நானொரு மேடைக் காதலன் - 19


மதச்சார்பின்மை என்ற அடித்தளத்தின் மீது என் தேசம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்பதை விட அதன் மீதுதான் எனது தேசம் நிலைகுலையாமல் நின்றுகொண்டிருக்கிறது என்பதில் நான் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவன். மதச்சார்பின்மைக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஊனம் ஏற்பட்டுவிடுமானால், அச்சாணி இழந்த தேராகிவிடும் தேசம். இந்தத் தேசத்தின் விடுதலைக்கும் வெளிச்சத்துக்கும் இஸ்லாம் தந்திருக்கிற பங்களிப்பை யாரும் அலட்சியப்படுத்த முடியாது. மொழிக்கும் கலைக்கும் பண்பாட்டுக்கும் இஸ்லாம் தந்த கொடையைப் பட்டியலிட்டால் அதை ஊரெங்கும் உரக்கச் சொன்னால் நல்லிணக்கமும் சகிப்புத் தன்மையும் சாரமிழந்து போகாமல் இருக்கும்.

கல்லூரிக் காலத்தில் இருந்து பயின்ற நூல்களும் பழகிய நண்பர்களும் இந்தப் பாதையில் பயணிக்க ஒரு வகையில் காரணமாக இருந்தார்கள். அந்த நாளில் இருந்து எனது தேடல் தீவிரமாகி மிலாது விழா மேடைகளை அலங்கரிக்கிற வாய்ப்பைத் தொடர்ந்து பெற்றேன். இயக்க மேடைகளில் இயக்க நலன் சார்ந்து உரையாற்றினாலும், நிர்வாகத்துக்குத் தலைமை தாங்குகிறவர்கள் எப்படி ஒழுக வேண்டும் என்பதை விரித்தும் விளக்கியும் பேசும்போது கலீஃபாக்களின் நேர்மையும் நீதியும் தவறாத ஆட்சியின் மாட்சியை சுட்டிக்காட்டுவது எனது வழக்கம். அதன் காரணமாகவே இஸ்லாத்தைச் சார்ந்த பண்பாளர் பலர் பழகினார்கள். பாசத்தை அள்ளித் தந்தார்கள். அப்படி, உத்தமபாளையம் காஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் அப்துல் சமது அவர்களின் மூலம் காஜியார் சுலைமான் அவர்கள் அய்யம்பேட்டையில் முன்னின்று நடத்திய இரண்டு நாள் திருக்குர் ஆன் மாநாட்டில் ‘ வரலாற்றுக்கு முகம் தந்த இஸ்லாம்’ என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்பைப் பெற்ற நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.

அரபிக் கல்லூரியின் அனுபவம் மிக்க பேராசிரியர்கள், இன்பத் தமிழில் கரை கண்ட இஸ்லாமியப் பேராசிரியர்கள் , மார்க்க அறிஞர்கள், மவுலானா மவுலவிகள் எல்லாம் பங்கேற்ற அந்த மகத்தான மாநாட்டில் சகோதர சமயத்தைச் சார்ந்தவன் என்ற தகுதியில் உரையாற்ற ஆயத்தமானேன். பேச்சில் யாரும் குறை கண்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுடனும் கவலையுடனும் செய்திகளைச் சேகரித்து மேடையேறினேன். முதல் நாள் அமர்வில் நிறைவுப் பேருரை நானாக இருந்ததாலும் இஸ்லாம் அல்லாதவன் என்பதே ஒரு தகுதியாகக் கருதுகிற நிலை ஏற்பட்டதாலும் அனைத்துத் தரப்பு மக்களும் வெள்ளம் போல் திரண்டிருந்தது எனக்கு வெல்லம் போல் இனித்தது.

இஸ்லாமிய மேடைகளில் தங்கு தடையின்றி நாவாட எனக்கு உந்து சக்தியாக இருந்தவர் கல்லறைக் குயிலானாலும் கவனத்தில் இருக்கிற குருநாதராக நான் ஏற்றுக்கொண்ட அண்ணன் வலம்புரி ஜானும் அவர் எழுதிய `மண்ணுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்’, `நாயகம் எங்கள் தாயகம்’ என்ற நூல்களும்தான் என்பதைச் சொல்லத்தான் வேண்டும்.  மாநாட்டில் உரையைத் தொடங்கினேன். ``மதத்தாலும் இனத்தாலும் நிறத்தாலும் மொழியாலும் மாறுபட்டும் வேறுபட்டும் கூறுபட்டும் கிடக்கின்ற மனித குலத்தை ஏக இறைவன் பெயரால் ஒருங்கிணைக்கின்ற வரலாற்றுக் கடமைக்கு முதலில் முகம் தந்தது இஸ்லாம். ஏக இறைவனை வணங்கி வாழ வேண்டும் என்ற இஸ்லாத்தின் இலட்சியம் ஒரு தனி மனிதனையோ குறிப்பிட்ட சமூகத்தையோ எல்லைகளை வகுத்துக்கொண்டிருக்கிற ஒரு நாட்டையோ சார்ந்ததல்ல என்பதை வரையறுத்துச் சொல்கிறது. ஆதாயம் தேடிக் கொண்டவருக்கோ அதிகாரத்தில் இருப்ப வருக்கோ அஞ்ச வேண்டிய அவசியமில்லை. படைத்த இறைவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள். இறையச்சம் மட்டுமே எப்போதும் மனிதனைச் சம நிலையில் வைத்திருக்கும். மனித குலம் தன்னை மீட்டுக் கொள்வதற்கு இறையச் சத்தை விட இனியொரு அமுதசுரபி கிடைக்கப் போவதில்லை என்பதில் இஸ்லாம் உறுதியாக இருந்தது; இருக்கிறது.

