குழந்தைகளிடம் இதையெல்லாம் அடிக்கடி சொல்லுங்கள்!


பி.எம்.சுதிர்
sudhir.pm@thehindutamil.co.in


“ஸ்கூலுக்குப் போகணும் டைம் ஆயிடுச்சு... எந்திரி, பல்லு தேய்ச்சுட்டியா? லஞ்ச் பாக்ஸை மறக்காம எடுத்து வை” - இப்படி தினமும் குழந்தைகளிடம் நாம் சொல்லும் வார்த்தைகள் ஏராளம். இவையெல்லாம் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் வார்த்தைகள். அதே நேரத்தில் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவும், தன்னம்பிக்கையுடன் வைத்திருக்கவும் நாம் சில வார்த்தைகளை அவர்களிடம் அடிக்கடி சொல்லவேண்டும் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அப்படிச் சொல்ல வேண்டிய வார்த்தைகள் சிலவற்றைப் பார்ப்போம்...

உன்னால் இதைச் செய்ய முடியும்

“கடினமான வேலைகளை ஒரே முயற்சியில் செய்து முடிப்பது கடினம். எனவே, முதல் முயற்சியில் தோல்வியடைந்தால் அதற்காக சோர்ந்துபோகக் கூடாது” என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தி வளர்க்க வேண்டும். தீவிரமாக முயன்றால் எந்தவொரு செயலையும் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்க வேண்டும். குறிப்பாக, சைக்கிள் ஓட்டுவது, நீச்சலடிக்கக் கற்றுக்கொள்வது போன்ற விஷயங்களில் முதல் முயற்சியில் தோல்வியடைந்தால் அவர்கள் சோர்ந்து போவார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், “உன்னால் இதைச் செய்ய முடியும்” என்று சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை அளியுங்கள். அது அவர்களை உத்வேகப்படுத்தி, எடுத்த செயல்களை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க உதவும்.

எங்களுக்கு உன்னை அவ்ளோ பிடிக்கும்

குழந்தைகள் நம்மிடம் அதிகம் எதிர்பார்ப்பது அன்பைத்தான். அதை நாம் திகட்டத் திகட்ட அவர்களுக்கு வழங்க வேண்டும். அத்துடன் நாம் அவர்களை அதிக அளவில் நேசிக்கிறோம் என்பதை வார்த்தைகளாலும் உணரவைக்க வேண்டும். “எங்களுக்கு உன்னை அவ்ளோ பிடிக்கும், என்றைக்கும் உன்  மீதுள்ள இந்த அன்பு மாறாது” என்பது போன்ற வார்த்தைகளை குழந்தைகளிடம் சொல்லச் சொல்ல அவர்களின் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். தங்களை முக்கியமானவர்களாகக் கருத ஆட்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்பே அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அது அவர்களின் வெற்றிகளுக்குத் துணை நிற்கும்.

இன்று உனக்கு நடந்த நல்ல விஷயங்கள் என்ன?

ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது நமது குழந்தை களுடன் மனம்விட்டுப் பேசவேண்டும். முடிந்தவரை இரவு உணவுக்குப் பின் தூங்கச் செல்லும் முன்பு உங்கள் வீட்டுத் தெருவிலேயே அவர்களுடன் ஒரு சிற்றுலா சென்று, மனம் விட்டுப் பேசவேண்டும். அப்படிப் பேசும்போது ஒவ்வொரு நாளும், “இன்று உனக்கு நடந்த நல்ல விஷயங்கள் என்ன?” என்று குழந்தைகளிடம் கேட்கலாம். அப்படிக் கேட்பதால் பெற்றோரிடம் சொல்வ தற்காகவாவது தினமும் ஒரு நல்ல விஷயத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள். தங்களைச் சுற்றி நடக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே அவர்கள் கவனிக்கத் தொடங்குவார்கள். இதனால் அவர்கள் மனதில் நேர் மறை எண்ணங்கள் உருவாக வாய்ப்புள்ளது.
உனக்கு நான் இருக்கிறேன்

