ஹாட் லீக்ஸ்: திருப்பித் தாக்கும் போராட்டம்?


திருப்பித் தாக்கும் போராட்டம்?

சபரிமலை விவகாரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்ட பாஜக, கேரளத்தில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கிறது. பேரணி, பொதுக்கூட்டம், போராட்டம் என  ஆளும் மார்க்சிஸ்ட் அரசுக்குக் கடும் நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது அந்தக் கட்சி. இதெல்லாம் தங்களுக்கு அரசியல் ரீதியாகக் கைகொடுக்கும் எனக் கணக்குப் போட்டது பாஜக. ஆனால், அரசியல் களமோ வேறுமாதிரியாய் போய்விட்டது. கேரளத்தில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் காலியாக இருந்த 39 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இடைத் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் 19 இடங்களை ஆளும் மார்க்சிஸ்ட் கூட்டணி தட்டிச் செல்ல, போராடிக் களைத்துப்போன பாஜக இரண்டே இரண்டு வார்டுகளை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது.

பூசாரித்தனமும் வேணாம்... பொங்கச் சோறும் வேணாம்!

ரயில்வே கேட்கீப்பர் மணிமாறன் தாக்கப்பட்ட விவகாரத்தில் திண்டுக்கல் அதிமுக எம்பி உதயகுமார் ஏடாகூடமாகச் சிக்கிக் கொண்டார். இந்த விவகாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வரைக்கும் போகப் போகிறது என்று தெரிந்ததும் கட்சித் தலைமையின் கதவைத் தட்டினார் உதயகுமார். ஆனால் அவர்களோ, ``பிரச்சினையைப் பெருசாக்கிடாம மணிமாறனை சாந்தப்படுத்தப் பாருங்க” என்று சொல்லி விட்டார்களாம். இதையடுத்தே, மணிமாறனை வலிய சந்தித்து வருத்தம் தெரிவித்தாராம் எம்பி. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் நத்தம் விசுவநாதனைப் போட்டியிடச் சொல்கிறதாம் அதிமுக தலைமை. அவரோ, “நான் நிற்கத் தயார். ஆனால், திண்டுக்கல் சீனிவாசனின் ஆட்களே என்னைத் தோற்கடிச்சுருவாங்களே” என்று சொல்லி ஜகா வாங்குகிறாராம். உதயகுமாரிடம், “மீண்டும் நீங்களே நில்லுங்கள்” என்றதற்கு “சம்பாதிக்கிறதெல்லாம் யாரோ, செலவழிக்க மட்டும் நானா? வெல்லம் எடுக்கிறது ஒருத்தன் விரல் சூப்புறது இன்னொருத்தனா? போதும்யா... உங்க பூசாரித்தனமும் வேணாம் பொங்கச் சோறும் வேணாம்” என்று சற்று கோபமாகக் கொதித்துவிட்டாராம். கேட் கீப்பர் விவகாரத்தில் கட்சித் தலைமை ‘கேட்’டை சாத்தியதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள்.

x