ஆதாயம் தேட முயற்சி செய்யக் கூடாது!


மேகேதாட்டு உள்ளிட்ட எந்த இடத்திலும் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசை உத்தரவிட வலியுறுத்தும் தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றித் தரப்பட்டுள்ளது.

தமிழக மக்களின் நலன் கருதி இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்திருக்கும் திமுக, “மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாகத் தீர்மானம் இருந்திருந்தால் உயிரோட்டமாக இருந்திருக்கும்” என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறது. எதிர்க்கட்சிகள் அப்படித்தான் பேசுவார்கள் என்று சொல்லி ஆளும்கட்சி இதை எளிதில் கடந்துவிடலாம். ஆனால், இதற்கு முன்பும் மத்திய அரசிடம் பணிந்து கேட்கும் விதமாகத் தமிழக சட்டமன்றத்தில் இன்னும் சில தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது அதில் முக்கியமான தீர்மானம். இந்தத் தீர்மானம் என்ன ஆனது? ஒட்டுமொத்த மாநிலத்தின் பிரதிபலிப்பான இந்தக் கோரிக்கையை மத்திய அரசு எந்தளவுக்கு மதித்தது என்பதை எல்லாம் தமிழகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இப்போது இந்தத் தீர்மானமும் பத்தோடு பதினொன்றாகப் போய்விடாது என்று யார் உத்தரவாதம் தருவது?

ஒருபக்கம் தமிழகம் கேட்கும் நியாயமான கோரிக்கைகளுக்கு எவ்விதச் சலனமும் காட்டாத மத்திய அரசு, இன்னொரு பக்கம், தங்களுக்குக் கேடு என்று சொல்லி தமிழக மக்கள் எதிர்க்கும் ஸ்டெர்லைட் ஆலை போன்ற விஷயங்களை, தமிழக அரசே எதிர்த்த பிறகும், மாற்று வழியில் திணிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுக்கிறது.

இப்படி நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் மத்திய அரசும் அதன் அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் பாஜகவும் தமிழக மக்களின் ஆதரவும் தங்களுக்குத் தேவை என சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதைவிடுத்து, தமிழகத்தின் நலனை கர்நாடகத்திடம்  காவுகொடுத்து அதன் மூலம் அங்கே ஆதாயம் தேடும் முயற்சியில் இறங்கக்கூடாது.

x