நம் குழந்தைகள் நம்மை நம்பித்தான் உள்ளன. எந்தவொரு கட்டத்திலும் அவர்களை நாம் கைவிடக் கூடாது. சில சமயங்களில் குழந்தைகள் பள்ளியில் ஏதாவது சேட்டை செய்யலாம். அதற்காக ஆசிரியர்கள் உங்களை அழைத்துக் கண்டிக்கலாம். அதுபோன்ற நேரங்களில் நம் குழந்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டும். “எங்களுக்குப் பிள்ளையா பிறந்து இப்படி டீச்சர் முன்னாடி கைகட்டி நிக்க வச்சுட்டியே” என்று அப்போது நம் கோபத்தை உமிழ்ந்துவிடக் கூடாது. மாறாக, அதுபோன்ற சமயத்தில்தான் நாம் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். “கவலைப்படாதே... உனக்காக நான் இருக்கிறேன்” என்று சொல்லி அவர்களை அரவணைக்க வேண்டும். அவர்களின் சிக்கலுக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதற்குத் தீர்வுகாண வேண்டும். முக்கியமாக நமது வார்த்தைகள் மூலம் இக்கட்டான நேரத்தில் அவர் களுக்கு நாம் துணையாக இருக்கிறோம் என்பதைப் புரியவைக்க வேண்டும். இதனால் நமக்குத் துணையாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் தவறைத் திருத்தி சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது. இது அவர்களின் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.

நல்லா இருக்கியா?

இது சாதாரண வார்த்தைகளாக நமக்குத் தோன்றலாம். ஆனால், இவைதான் குழந்தைகளின் மனதைத் திறக்கும் மந்திரச் சாவி என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். குழந்தைகள் ஏதாவது வருத்தத்தில் இருந்தாலோ, இக்கட்டான மனநிலையில் இருந்தாலோ, இந்தக் கேள்வி அவர்களின் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டவும், பெற்றோருடன் ஒரு நீண்ட உரையாடலை நடத்தவும் உதவியாக இருக்கும். இதன்மூலம் அவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் குழந்தைகள் சோர்வாக இருந்தாலோ, எதிலும் உற்சாகம் காட்டாமல் இருந்தாலோ, நிச்சயமாக இந்த கேள்வியைக் கேளுங்கள். மன அழுத்தத்தில் இருந்து அவர்கள் விடுபட உதவுங்கள்.

என்னை மன்னித்துவிடு

பெற்றோர்கள் சில சமயங்களில் தங்கள் குழந்தைகள் தவறே செய்யாதபோதிலும் அவர்களைத் தப்பாக நினைத்து அடித்துவிடுவார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், தாங்கள் தவறு செய்துவிட்டது தெரிந்தால் பெற்றோர்கள் தங்கள் ஈகோவை விட்டுவிட்டுக் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தவறாக நினைத்து அடிக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமின்றி, அவர்களின் தேவையை நிறைவேற்ற முடியாத நேரங்களிலும், சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற முடியாத காலகட்டங்களிலும்கூட அவர்கள் நம்மைவிட சிறியவர்கள்தானே என்ற எண்ணத்தைத் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் பெற்றோர்கள் மன்னிப்பு கேட்பது நல்லது. இதன்மூலம் குழந்தைகள் மனதிலும் தாங்கள் தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற எண்ணம் பெருகும். மேலும், தவறு செய்தால் வருந்தும் மனப்பான்மையும் வளரும்.

உன் செயலைப் பார்த்துப் பெருமையாக இருக்கிறது

அடுத்தவருக்கு உதவுவது, தேர்வில் நன்றாகச்  செயல்பட்டு அதிக மதிப்பெண்ணைப் பெறுவது, வீட்டில் சகோதரர்களிடம் சண்டையிடாமல் அமைதியாக இருப்பது என்று நல்ல செயல்களைச் செய்தால், “உன் செயலைப் பார்த்தால் எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது” என்று பாராட்ட வேண்டும். இந்தப் பாராட்டுதான் மேலும் மேலும் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ள அவர்களை ஊக்குவிக்கும். மாறாக, நல்ல செயல்களைச் செய்யும்போது பாராட்டாமல் ஏதாவது தவறுகளைச் செய்யும்போது மட்டும் திட்டினால், அவர்களுக்கு நம் மீது வெறுப்பு மட்டுமே ஏற்படும். “எத்தனையோ நல்லது செய்கிறோம். அதையெல்லாம் பாராட்டாமல் ஒரு சிறு தவறு செய்தால் மட்டும் திட்டுகிறார்களே” என்று வருத்தப்படுவார்கள். ஆகவே, குழந்தைகளைப் பாராட்டுவதில் ஒருபோதும் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்.

x