பதறும் பதினாறு 20: பெற்றோருக்கான அவசர, அவசியத் தொடர்!


பன்னிரண்டு வயதுச் சிறுவன் அவன். சைக்கிள் கிடைத்த மகிழ்ச்சியில் தன்னைவிட இரண்டு, மூன்று வயது மூத்த இளைஞர்களைக் காணச் செல்கிறான். சிறுவனாக இருந்தாலும் சைக்கிள் வைத்திருப்பதால் அவர்கள் அவனைத் தங்கள் குழுவில் சேர்த்துக்கொள்கின்றனர். சிறிது நேரத்தில் அந்த இளைஞர் கூட்டம் பரபரப்பாகிறது. தொலைவில் ஓர் இளம்பெண் நடந்து வருகிறாள். உலகின் நளினம் அனைத்தும் கொண்ட பேரழகியாக இருக்கிறாள் அந்தப் பெண். அவள் அந்தச் சாலையைக் கடந்து முடிக்கும்வரை இளைஞர் கூட்டம் வைத்த கண் வாங்காமல் அவளைப் பார்க்கிறது. பிறகு, சட்டெனத் தங்களது சைக்கிளில் தாவியேறிப் பறக்கின்றனர். குறுக்குச் சாலையில் புகுந்து, மீண்டும் அந்த இளம்பெண்ணைப் பார்க்கின்றனர். இப்படியே அவள் கட்டிடத்துக்குள் நுழைந்து மறையும்வரை பார்க்கின்றனர். பிறகு, அந்தப் பெண் குறித்துத் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். 

சிறுவனின் காதல் கடிதம் 

அது இரண்டாம் உலகப் போர் நடக்கும் காலம். அந்தச் சிறுவர்கள் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். தன்னுடைய கணவன் போருக்குச் சென்றிருந்ததால் காது கேளாத தந்தையுடன் வாழ்ந்துகொண்டிருந்தாள் அந்த இளம் பெண்.

அந்தப் பெண்ணைப் பார்ப்பதையும் அவளது அழகை ரசிப்பதையுமே அந்தச் சிறுவன் முழுநேர வேலையைப் போல் செய்துகொண்டிருந்தான். பள்ளிக்குச் சென்றாலும் அங்கேயும் அவனுக்கு அந்தப் பெண்ணின் நினைவுதான். வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் அவனது கண்ணுக்கு அந்த இளம் பெண்ணாகவே தெரிந்தார். திரும்பிய பக்கமெல்லாம் அந்தப் பெண்ணே நிறைந்திருந்தாள். அந்தப் பெண்ணுக்கு தானே தகுதியான துணை என அந்தச் சிறுவனின் குழுவில் ஒவ்வொருவரும் வாதிட, இவனும் தன் பங்குக்கு ஒன்றைச் சொல்கிறான். அதற்கு அவர்கள் இவனைச் சிறு பையன் எனச் சொல்லி கேலி பேசுகிறார்கள். 

பெண்களின் கவர்ச்சியான படங்கள் நிறைந்த புத்தகத்தை வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைத்துவைத்துப் பார்க்கிறான். அந்த இளம்பெண்ணின் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் மரத்தில் ஏறி, அங்கிருந்து அந்தப் பெண்ணின் செயல்களைக் கவனிக்கிறான். அந்தப் பெண்ணின் காதலனாகத் தன்னை உருவகித்துக்கொள்கிறான். அவளிடம் தவறாக நடந்துகொள்ளும் ஆண்களைச் சபிக்கிறான். அவர்களை நேரடியாகத் தாக்க முடியாது என்பதால் தேவாலயத்துக்குச் சென்று அங்கிருக்கும் தேவதூதன் சிலை முன் வேண்டிக்கொள்கின்றான். தேவதூதன் சிறுவனாக இருப்பதால் தன் மனத்தைப் புரிந்துகொள்ள முடியும் என நினைத்து தன் உள்ளக்கிடக்கையைச் சொல்கிறான். அந்தப் பெண்ணுக்கு நேரும் துன்பங்களை நினைத்து வேதனைப்படுகிறவன், “இன்னும் சிறிது காலத்துக்குப் பொறுத்துக்கொள். நான் வளர்ந்து பெரியவனாகி உன்னை மீட்பேன்” என்று கடிதம் எழுதுகிறான். 

உறக்கமற்ற இரவு 

பெண்ணின் உடல் குறித்த தொடர்ச்சியான சிந்தனையால் அவனது இரவுகள் உறக்கமற்றதாகிவிடுகின்றன. சுய இன்பத்தில் ஈடுபடுகிறான். அவனது இத்தகைய செயல்களைக் கண்டுகொண்ட அவனுடைய அப்பா, அவனை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டிவிடுகிறார். பிறகு, அங்கிருந்தபடி கத்துவதும் சத்தமாகப் பாடுவதுமாக இருக்கிறான். மயங்கி விழுகிற அவனைப் பரிசோதிக்கும் மருத்துவர், அவனுக்கு வெளிச்சமும் காற்றும் தேவை என்கிறார். கதவு திறக்கப்பட, மீண்டும் அந்த இளம்பெண்ணை சைக்கிளில் பின்தொடர்கிறான். தன் மகனைக் கெட்ட ஆவி பிடித்துவிட்டதாக நினைக்கும் அவனுடைய அம்மா, அவனைப் பேய் விரட்டும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். அதைப் பார்த்துச் சத்தமிடும் அப்பா, தன் மகனுக்குத் தேவை என்ன என்பதைச் சொல்ல அதிர்ந்து நிற்கிறார் அவருடைய மனைவி. 

