தேவதைகளெல்லாம் குழந்தைகளிடம்தான் வரும்!- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேட்டி


ஆசை

சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட பிறகுதான் பல எழுத்தாளர்கள் மக்களிடையே பரவலாவது வழக்கம். ஆனால், இந்த விருது கிடைப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பே உலகத் தமிழரிடையே மிகவும் பிரபலமானவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவரது ‘சஞ்சாரம்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட மறுநாள் சாலிகிராமத்தில் அவரைச் சந்தித்தேன். வெவ்வேறு பத்திரிகைகள், தொலைக்காட்சி சேனல்கள் போன்றவற்றிலிருந்து அவரைச் சந்திக்கப் பலரும் முண்டியடித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்னுடன் உற்சாகமாக 
உரையாடினார்.

உங்கள் வாசகர்கள் இந்த விருதைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு எப்படி இருக்கிறது?

கரிசல் பூமியான மல்லாங்கிணரில் பிறந்து வளர்ந்த நான், எழுத்தாளனாக ஒரு 25 ஆண்டுகாலம் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக முழுநேர எழுத்தாளன். எனக்கு வேறு வேலைகள், பதவிகள் ஏதும் கிடையாது. எழுத்தையே வாழ்க்கையாக வாழ்ந்துகொண்டிருப்பவன் என்கிற முறையில் சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை என்னுடைய இத்தனை வருட எழுத்து வாழ்க்கையை அங்கீகரிப்பவை என்றே கருதி மகிழ்ச்சி கொள்கிறேன்.

x