாஸுக்காக உழைக்கிறோம். அவரோட பொருட்கள் காணாமப் போனா, நம்ம இரண்டு பேருக் குமே வேலை போகும். அதனால நான் சொல்றதைக் கேளுங்க. நம்ம பாஸ் எனக்குக் கொடுக்கிற சம்பளத்துல சரி பாதியை உங்களுக்கு நான் தரேன். ஒரே கண்டி ஷன்… எனக்கு நீங்க உண்மையா இருக்கணும். ஒரு பொருள்கூடத் திருடு போகக்கூடாது!”

கூலியாட்களின் பயத்தைவிடவும் அவர்களது விஸ்வாசம் லாபத்தைப் பெருக்கும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. திருட்டு படிப்படியாகக் குறைந்து, இறுதியில் திருட்டு இல்லாமலேயே போனது. லாபம் அதிகரித்தது. ரஃபேலுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.
“பாஸ்… இப்போ நாம பிஸினஸ் பேசுவோம். எனக்கு லாபத்துல 10 பெர்சன்ட் இல்ல… 50 பெர்சன்ட் வேணும்!”

ரஃபேலின் முகத்தில் ஈயாடவில்லை. இப்போது பாப்லோ, ரஃபேலிடம் வேலை செய்யவில்லை. ஆனால், ரஃபேலின் பார்ட்னராகவே உயர்ந்தான். வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் என்று தன் ‘காண்ட்ராபாண்ட்’ பட்டியலை விரிவுபடுத்தினான். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் பொருட்களை நகர்த்துவதில் பாப்லோ நிபுணன் ஆனான். கோடிக்கணக்கில் பணம் புரண்டது. தன் தாயிடம் போட்ட சபதம் போலவே அவன் தனது 22 வயதில் கோடீஸ்வரனாகிவிட்டான். வீடு, கார், குடும்பத்துடன் அமெரிக்காவுக்குச் சுற்றுலா என வாழ்வைக் கொண்டாடினான். அந்தச் சமயம் அவனிடம் 40 ட்ரக்குகள் இருந்தன.

பாப்லோவின் வாழ்க்கையில் ‘லக்’ எனும் விஷயம், ‘சர்ச் ப்ளாக்’ போலீஸாரின் இரண்டு குண்டுகள் அவனைத் துளைக்கும் முன்பு வரை, கூடவே இருந்தது. வழக்கமாக, ‘காண்ட்ராபாண்ட்’ பொருட்களை ஏற்றி வரும் ட்ரக்குகளுக்கு முன்னால், பாப்லோ தன் ஜீப்பில் செல்வான். ஆனால் அன்று, ட்ரக்குகளை முன்னால் அனுப்பிவிட்டு, ஒரு ஹோட்டலில் சாப்பிடத் திட்டமிட்டிருந்தான். மிகச் சரியாக, அன்று பாப்லோவிடம் லஞ்சம் வாங்காத போலீஸார் ‘பேட்ரோலில்’ ஈடுபட்டி ருந்தனர். ட்ரக்குகள் சிக்கிவிட்டன. ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டார்கள். விஷயம் அறிந்த பாப்லோ, ஜீப்பை ஹோட்டலிலேயே நிறுத்திவிட்டு, ஒரு பஸ்ஸைப் பிடித்து நகரத்துக்கு வந்து சேர்ந்தான்.

ட்ரக் டிரைவர்கள் பாப்லோவுக்கு விஸ்வாசமாக இருந்ததால் யாரும் வாயைத் திறக்கவேயில்லை. வக்கீல்களை வைத்து அவர்களைச் சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்தான். ஆனால், சரக்குகளைத் தான் அவனால் காப்பாற்ற முடியவில்லை. அது அவன் கண்ட முதல் நஷ்டம். அதுவே அவனது ‘காண்ட்ரா பாண்டிஸ்டாஸ்’ அத்தியாயத்தை முடித்து வைத்தது!

(திகில் நீளும்...)

x