நீரோடிய காலம் 11: ஓயாமல் ஓடும் பெண் நதி!


ஒருங்கிணைந்த தஞ்சைப் பகுதியில் மூலை முடுக்குகள் எல்லாவற்றிலும் சுற்றும்போதுஅதிகம் கண்ணில் பட்டவர்கள் பெண் உழைப்பாளிகள்தான். ஆடுமாடு மேய்த்துக்கொண்டு, புல்லுக்கட்டைச் சுமந்துகொண்டு, சுள்ளி பொறுக்கிக்கொண்டு, வயல் வேலைக்கும் சித்தாள் வேலைக்கும் கையில் தூக்குவாளியைச் சுமந்துகொண்டு என்று வழியெல்லாம் பார்க்க முடிந்தது. கூடவே, வாசலில் சாணி தெளித்துக் கோலம் போடும் பெண்கள், குழந்தைகளைப் பள்ளிக்குத் தயார்செய்துகொண்டிருக்கும் பெண்கள் என்று எதிர்ப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஓடி ஓடி வியர்வை
சிந்தி உழைத்த ஆண்கள் இன்று மெல்ல மெல்ல மந்தமாகிக்கொண்டு வருவதையும் காண முடிந்தது.

ஆண்களின் மந்தத்துக்கு ‘டாஸ்மாக்’ எந்த அளவுக்குக் காரணமாகியிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆண்களில் இன்னும்
கடும் உழைப்பாளிகள் ஏராளமானோர் இருக்கிறார்கள்தான். ஆனால், அவர்களை இந்தப் பெண்கள் முந்திக்கொண்டுவிட்டார்கள்.

பயணத்தின் ஒரு பாதையில், குடவாசல் அருகில் உள்ள கருப்பூர் என்ற ஊருக்குச் சென்றபோது வசந்தா என்ற அசுர உழைப்பாளியைப் பார்த்தேன். வாழ்க்கையே முடிந்துபோகக்கூடிய துயரம். அந்த நிலையிலும் நிமிர்ந்து எழுந்து தன் உழைப்பினால் குடும்பத்தைக் கட்டியெழுப்பி, நல்ல நிலைக்குக் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் 60 வயது ஆகியும் இன்னும் கடுமையாக உழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

கருப்பூர். புத்தாறு, சோழசூடாமணி ஆறு என்று இரண்டு ஆறுகளாக குடமுருட்டி ஆறு பிரியும் இடம். குடமுருட்டி தன் பெயரை இழக்கும் இடம் என்றும் நகைச்சுவையாகச் சொல்வார்கள். அந்த ஊரின் சிறிய அக்கிரஹாரத்தில் வசிக்கும் பெண்மணி வசந்தா. (அவர் பிராமணப் பெண் அல்ல) 18 வயதில் திருமணம் ஆகி 28 வயதில் கணவனை இழந்தவர். குழந்தைகளுக்கு இளநீர் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய அவருடைய கணவர் தவறி விழுந்து உயிர் விட்டிருக்கிறார். மூன்று பெண் குழந்தைகள், கூடவே, வயிற்றில் மூன்று மாதக் குழந்தை.  எந்தச் சொத்தும் அவருக்கு இல்லை. வெளியுலகம் கொஞ்சம்கூட தெரியாது. அந்தச் சூழ்நிலையில்தான் 26 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு பெண்குழந்தைகளுடன் இந்த அக்கிரஹாரத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் வேலைக்கு வருகிறார். எந்த வேலையையும் சலிக்காமல் செய்து கொஞ்சம் கொஞ்சமாக நிலம் வாங்கி இன்று ஒன்பதரை மா வைத்திருக்கிறார். நான்கு பெண்களையும் நன்றாகச் செலவு செய்து திருமணம் செய்துகொடுத்து அவர்களுக்குத் தேவையானவற்றை இன்னமும் செய்துகொண்டிருக்கிறார்.

வசந்தாவின் கதையொன்றும் தொழில் துறையிலோ இதர துறைகளிலோ வெற்றியடைந்த சாதனையாளரின் கதை இல்லை. தஞ்சை மண்ணில் தன்னைப் பற்றிய எந்தச் சிந்தனையும் இல்லாமல் குடும்பத்துக்காக உயிரைக் கொடுத்து உழைக்கும் சராசரிப் பெண்களின் கதை.
அவரைச் சந்தித்துப் பேசினேன்.

மெலிந்த தேகம், செய்துகொண்டிருந்த வேலையைப் பாதியில் போட்டுவிட்டு நம்மைப் பார்க்க வந்திருந்தது போன்ற தோற்றம்.
“ஒங்க வீட்டுக்காரர் இறந்து கிட்டத்தட்ட நிர்கதியான சூழல்ல எப்படிம்மா எழுந்து வந்தீங்க?” என்று கேட்டேன்.

