விசேஷமான நாட்டு மாடுகளைத் தேடிய பயணம் இது. காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன்பு, பசுமையற்ற பகுதியில் மேற்கொண்ட பயணம். காவிரி மண்ணின் வேறு ஒரு நிலக்காட்சி ஓவியத்தை என் மனச்சுவரில் அந்தப் பயணம் வரைந்தது. தண்ணீர் திறந்துவிட்ட பிறகோ, கஜா புயலுக்குப் பிறகோ அந்தப் பகுதிகளில் பயணம் செய்திருந்தால் இன்னும் வேறுவிதமான நிலக்காட்சி ஓவியங்கள் என் மனச்சுவரில் வரையப்பட்டிருக்கும்.
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு வந்து, அங்கிருந்து தலைஞாயிறு செல்லும் சாலையில் பயணித்தோம். கடலின் அருகாமை, கடைமடை என்ற யதார்த்தம் அங்குள்ள மண், தாவரங்கள், வீடுகள், வாழ்க்கை முறை என்று அனைத்திலும் பிரதிபலித்தன. உம்பளச்சேரிக்கு வந்து மாட்டுப்பண்ணை எங்கே என்று கேட்டபோது “மாட்டோட பேருதான் உம்பளச்சேரி மாடு. ஆனா, மாட்டுப்பண்ணை இங்கேயிருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்துல இருக்குற கொருக்கையில இருக்கு” என்றார்கள்.
விசாரித்துக்கொண்டே உம்பளச்சேரிக்கு வடமேற்காக இருந்த கொருக்கையை அடைந்தோம். மாட்டுப்பண்ணையை அடுத்து காப்புக்காடு இருந்தது. பண்ணையின் மருத்துவமனை வாசலில் எங்கள் கார் நுழைந்தபோதே இன்னொரு காரில் கன்றுக்குட்டி ஒன்றைச் சிலர் கொண்டுவந்து இறக்கினார்கள். வீட்டுப் பிள்ளையை டாக்டரிடம் அழைத்துச்செல்வதுபோலவே அவ்வளவு பாந்தமாக அந்தக் கன்றுக்குட்டியைக் கொண்டுவந்தனர். அந்தப் பண்ணையின் மருத்துவர் ஒருவர் வந்து அதற்கு உரிய மருந்தைச் செலுத்தி, கன்றுக்குட்டியைத் தடவிக்கொடுத்தார். கவலையுடன் அவரைச் சுற்றி நின்றிருந்த ‘உறவினர்’களுக்கு, “பயப்பட ஒன்றுமில்லை” என்று ஆறுதல் கூறினார் அந்த மருத்துவர்.
தஞ்சை பூமியில் மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு அலாதியானது. அளவுக் கதிகமாக வேலைவாங்குவது, அளவுக்கதிகமாகப் பாசம் காட்டுவது இந்த இரண்டும் இங்கு உண்டு. மாட்டுக்கு ஏதாவது என்றால் துடிதுடித்துப்போவார்கள். உண்மையில் பல விவசாயிகளின் வீடுகளில் பொங்கலைவிட மாட்டுப்பொங்கல்தான் ரொம்பவும் விசேஷமாக இருக்கும்.
உள்ளே சென்றபோது ‘கொருக்கை கால்நடைப் பண்ணை’யின் துணை மேலாளர் டாக்டர் எம். ஹமீது அலியும், மேலாளர் டாக்டர் நெப்போலியனும் எங்களை வரவேற்றனர். “பண்ணையைப் பற்றியும் உம்பளச்சேரி மாடுகளையும் பற்றிப் பேசுவதற்கு முன்பு முதலில் மாடுகளைப் போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார்கள்.
அருகில் உள்ள மேய்ச்சல் பண்ணைக்குச் சென்றோம். சற்று வளர்ந்த கன்றுக்குட்டிகளைப் பெரிய தொழுவத்தில் அடைத்துவைத்து வைக்கோல், புல் போன்றவற்றைப் போட்டுக்கொண்டிருந்தனர். அங்குள்ள பணியாளர்களிடம் வளர்ந்த மாடுகள் எங்கே என்று கேட்டபோது இன்னும் உள்ளே தூரத்தில் கைகாட்டினார்கள். கூடவே, “இந்த மாடுல்லாம் ரொம்பவும் கோவக்காரதுங்க. சாக்கிரதையா போங்க. கையில குச்சி ஏதாச்சும் எடுத்துக்குங்க” என்றனர்.