மகனைப் பாலியல் தொழில் நடக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார் அப்பா.  “எல்லாம் சரியாகிவிடும்; இதுதான் உனக்குத் தேவை” என்கிற தோரணை யில் புன்னகைத்துவிட்டுச் செல்கிறார். மகனோ தன்னிடம் வரும் பெண்ணை  தான் காதலிக்கும் இளம்பெண்ணாகக் கற்பனை செய்துகொள்கிறான்.

சில நாட்களில் போர் முடிவுக்கு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் அந்த இளம் பெண்ணின் வாழ்வில் என்னென்னவோ நடந்துவிடுகின்றன. சிறுவனும் வளர்ந்துவிடுகிறான். தன் தோழியுடன் கைகோத்து நடக்கிறான். ஊரைவிட்டு விரட்டப்பட்ட அந்த இளம்பெண், தன் கணவனோடு மீண்டும் ஊருக்குத் திரும்புகிறாள். அவள் கையில் வைத்திருந்த பையைத் தவறவிட, சிறுவன் ஓடிச் சென்று உதவுகிறான். ஒரு கணம் அவள், அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறாள். இது, 2000-ல் வெளியான Malena என்ற இத்தாலிய மொழிப் படம். இது பதின் பருவத்தில் ஒரு சிறுவனின் மனத்திலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்துச் சொல்கிறது. 

ஆண் குழந்தைகள் எப்போதும் இப்படித்தான் சிந்திப்பார்கள் என்பதில்லை. ஆனால், பெரும்பாலான நேரம் அவர்களது மனதை இப்படியான குழப்பங்களும் கேள்விகளுமே ஆக்கிரமித்து இருக்கும். இந்தப் படத்தில் வருகிற தந்தை தன் மகனை, அவனது பருவ மாற்றத்தைப் புரிந்துகொள்கிறார். ஆனால், இத்தனை நாட்களாக நம் கைகளுக்குள் அடங்கி நடந்த பிள்ளை இப்படித் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்கிறானே என்பதே நம்மில் பெரும்பாலான பெற்றோரின் புரிதலாக இருக்கிறது. 

பெருக்கெடுக்கும் இளமை நதி 

பதின் பருவத்தில் ஹார்மோன்களின் தூண்டுதலால் பெரும்பாலான ஆண் குழந்தைகள் தங்களைப் பெரியவர்களாகவே நினைத்துக்கொள்வார்கள். தாங்கள் அப்படித்தான் நடத்தப்பட வேண்டும் என விரும்புவார்கள். “பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவது எவ்வளவு இயல்பானதோ அதேபோலத்தான் ஆண்களுக்கு விந்து வெளியேற்றமும். சில நேரம், தாங்கள் ஏதோ தவறு செய்வதாகவும் செய்யக் கூடாததைச் செய்துவிட்டதாகவும் நினைத்துச் சில குழந்தைகள் குற்ற உணர்வுக்கு ஆளாகக்கூடும். ஆனால், அது தேவையில்லாதது. இதுபோன்ற விஷயத்தில் குழந்தைகளுக்குத் தெளிவை ஏற்படுத்த பள்ளிகளில் ஆலோசனை வகுப்புகளை நடத்த வேண்டும். உடல், மன ரீதியிலான மாற்றங்கள் குறித்து அவர்களுக்குத் தெளிவாக விளக்க வேண்டும். அப்போதுதான் வீணான கற்பனைகள் தவிர்க்கப்படும்” என்கிறார் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் உடலியல் துறை உதவிப் பேராசிரியர் ஸ்ரீவித்யா. 

வளரிளம் பருவத்தில் இருக்கும் ஆண்களின் மனக் குழப்பங்களைப் பொறுமையுடனும் பக்குவத்துடனும் கையாள வேண்டும். எதற்கெடுத்தாலும் அவர்களைச் சந்தேகத்துடன் அணுகுவதைவிட அவ்வப்போது கண்காணிப்பதே நல்லது.  “இதுபோன்ற எண்ணங்கள் தோன்றுவது இயல்பு. அதற்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. ஆனால், படிப்பதற்கு இந்தக் காலம்தான் சிறந்தது” எனப் பக்குவமாக எடுத்துச் சொல்லலாம். அவர்களின் அனைத்துச் செயல்பாடுகளையும் விமர்சிப்பது எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்தும். பெற்றோரும் இந்த வயதைக் கடந்துவந்தவர்கள்தானே. அதனால் குழந்தைகளின் உணர்வைப் புரிந்துகொண்டு அதை நேர்ப்படுத்திவிட வேண்டுமே ஒழிய, அவர்களை அவமானப்படுத்தும் விதமாக நடந்துகொள்ளக் கூடாது. இளமைத் துடிப்பில் அவர்கள் செய்கிற செயல்கள் சில நாட்களில் குறைந்துவிடும். அதனால் நாம் அவ்வப்போது அவர்களுக்கு நல்லவிதமாக ஆலோசனை சொன்னால் மட்டுமே போதுமானது. நிலைமை எல்லை மீறுவதாகத் தோன்றினால் மட்டும் நாம் குறுக்கிடலாம். மற்றபடி குழந்தைகள் அவர்களாகவே இளமை நதியை நீந்திக் கடப்பார்கள். 

(நிஜம் அறிவோம்...)

x