‘மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவி லிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள். மேலும் அதே ஆன்மா விலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் அதிகமான ஆண்களையும் பெண்களை யும் பரவச் செய்தான். மேலும் எந்த இறைவனின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் உரிமைகளைக் கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்விற்கே அஞ்சுங்கள். மேலும் பந்த உறவுகளைச் சீர் குலைப்பதில் இருந்து நீங்கள் விலகி வாழுங்கள். அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கின்றான்’ என்று திருக்குர் ஆன் பேசுகிறது. தத்தளிக் கின்ற மனிதகுலம் இந்த வசனத்தை உள்வாங்கிக் கொண்டால் ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். அது மட்டுமல்ல... சாதி அபிமானமோ அதிகாரம் மிக்க பதவியோ தேடிக்கொண்ட பெருஞ்செல்வமோ ஒருவனின் மதிப்பையும் உயரத்தையும் கண்ணியத்தையும் தீர்மானிக்க முடியாது என்று சொன்னது இஸ்லாம். ஒருவரின் கண்ணியமும் உயர்வும் மேன்மையும் அவரின் செயல்களோடு எண்ணங்களோடு நம்பிக்கைகளோடு சம்பந்தப்பட்டது என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. காலத்தால் இறுகி கெட்டிப்பட்டுப்போன போலித்தனமான மாசு படிந்த சம்பிரதாயங்களை அண்ணலெம் பெருமானார் அவர்கள் தவிடுபொடி ஆக்கி னார்கள்; தகர்த்தெறிந்தார்கள்.

உலகத்தை இன்று ஊசலாட வைக்கின்ற பூசலுக்கும் போருக்கும் காரணம் இனச்செருக்கும் இனத் திமிரும்தான். மற்றவர்களின் இருப்பை ஏற்கவும், மற்ற இனத்தவரை சக மனிதனாக மதிக்கவும், பிற இனத்தவர்களுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய மதிப்பை, மரியாதையைக் கொடுப்பதற்கும் ஒருவனுக்குத் தடையாக இருப்பது அவன்மீது அதிகாரம் செலுத்துகின்ற அவனை ஆட்டிப் படைக்கின்ற இனச் செருக்குதான். அண்ணலெம்பெருமானார் இறுதி ஹஜ் பயணத்தை மேற்கொண்ட காலகட்டத்தில் அரபுலகும் அமீரகமும்  அவரது பரிபூரணமான ஆளுகைக்கு வந்திருந்தது. அண்ணல் நபிகளாரும் அவர்தம் சஹபாக்களும் அராபியர்களாக இருந்தும் அவர்களுக்குள் ஒரு உயர்வு மனப்பான்மை உந்தி எழுவதற்கு வாய்ப்பு இருந்தது. அந்த நேரத்தில்தான் தனது இறுதி ஹஜ் பயணத்தின்போது ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரையில் ஒட்டு மொத்த மனித குலமும் ஒன்றே என ஆணித்தரமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் தீர்க்க தரிசனத்தோடும் உரையாற்றி இனச்செருக்குக்கு மரண அடி கொடுத்தார்கள். அராபியர் அல்லாதவரை விட அராபியர் சிறந்தவர் அல்லர். கறுப்பரை விட வெள்ளையரோ, வெள்ளையரை விட கறுப்பரோ சிறந்தவர் அல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர் என்ற இறுதிப் பேருரை வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவுகளின் வரிசையில் முதலிடத்தில் வைத்து நூற்றாண்டுகளின் வரப்பைக் கடந்த பிறகும் உலகம் மதித்துப் போற்றுகிறது.