சில மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. சில மாடுகள் அச்சலாத்தியாகப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. நாம் அருகில் வருவதைப் பார்த்து அனைத்துமே எச்சரிக்கையடைந்தன. வால் ஆடியது. இன்னும் கொஞ்சம் அருகில் சென்றால் நிச்சயம் எல்லாமே திரண்டுவந்து முட்டிவிடும்போல் தோன்றியது.
“தி.ஜானகிராமனோட ஒரு நாவல்லயோ கதையிலயோ ஒரு பாத்திரம் ‘நான் உம்பளச்சேரி மாட்டோட பாலைக் குடிச்சவளாக்கும்’னு பெருமையா சொல்லும். அந்த அளவுக்கு இந்த மண்ணோட பிரிக்க முடியாத ஒரு மரபு இந்த மாடு” என்றார் தங்க.ஜெயராமன்.
இன்னொரு பிரிவுக்குச் சென்றோம். அங்குள்ள எல்லா மேடுகளும் மேய்ச்சலுக்காகப் போய்விட்டிருக்க, ஒரு காளையனை மட்டும் தனியே கட்டிப்போட்டிருந்தார்கள். ஜல்லிக்கட்டுக்கேற்ற காளை. திமிலைப் பிடித்துத் தொங்க வேண்டும் போல் இருந்தது. ஆனால், சற்றுத் தொலைவிலேயே நம்மைப் பார்த்துவிட்டு வாடிவாசலில் தயாராக இருக்கும் காளையைப் போல பெரும் சீற்றத்துடன் மூச்சை விட ஆரம்பித்தது. பாயப்போவதற்குத் தயாராகக் காலால் மண்ணைப் பின்னால் வார ஆரம்பித்தது. தாம்புக் கயிற்றின் மேல் நம்பிக்கை வைத்து அதைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தோம்.
மீண்டும் அந்தப் பண்ணையின் மருத்துவமனைக்குத் திரும்பினோம். நம்முடன் பேசுவதற்கு டாக்டர் ஹமீதும் நெப்போலியனும் தயாராக இருந்தார்கள்.
டாக்டர் ஹமீது பேச ஆரம்பித்தார். “1957-ல் ஆரம்பித்த பண்ணை இது. இயந்திரமயமாதல் தீவிரமடைய ஆரம்பித்திருந்த காலகட்டம் அது. அந்தச் சமயத்தில் இந்த ஊரைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர் உம்பளச்சேரி மாட்டினம் அழிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அப்போது முதல்வராக இருந்த காமராஜரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் நில்லாமல் தன் பங்குக்கு 42 ஏக்கர் நிலத்தையும் அவர் கொடுத்தார். 80 ஏக்கர் நிலம் மற்றவர்களிடமிருந்து அரசாங்கத்தால் வாங்கப்பட்டது. மீதி நிலத்தை அரசே தந்து இந்தப் பண்ணை தொடங்கப்பட்டது” என்றார்.
“மொத்தம் 450 ஏக்கர் பரப்பளவு. விவசாயப் பிரிவு, கால்நடைப் பிரிவு, பால்பண்ணைப் பிரிவு என்று மூன்று பிரிவுகள் செயல்படுகின்றன. இன்றைய தேதிக்கு 502 மாடுகள் இங்கே இருக்கின்றன. உம்பளச்சேரி மாடுகள் மட்டும்தான் வைத்திருக்கிறோம்” என்றார் டாக்டர் நெப்போலியன்.
“இங்கே இயற்கை முறையில் கருவூட்டல் செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் 50 ஏக்கரில் மாடுகளுக்காகவே மகாராஷ்டிரா எருமைப்புல் வளர்க்கிறோம். அந்தப் புல்லின் சிறப்பம்சம் என்னவென்றால் மழை நாட்களில் பத்துப் பதினைந்து நாட்களானாலும் அழுகிவிடாமல் நிற்கும். எங்களிடம் கிட்டத்தட்ட 100 ஏக்கரில் குளங்கள் இருக்கின்றன. வருடத்தில் மூன்று மாதங்கள் தண்ணீர் இருக்காது என்பதால் மழைநீரை அந்தக் குளங்களில் முறையாகப் பிடித்துவைத்திருப்போம். பால் பிரிவில் கன்றுபோட்ட மாடுகளை மட்டுமே வைத்திருப்போம். கன்று போட்டு ஒரு வருடம் வரை வைத்திருப்போம்.
