பருவ வயதில் ஏற்படுகிற எதிர் பால் ஈர்ப்பை சில பெரியவர்கள் வயதுக் கோளாறு என்பார்கள். உண்மையில் அது ஹார்மோன்களின் சித்துவிளையாட்டுகளில் ஒன்று என்பதை விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள். பள்ளியில் அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்தவர்கள் பருவ வயதில் உடலியல் மாற்றங்கள் குறித்துப் படித்திருக்கலாம். அது மதிப்பெண் வாங்கித் தேர்வில் வெற்றிபெறுவதற்கான பாடம் மட்டுமல்ல; அந்தப் பருவத்தில் நம்மையும் இப்போது நம் குழந்தைகளையும் புரிந்துகொண்டு வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கான பாடமும்கூட.
தெளிவு கிடைத்தது
இந்த வயதில் இந்த மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று நாம் பிறக்கும்போதே எல்லாம் வடிவமைக்கப்பட்டிருக்கும். காலமும் நேரமும் வந்ததும் மூளையின் கட்டளைப்படி நாளமில்லாச் சுரப்பிகளும் ஹார்மோன்களும் தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கும். பருவ வயதில் ஆண், பெண் இருவருக்கும் ஈஸ்ட்ரோஜென் சுரக்கும். பெண்களின் உடலில் புரொஜெஸ்ட்ரானும் ஆணுக்கு டெஸ்ட்டோஸ்டீரானும் சுரக்கும். பருவ வயதில் சுரக்கும் இந்த ஹார்மோன்களின் தொடர்ச்சியாக உடலில் மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்கள் மரபுவழிக் கடத்தப்படுபவை. புறக் காரணிகளும் இந்த மாற்றங்களில் பங்கேற்கும். கனிஷ்காவின் மார்பக வளர்ச்சி தாமதத்துக்குக் காரணம் அவளது குடும்பம். அவளது வீட்டில் அம்மா, பாட்டி இருவருக்குமே 15 வயதில்தான் பருவ வளர்ச்சி அதிகரித்திருக்கிறது. அவர்களின் வழிவந்த கனிஷ்காவுக்கும் அதுதானே நடக்கும்? இதை எடுத்துச் சொன்னதும் கனிஷ்கா சட்டெனப் புரிந்துகொண்டாள். புற அழகு மட்டுமே நம் ஆளுமையைத் தீர்மானிக்காது என்பதையும் சேர்த்துச் சொன்னார் கனிஷ்காவின் அம்மா. மறுநாள் காலை பள்ளிக்குச் சென்றவளின் மனத்தில் எந்தக் குழப்பமும் இல்லை. தன் தோழிகளைச் சந்திக்க மலர்ச்சியுடன் கிளம்பினாள். தேவைப்பட்டால் அவர்களிடமும் ஜீன்கள், ஹார்மோன்கள் குறித்துப் பேசலாம் என நினைத்துக்கொண்டாள்.
பெரும்பாலான பெற்றோர் பருவ வயதில் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் வெளிப்புற மாறுதல்களைக் கவனிக்கிறார்களே தவிர, உள்ளுக்குள் நிகழும் மாற்றங்கள் குறித்து அக்கறை காட்டுவதில்லை. உடலுக்கு உள்ளேயும் அவர்களின் சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்படும். மார்பக வளர்ச்சி, மறைவிடங்களில் ரோம வளர்ச்சி போன்றவற்றைத் தொடர்ந்து மாதவிடாய் ஏற்படுவதைப் பெண் பருவமடைந்துவிட்டதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்கிறோம்.
உடலுக்குள் நிகழும் மாற்றம்
நம் பெண் குழந்தை பருவமெய்துகிறபோது உடலுக்குள் என்ன நிகழும்? பெண் குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் உடலில் சினைப்பை இருக்கும். அவற்றுக்குள் எண்ணற்ற சினை முட்டைகள் இருக்கும். ஆனால், அவை வளர்ச்சியடையாமல் இருக்கும். பருவ வயதில் அந்த முட்டைகளில் ஒன்று முதிர்ச்சிபெறும். சினைப்பையில் இருந்து வெளியேறி, கருக்குழாயை வந்தடையும். அங்கே அது விந்துவைச் சந்திக்கக் காத்திருக்கும். விந்தணுவைச் சந்திக்காத முட்டை, கருப்பையை அடையும். கரு உருவானால் அதைப் பொதிந்து பாதுகாப்பதற்காகக் கருப்பை சில ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் காத்திருக்கும். கரு உருவாகாத நிலையில் கருவைத் தாங்கக் காத்திருந்தது சிதைவுற்று வெளியேறும். அதுதான் மாதவிடாய்.
முதல் மாதவிடாய்க்குப் பிறகு 30 நாட்களுக்கு ஒரு முறை இது நிகழும். சிலருக்கு இந்த மாதவிடாய் சுழற்சி 25 நாட்களாகவோ 35 நாட்களாகவோ இருக்கலாம். இதில் தொடர்ச்சியான மாறுபாடு இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகலாம். மாதவிடாயின் பின்னால் இருக்கும் அறிவியல்பூர்வமான காரணத்தைப் புரிந்துகொண்டாலே குழந்தைகள் அதைப் பயமின்றி எதிர்கொள்ளலாம். சில குழந்தைகள் அந்த நாட்களில் சோர்வாக உணர்வதால் பள்ளிக்குச் செல்லத் தயங்குவார்கள். இன்னும் சிலர் மாதவிடாய் குறித்தும் அந்த நாட்களில் ஏற்படுகிற சிக்கல்கள் குறித்தும் வீட்டில் இருக்கிறவர்களிடம்கூட சொல்லத் தயங்குவார்கள். இது தேவையில்லாத தயக்கம். குழந்தைகள் தங்கள் சங்கடத்தையும் குழப்பத்தையும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கும் நாம் நம்பிக்கை தர வேண்டும்.