“உலகமே எனக்கு இருண்டு போச்சுங்குற மாதிரி இருந்திச்சிங்க. ஆனா, என்னோட மூணு பொண்ணுங்க முகமும் வயித்துல துடிச்சிட்டிருந்ததோட நெனப்பும்தான் என்னை ஒக்கார விடாம துரத்திச்சி. கொஞ்சம் கொஞ்சமா கடன் வாங்கி, யாரு எது சொன்னாலும் மறுக்காம வேல செஞ்சி, வீடு கட்டி, நிலம் வாங்கி ஒருவழியா என் புள்ளைகள கரை சேத்துட்டேன்க. சும்மா சொல்லக்கூடாதுங்க, என் புள்ளைங்க ஒவ்வொண்ணும் அவ்வளவு கஷ்டப்பட்டிருக்குங்க. அப்பல்லாம் ஒரு இட்டலி 10 பைசா. அதைக்கூட அந்தப் புள்ளங்களுக்கு வாங்கிக்கொடுக்க முடியாத அளவுக்குக் கஷ்டப்பட்டிருக்கேன். அப்பறம் போட்டடிச்சு கரை சேந்துட்டங்க. எனக்கு இந்த அக்கிரஹாரத்துல ஒரு அய்யர் குடும்பம் அவ்வளவு உதவி பண்ணிருக்காங்க. அவங்ககிட்ட என்னோட நகைய கொடுத்துட்டு அவங்களோட நெலத்தை வாங்கிக்கிட்டேன். மாடாட்டம் உழைச்சி இப்போ ஒன்பதரை மா நிலம் வச்சிருக்கேன். மொறையா விவசாயம் செஞ்சா ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும். சமயத்துல தண்ணிப் பிரச்சினையால நஷ்டமாவும் ஆகிடும். தவணையில வாங்கி எப்படியாச்சும் சமாளிச்சிடுவன்” என்றார்.

“ஒங்களுக்குச் சொந்த நெலம் இருக்கு. அப்புறம் ஏம்மா இன்னும் ஓடி ஓடி உழைக்கிறீங்க?” என்று கேட்டேன்.
“அப்படி உழைச்சதனாலதான என் குடும்பத்தத் தூக்கி நிறுத்த முடிஞ்சிச்சு. எல்லாம் முடிஞ்சிச்சின்னு சும்மா இருந்தன்னா நம்ம மேலயே புல்லு முளைச்சிடாதுங்களா! இப்பவும் வீட்டு வேலை, நடவு, நாத்துப்பறியல், களையெடுக்குறது, வீட்டு வேலைன்னு போய்க்கிட்டுதான் இருக்கன்” என்றார்.
வசந்தாவின் உழைப்பை ஒரு நிறுவனத்தின், தொழிலகத்தின் உழைப்பாக மாற்றிக் கணக்குப்போட்டுப் பார்த்தால் இத்தனை காலம் உழைத்ததற்கு அவர் இன்று பெரிய பன்னாட்டு நிறுவன அதிபராக இருப்பார் என்று தோன்றியது. வியப்புடன் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, “சரிங்க, வேலையைப் பாதியிலயே விட்டுட்டு வந்துட்டேன். புறப்படுறங்க” என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.

மன்னார்குடியிலிருந்து முத்துப்பேட்டையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். வழித்துணையாக பாமணியாறும் வலது பக்கத்தில் வந்துகொண்டிருந்தது. மன்னார்குடியிலிருந்து கொஞ்ச தூரத்தில் `மரவாக்காடு-55' என்ற கிராமம் வந்தது. சாலைக்கும் ஆற்றங்கரைக்கும் இடையிலுள்ள பரப்பில் பெண்கள் நிறைய பேர் மரக் கன்றுகளை நட்டுக்கொண்டிருந்தனர். 100 நாள் வேலைத்திட்டமாம்.

ஒரே இடத்தில் பல பெண்களின் கதையைக் கேட்க நல்ல வாய்ப்பு என்பதால் அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒருவர்தான் என்றில்லாமல் ஊடாகவும் மாறிமாறியும் ஓரத்தில் நின்றுகொண்டு நக்கலாகவும் அந்தப் பெண்கள் பதில் அளித்தார்கள்.
“உங்களுக்கெல்லாம் எவ்வளவு சம்பளங்க?” என்று கேட்டேன்.