இந்தப் பண்ணையின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று ஈச்சங்கோட்டைக் கால்நடைப் பண்ணைக்கு சினை ஊசி தயாரிப்பதற்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு காளைகள் கொடுப்பது. இரண்டாவது, விவசாயிகளுக்கு உழவு மாடுகள் கொடுப்பது. பதிவுமூப்பின் அடிப்படையில் வருடத்துக்கு மொத்தம் 70 காளைக் கன்றுகள் வீதம் கொடுப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கிடேரிக் கன்றுகளையும் அரசு மானியவிலையில் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இன்றைக்குப் பதிவுசெய்தால் காளைக் கன்றுகள் கிடைக்க 5 ஆண்டுகளும் கிடேரிக் கன்றுகள் கிடைக்க 3 ஆண்டுகளும் ஆகும்” என்றார் நெப்போலியன்.
“ஒருங்கிணைந்த தஞ்சைக்கு உரிய மாட்டினம் இது. தமிழ்நாட்டின் எல்லா மாட்டினங்களுமே காங்கேயத்தின் வழித்தோன்றல்கள்தான். இது கடற்கரை சார்ந்த பிரதேசம் என்பதால் உப்பன் அருகு என்ற உப்புச்சத்து மிகுந்த புல்லைச் சாப்பிட்டு இந்தப் பகுதியின் தட்பவெப்பத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்ட மாடு இது. நாட்டு மாடுகளிலேயே குட்டையான இனம் இது. அதனால் சேற்று உழவுக்கு ஏற்றது. எட்டு மணி நேரம் கூட வண்டி இழுக்கும். தோற்றத்திலும் மற்ற மாடுகளுக்கும் இதற்கும் வித்தியாசம் நிறைய உண்டு. நெற்றியில் பொட்டு இருக்கும். அலை தாடி இருக்கும். நான்கு கால்களும் அடிப்பகுதியில் காலுறைபோல வெள்ளையாக இருக்கும். வால் வெள்ளையாக இருக்கும்” என்றார் டாக்டர் ஹமீது.
“உம்பளச்சேரி மாடு பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு வேளைகளும் சேர்த்து இரண்டே முக்கால் லிட்டர் பால் கொடுக்கும். ஆனால், சீமை மாட்டுப்பாலை விட சத்து மிக்கப் பால். கன்று போட்டு 13 மாதங்கள் வரை பால் கொடுக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்றுகள் போடும். சீமை மாடுகள் பால் அதிகம் கொடுப்பதால் கால்சியம் அவற்றை விட்டு அதிகம் போய்விடும். அதனால் அவற்றின் ஆயுள் குறைவு. இங்கு உள்ள மாடுகள் தங்கள் இறுதிக் காலம் வரை ஏதோ ஒரு விதத்தில் பயன்படுபவை. 12 கன்றுகள் வரை இந்த மாடுகள் ஈனும். சீமை மாடுகள் என்றால் 5 கன்றுகளுக்குப் பிறகு பலவீனமாக ஆகிவிடும். அதற்கு மேல் அவற்றை வைத்துக்கொள்ள முடியாது” என்றார் டாக்டர் நெப்போலியன்.
“தஞ்சைப் பகுதியின் விவசாயத்துக்கு உம்பளச்சேரி மாடுகள் அவ்வளவு பங்களிப்பு செய்திருக்கின்றன. இதன் அருமை தற்போதுதான் விவசாயிகளுக்குத் தெரியவந்திருக்கிறது. அதனால்தான் ஏராளமானோர் இந்த மாடுகளைக் கேட்டு எங்களிடம் விண்ணப்பித்திருக்கிறார்கள்” என்றார் டாக்டர் ஹமீது.
அவர்களிடம் விடைபெற்றுத் திரும்பும்போது இரண்டு பேர் புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியை பைக்கில் வைத்துக்கொண்டு வந்தனர். நெற்றியில் வெள்ளைப் பொட்டுடனும் சங்க இலக்கியத்தில் வர்ணிக்கப்பட்ட பெண்களின் கண்களையும் கொண்டு துறுதுறுவென்று அந்தக் கன்றுக்குட்டி பார்த்துக்கொண்டிருந்தது. தஞ்சையின் உயிர்நாடியான ஒரு பாரம்பரியத்தின் இழையறாத தொடர்ச்சி தான் என்பதை அறியாத கன்றுக்குட்டி அது. நாமும் அதை அறியாமல் போய்விடக்கூடாதல்லவா!
(சுற்றுவோம்...)