இந்த விதைநெல்லும் விருட்சமாகும்...


விருட்சம் என்றால் பொதுவில் மரத்தைத்தான் குறிக்கும். எட்டுத்திக்கிலும் படர்ந்து,விரிந்து கிளைபரப்பி தன்னை நிலைநிறுத்திக் கொள்வது விருட்சத்தின் இயல்பு. நெல்லுக்கு அந்த இயல்பு கிடையாது. ஆனால், தற்போது முதன்முறையாக விதைநெல்லும்கூட விருட்சமாகியிருக்கிறது. ஆம், ‘நெல் ஜெயராமன்’ என்னும் விதைநெல் தமிழ்கூறும் நல்லுலகின் விருட்சமாக விதைக்கப்பட்டிருக்கிறது.

நெல் ஜெயராமன் மறைந்தார் என்ற செய்தி கிடைத்த அன்றைய இரவுப்பொழுது முழுவதும் அவரைப்பற்றிய சிந்தனைகள் என் தூக்கத்தைப் புறந்தள்ளியது. முதன்முதலில் அவரைச் சந்தித்தது நினைவாடியது. “இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல்நகரங்களைப் போற்றி அவற்றை மீட்டெடுக்கும் ஒருவர் இருக்கிறார்” என்று எனக்குத் தெரிந்த பத்திரிகை நண்பர் ஒருவர் தான் நெல் ஜெயராமனை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். ஆதிரெங்கத்தில் உள்ள பண்ணையில் ஜெயராமனைச் சந்தித்தேன். பண்ணை என்றால் அது அவருடையதில்லை. சிறியதான சொந்தவீட்டைத் தவிர இறுதி மூச்சு வரையிலும் வேறெந்த சொத்தையும் அவர் சம்பாதிக்கவில்லை. அவரின் அந்தத் தன்னலமற்ற குணம்தான், இறுதி நாட்களில் நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், ஆரி, உள்ளிட்டவர்களின் நேசத்தையும், லட்சக்கணக்கான தமிழர்களின் அபிமானத்தையும் அவர்பக்கம் திருப்பியது.

ஜெயராமனின் சேவையைப் பற்றி அறிந்த ஆதிரெங்கத்தைச் சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர் அவருக்குக் கொடுத்த நிலத்தில் மண்ணின் மகத்துவம் காக்கும் மாபெரும் பணியைச் செய்துகொண்டிருந்தார் ஜெயராமன். நான் போனபோது மண்வெட்டியோடு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பார்த்த அந்த எளிமை அவரது இறுதிப் பயணம் வரையிலும் மாறவேயில்லை. அப்போது நான் எடுத்த பேட்டியின் மூலமாகத்தான் ஜெயராமனைப் பற்றிய முழுமையான தகவல்கள் வெளியுலகுக்குத் தெரியவந்தது என்றே சொல்லலாம்.
தன்னிடம் ஒரு விவசாயி கொடுத்த ஏழு வகை பாரம்பரிய விதைகளைக் கூடவேயிருந்த ஒல்லியான தேகத்துக்குச் சொந்தக்காரரான ஜெயராமன் கையில் ஒப்படைத்தார் நம்மாழ்வார். அந்த விதைகளைக் கையில் வைத்தபடியே இதேபோல வேறு ரகங்களும் இருக்குமே என்ற தேடலை ஜெயராமன் ஆரம்பித்தார். ஓலைச்சுவடிகளைத் தேடித்தேடி உவேசா அலைந்ததைப்போல பாரம்பரிய ரகங்களைத் தேடித்தேடி கால்தேய நானிலம் முழுவதும் நடந்தார் ஜெயராமன். உவேசாவுக்குக் கிடைத்த சங்கத்தமிழ் காப்பியங்கள்போல இவருக்கும் பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் கிடைத்தன. அத்தனையும் மீட்டெடுத்து  மீள் உருவாக்கம் செய்து விவசாயிகளிடம் கிடைத்ததை விவசாயிகளிடமே கொண்டுசேர்த்த பெருங்கொடையாளரானார்.

ஜெயராமனால் மொத்தம் 174 பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

x