வாழும் வள்ளுவருக்கு வயது அறுபது!


நியோகி

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த நெடு நிலத்தை தமிழ் கொண்டு அளந்தவர் திருவள்ளுவர். மானுடத்தைக் குறித்த அவரது நிதர்சனங்கள் அனைத்தும் கால தேச வர்தமானங்களைக் கடந்து வென்றவை.

உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட மதம் சாரா நூல் என்ற பெருமை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு. அன்றும் இன்றும் என்றும் உலகளாவிய மனிதர்களை எடைபோடவல்ல 1,330 திருக்குறள்களைப் படைத்த அந்தத் திருவள்ளுவர் எப்படி இருந்திருப்பார் என்ற சிந்தனை அந்த நாட்களில் பலருக்குள் எழுந்தது. அவரவரும் தங்களின் சிந்தனைக்கு எட்டிய வழியில் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கலாயினர்.

திருவள்ளுவருக்கு ஒருவர் பட்டை போட்டுப் பார்த்தார். ஒருவர் மொட்டை போட்டுப் பார்த்தார். சமயங்களும் மதங்களும் போட்டி போட்டுக்கொண்டு திருவள்ளுவரை `எங்களவராக்கும்...’ என சொந்தம் கொண்டாடின. ஆனால், வள்ளுவரோ தன் படைப்பில் எங்குமே அவைகளைக் கொண்டாடவில்லை. அவர் கொண்டாடியது மானுடத்தை மட்டுமே. அவர் சொல்ல வந்த சேதி எல்லோருக்கும் நான் பொதுவானவன் என்பதே!
அப்படியென்றால், உலகப் பொதுமறை தந்தவரின் திருவுருவம் உலகளாவிய பொது உருவமாகத்தானே இருக்க முடியும் என்று சமதர்ம நோக்கில் சிந்தித்தவர் ‘ஓவியப் பெருந்தகை’ கே.ஆர். வேணுகோபால் சர்மா. வள்ளுவருக்கு ஒரு பொதுவான புறத் தோற்றத்தை வடிக்கவேண்டும் எனப் புறப்பட்ட அவர், ஏறத்தாழ 40 ஆண்டுகள் தொடர்ந்து திருவள்ளுவர் திருவுருவம் குறித்த சிந்தனையோட்டத்திலேயே இருந்தார். தனது வாழ்வை மைசூர் சமஸ்தானத்துக் கலைஞராகத் துவங்கியவர், 1950-களில் தன்னுடைய க்ரீன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக மூன்று திரைப்படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் என்பது சுவையான துணைச் செய்தி.

x