பாட்டுன்னா ஓகே... ஃபைட்டுனா நோ..!


கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in


‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ ஜெயகாந்தனின் சிறுகதை. சினிமாவுக்குப் போகும் பொம்மை வியாபாரி நம்ம செல்வகணேசன். கோவை வடசித்தூர் திருவிழாவில்தான் அவரைப் பார்த்தேன்.

வரிசையாய் பொம்மைக் கடைகள். அதைத் தாண்டி வெட்டவெளியில் மோட்டார் சைக்கிளுக்குக் காற்றடிக்கும் கால்மிதி பம்ப் மிதித்து பலூன்களுக்கு காற்று நிரப்பிக்கொண்டிருந்த செல்வகணேசனிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.

‘‘சொந்த ஊர் பொள்ளாச்சி நெகமம். அப்பா கூலி வேலை செய்தவர். அவருக்கு உடம்புக்கு சுகமில்லாம போனதால பத்து வயசுப் பையனா இருக்கும்போதே இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன். நான் மட்டுமல்ல... என்னோட ரெண்டு அண்ணன்க, 4 அக்காமாருக எல்லோருக்கும் இந்த பொம்மை வியாபாரம்தான். எனக்கிட்ட மட்டுமே ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு மேல பொம்மைகள் இருக்கு. திருவிழா கடைகள் இல்லாத நாட்கள்ல சினிமா ஷூட்டிங் பக்கம் போயிருவோம்.



பொள்ளாச்சி பக்கம் மறுபடியும் அவுட்டோர் ஷூட்டிங் களைகட்டுது. பாட்டு சீனுக்கு செட் போட சினிமா கம்பெனிங்க எங்களைத் தேடுவாங்க. விஜய் ஆண்டனி நடிச்ச இந்தியா பாகிஸ்தான் ஷூட்டிங் திருமூர்த்தி மலையில் நடந்துச்சு. அதுக்கு வந்து கூப்பிட்டாங்க. ஹீரோவும் ஹீரோயினும் பொம்மைக் கடைகளுக்குள்ள டூயட் பாடுற சீன். அதுக்காக எங்க குடும்பத்தோட 10 கடைகளையும் அங்க கொண்டு போய்ட்டோம்.போக்குவரத்து, சாப்பாட்டுச் செலவு எல்லாம் போக ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் தந்தாங்க. அதுக்கப்புறமும் ஏழெட்டு ஷூட்டிங் போயிட்டோம். திருவிழா கடை போட்டா ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல கிடைக்கும். அதனால திருவிழா சமயத்துல ஷூட்டிங் கடைக்கு ஒத்துக்கிறதில்ல.

பாட்டு சீன்களுக்கு கடை போடுறப்ப எந்தப் பிரச்சினையும் இருக்காது. ஆனா, ஃபைட் சீன்ல பொம்மைகளையும் கடைகளையும் ஒடைச்சு நாசம் பண்ணிருவாங்க. அதுக்கெல்லாம் தனியா காசு தந்துருவாங்கன்னாலும் நம்ம கண்ணு முன்னாடியே பொம்மைகளையும் கடைகளையும் உடைத்து நொறுக்கும்போது, தொழிலே நொறுங்கிற
மாதிரி மனசுக்குக் கஷ்டமா இருக்கும். இதுக்காகவே நாங்க பெரும்பாலும் சினிமா ஷூட்டிங்ல கடைவிரிக்கிறத தவிர்த்துடுவோம்” என்றபடியே மிதி பம்பை மிதித்து அடுத்த செட் பலூன்களுக்குக் காற்றடிக்க ஆரம்பித்தார் செல்வகணேசன்.

x