உடலைப் பாதிக்கும் உணவு
வாழ்க்கை முறை மாற்றத்தால் பெரும்பாலான வீடுகளில் துரித உணவு வகைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். குழந்தைகளும் பதப்படுத்தப்பட்ட, செயற்கைச் சுவையூட்டிகளும் மணமூட்டிகளும் சேர்க்கப்பட்ட உணவு வகைகளையே பெரிதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். பீட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற சக்கை உணவு வகைகளையும் சாப்பிடுகின்றனர். துரித வளர்ச்சி வேண்டும் என்பதற்காக இயற்கைக்கு மாறாக வளர்க்கப்படும் கோழிகளின் இறைச்சியும் குழந்தைகளின் விருப்பத் தேர்வாக இருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து சாப்பிடுவதால் குழந்தைகளின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும். உடல் எடை இயல்புக்கு அதிகமாகக் கூடும்.
ஹார்மோன்களிலும் ஏற்றத் தாழ்வைக் கொண்டுவரும். இதனால் இயல்பான பருவ மாற்றங்கள் தடைபடக்கூடும். சினைப்பையில் இருந்து முட்டை வெளியேறுவது தடுக்கப்படும். இதனால் சினைப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படும். இது பெண் குழந்தைகளில் முறையற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும். இதை PCOD என்பார்கள். முறையற்ற உணவுப் பழக்கத்தால் சில குழந்தைகளுக்கு தைராய்டு பிரச்சினை ஏற்படக்கூடும். குழந்தைகளின் உடலுக்குள் ஏற்படுகிற இந்த மாற்றங்கள் குறித்து நாம் தெரிந்து வைத்திருந்தால்தான் அவர்களை நல்லவிதமாக வழி நடத்த முடியும். ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலும் உடனே கண்டுணர்ந்து மருத்துவரிடம் ஆலோசனை பெறமுடியும்.
ஆண் பருவமடைவது எப்போது?
ஆண் குழந்தைகளுக்கு இப்படி நேரடியான பாதிப்பு இல்லையென்றாலும் பருவ வயதில் அவர்களும் பல்வேறு உடல் - மன சிக்கல்களைச் சந்திக்கக்கூடும். சில குழந்தைகளுக்கு உடலில் பருவ வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் மீசை, தாடி ஆகியவற்றின் வளர்ச்சி தாமதப்படும். குரல் உடைவதும் தாமதப்படலாம். பெண்ணைப் போல ஆண் பருவமடைகிற நாளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பெண்ணுக்கு முட்டை வளர்ச்சிபெற்று வெளியேறுவதைப் போல ஆணுக்கு விந்து உற்பத்தி முழுமையடந்து விந்தணு வெளியேறும். அதன் முதல் கட்டமாக விதைப்பைகளும் விதையும் அளவில் பெரிதாகும். இடப்பக்க விதை லேசாகக் கீழிறங்கி இருக்கும். விதைகள் வளர்ந்த பிறகு விந்து உற்பத்தி தொடங்கும். அது முழுமைபெற்றதும் விந்து வெளியேறும்.
விந்து வெளியேற்றம் எப்படி வேண்டுமானாலும் ஏற்படலாம். அவர்கள் மனத்துக்கு உற்சாகம் தருகிற ஏதாவதொன்றை அவர்கள் நினைக்கும்போதோ வேறு ஏதாவது காட்சியைக் காண்கிறபோதோ விந்து வெளியேறக்கூடும். பெரும்பாலான ஆண் குழந்தைகளுக்கு உறக்கத்திலேயே விந்து வெளியேறிவிடும். இதை bed wet என்பார்கள். தங்களுக்கு ஏதோ நடந்துவிட்டதாக நினைத்துச் சில நேரம் குழந்தைகள் பயப்படவும் கூடும். பிறகு நண்பர்களிடம் பேசி, அவர்களாகவே சிலவற்றைத் தெரிந்துகொள்வார்கள். 64 நாட்களுக்கு ஒரு முறை விந்து உற்பத்தி முழுமை பெறும். அதனால் தேவையைப் பொறுத்துக் குழந்தைகளுக்குத் தானாகவே விந்து வெளியேறிவிடுகிறது. இது உடலியல் மாற்றம். இந்த நாட்களில் அவர்களின் உள்ளத்துக்குள் ஏராளமான கேள்விகள் முளைக்கும். விந்து வெளியேறியதுமே தங்களை முழுமையான ஆணாகச் சில குழந்தைகள் நினைத்துக்கொள்வார்கள். பெரும்பாலான நேரம் அது குறித்த சிந்தனையிலேயே இருப்பார்கள். சில குழந்தைகள் சுய இன்பத்துக்குப் பழகியிருப்பார்கள். ஆனால், அது குறித்த குற்ற உணர்வுடன் இருப்பார்கள். தான் ஏதோ தவறு செய்வதாக நினைத்து பயப்படுவார்கள். சில ஆண் குழந்தைகள் தங்களைவிட வயதில் பெரிய பெண்களைக் காதலிக்கத் தொடங்குவார்கள். ஆண் குழந்தைகளின் இதுபோன்ற மனமாறுதல்களை எப்படி அணுகுவது?
(நிஜம் அறிவோம்...)