“ஒரு நாளைக்கு 205 ரூவாங்க. சமயத்துல ஆளுங்க அதிகமா போயிட்டா அதுக்கு ஏத்தபடி 185 ரூவா, 200 ரூவான்னு கிடைக்கும்” என்றார்கள்.
“ஒங்க வீட்டுக்காரங்கள்லாம் வேலைக்குப் போறாங்களா?” என்று கேட்டேன். பலரிடமிருந்தும் ஒரே மாதிரியான பதில்தான் வந்தது.
“போறாருங்க. ஒரு நாளைக்கு 500 ரூவா கூட சம்பாதிப்பாரு. ஆனா, அதுல ஒத்த பைசா வீட்டுக்குத் தரமாட்டாரு. முழுக்கக் குடியல்தான். எங்க சம்பளத்துலதான் குடும்பம் ஓடுது. பிள்ளைகளையும் படிக்க வெச்சிடுறோம்” என்றார்கள்.

“இந்தக் கிராமத்துலதான் டாஸ்மாக் இல்லையே?”

“நீங்க வேற. குடிகாரங்க சிரமப்படக் கூடாதுன்னு மன்னார்குடியிலருந்து சரக்க வாங்கிவந்து சில வீடுகள்ல கூட 10 ரூவா வச்சி விக்கிறாங்க. ஊர்ல சரக்குவிக்கக்கூடாதுன்னு தட்டிக்கேட்டதுக்கு போலீஸ்காரங்களுக்கு மாமூல் கொடுக்குறோம், அதனால் எங்களுக்கு பயமில்லைன்னு சொல்லுறாங்க” என்று புலம்பினார்கள்.

“உங்கள் கணவர்களில் யாராவது இதுவரை குடியை விட்டுட்டுத் திருந்தியிருக்காங்களா?” என்ற கேள்விக்கு எல்லோருமே உதட்டைப் பிதுக்கினார்கள்.

“சார், புருஷனக் கொடுமப்படுத்துற பொண்டாட்டியைப் பத்திக் கேக்க மாட்டீங்களா?” என்று ஒரு அக்கா சிரிப்புத் தாளாமல் போட்டுக்கொடுத்தார்.

“அது என்னைதான் சார் சொல்லுது. வேற என்ன சார் பண்ண? காலையில எழுந்திருச்சி நாமல்லாம் காபி குடிப்போம். என் வீட்டுக்காரருக்குத் தண்ணியடிக்கலன்னா கால் நடுங்க ஆரம்பிச்சிடும். 500 ரூவா சம்பாதிச்சு 500 ரூவாய்க்கும் குடிச்சிடுவாரு. இதுனால வீட்டுலெ தெனமும் சண்டை. புள்ளங்களோட படிப்பும் எங்க சண்டையால கெட்டுப்போகுது. புள்ளங்களுக்கு முன்னாடி கெட்ட வார்த்தை சொன்னா சும்மா விடுவேனா சார்! அதான் அவர அடிச்சுப் போட்டுடுவன். அடிச்சாலும் திட்டுனாலும் மூணு வேளையும் சாப்பாடு ஒழுங்காப் போட்டுடுவேன். தாலி சென்டிமென்ட்டு இருக்குல்ல சார்” என்று சொல்லிவிட்டு வெட்கம் தாளாமல் சிரிக்க ஆரம்பித்தார்.

“சீரியல் பாத்தே இப்படிச் சீரழியிறீங்களே அக்கா!” என்று என் பங்குக்கு நானும் அவர்களை நக்கலடித்தேன்.

அவர்களிடம் மேலும் பேசிக்கொண்டிருந்தபோது துயரமும் உழைப்பும் அவர்களின் ஒவ்வொரு நொடியிலும் பிணைந்திருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனாலும், அத்தனை பேரும் இதெல்லாம் ஒரு விஷயமா என்பதுபோல் ஒருவருக்கொருவர் நக்கல் அடித்துக்கொள்வதும் பாட்டு பாடுவதும் நடித்துக் காட்டுவதும் என்று அமர்க்களப்படுத்தியிருந்தார்கள்.

அவர்களிடமிருந்து விடைபெறும்பொது, ஒரு அக்கா திடீரென்று பாட ஆரம்பித்தார்:

“யாரைப் பாத்தோ சிரிக்க
அவன் தன்னத்தான்னு நெனைக்க
அவன் பவுடரு அள்ளிப் பூசி
அவன் பரட்டத் தலைய சீவி
அவன் கால்கடுக்க நடந்துவந்தான்
காதலிக்க அலைஞ்சி வந்தான்…”
தஞ்சையின் ஒரு சின்ன முடுக்கில்கூட வாழ்க்கை எவ்வளவு  நிரம்பிக்கிடக்கிறது என்பதை அந்த அக்காவின் குரல் வெகுநேரம் எனக்கு உணர்த்திக்கொண்டிருந்தது.

(சுற்றுவோம்...)

x