வையகம் முழுவதையும் தனது காலடிக்குக் கீழே கொண்டு வர பலம் பொருந்திய நாட்டின் அதிபர்கள் ஆசைப்படுகிறார்கள். இது பலமல்ல. ஒரு பலவீனமான ஜந்துவின் மனக்கணக்கு. மனிதன் பலவீனங்களால் இட்டு நிரப்பப்பட்டவன். பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவன் ஏக இறைவன் மட்டுமே என்று வரலாற்றின் வைகறைப் பொழுதிலே சொன்னது இஸ்லாம். செல்வம்; அதனால் வருகிற செல்வாக்கு; அதனால் வாசலுக்கு வருகிற வசந்தம்- இதன் அடிப்படையில்தான் மனிதர்கள் கூறு போடப்படுகிறார்கள். ஏழை, பணக்காரன் என்ற பேதமும், எல்லாம் உள்ளவன் ஏதுமற்றவனை சுரண்டுவதும் அவன் வாழ்வைச் சூறையாடுவதும் இன்று நாட்டு நடப்புகளாகிவிட்டன. காலம் தோலுரிக்கத் தோலுரிக்க ஓடப்பர் உயரப்பர் என்ற இருவேறு சமூகம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஓடப்பரை உதைப்பதற்கு உயரப்பனின் கால்கள் எத்தனித்தன. இந்த நிலையில் பசையற்றுப்போன பாட்டாளி வர்க்கம் அதிகமான உரிமைகளை வென்றெடுக்க ஆவேசம் கொண்டதில் ஆச்சரியமில்லை. அப்போதும் எருமை மீது பெய்த மழையாய் எஜமானர்கள் இறங்கி வர மறுத்ததுதான் ஆச்சரியம். பண்பை வைத்து ஒருவனை எடை போடுகிற நிலைமை காலூன்றியது. வல்லான் வகுத்ததே சட்டமாயிற்று. வறியன் நிலைமை நாளுக்கு நாள் தரை மட்டமானது. உலகெங்கும் புரட்சிகள் சூல் கொள்ளத் தொடங்குவதற்கு முன்னால் இந்த முரண்பாடுகளை முற்றிலும் களைய முன் வந்தது இஸ்லாம்.

பச்சைப் பிறைக்கொடி, பட்டொளி வீசும் பறக்கும் மண்ணில் மட்டுமல்ல, இஸ்லாத்தை தழுவியவன் தரணியில் எந்த மூலையில் இருந்தாலும் செல்வந்தரின் செல்வத்தில் குறிப்பிட்ட சதவீதம் ஏழைகளுக்கானது என்பதை நடைமுறையாக்கியது இஸ்லாம். உழைத்து உருக்குலைந்தவனின் கனத்த சுமையை பணம் படைத்தவர்கள் ஏற்றுக்கொள்கிற நிலைமையை உருவாக்கியது மட்டுமல்ல... ஆண்டுகள் ஆயிரத்து நானூறு கடந்த பின்னும் இன்னும் அது நடைமுறையில் இருக்கிறது என்பது இமாலய வெற்றி அல்லவா? இதை மீறுகிறவர்களுக்குக் கடுமையாக எச்சரிக்கை விடுத்தது குர் ஆன். ‘நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்வதற்காக யார் கடும் முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் வேதனையில் ஆழ்த்தப்படுவார்கள்’ என்று குர் ஆன் அறிவித்தது.

உயர்ந்தவன் - தாழ்ந்தவன், ஏழை- பணக்காரன், அதிகாரம் உள்ளவன் - அதிகாரம் இல்லாதவன், கறுப்பன் - வெளுப்பன் என்ற மேடு பள்ளங்களை இல்லாமல் ஆக்குவதில் இஸ்லாம் பெற்ற வெற்றியை இந்தப் பூவுலகில் இன்னொரு அமைப்பு பெற முடியவில்லை. பொம்மலாட்டக்காரனை பொம்மைகள் விழுங்குவது இயல்பாகிப்போன சமூகத்தில் பொன்னுலகம் கடைத் தேற வந்த இஸ்லாத்தின் அப்பழுக்கற்ற நெறிகளைக் கண்ணை மூடுகிற காலம் வரையில் ஆசாபாசங்களுக்கு அடி பணியாமல் கடைப்பிடித்தார் அல்லாஹ்வின் இறுதித்தூதர் அண்ணல் நபி. மணிமுடி தரித்த மன்ன ராக இருந்த காலத்தும் பசித்த வயிற்றில் கல்லைக் கட்டிக்கொண்டு கருமமே கண்ணாகக் கருதியவரை, அண்ணலெம்பெருமானாரை  அழகிய முன்மாதிரி என்று உலகம் உச்சியில் வைத்து மெச்சுகிறது. அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் கிடைக்க வாழ்த்தி இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்’’ என்று சொல்லி நான் விடை பெற்றபோது ஆரத்தழுவியவர்களிடம் இருந்து விடை பெற வெகு நேரமாகிவிட்டது.

( இன்னும் பேசுவேன்...)

x