முற்றுப்புள்ளி...  அவசரம், அவசியம்!


சபரி மலையில் அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஆரம்பத்திலிருந்தே இருகூறான விவாதங்களுக்கு வித்திட்டு வருகிறது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கைக்கு எதிரானது என்று அய்யப்ப பக்தர்களும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும் என்று கேரள அரசும் மோதிக்கொண்ட காட்சிகளில்தான் சர்ச்சை முதலில் ஆரம்பித்தது. போகப்போக கேரள மக்களின் உணர்வுகளை ஆழம் பார்த்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியும் இதை அரசியலாக்க... அவர்களுக்கு சற்றும் சளைக்காமல் காங்கிரஸும் களத்தில் குதித்தது.

கூடவே, போலி விளம்பர நோக்கத்துடன் மத உணர்வுகளைப் புண்படுத்தும் போக்கில் சிலர் புறப்பட்டு வந்ததையும் களத்தில் காணமுடிந்தது. இதனால், பக்திக்களம் என்பது மாறி அரசியல் யுத்தக்களமாகவே மாறிப்போனது சபரி ஸ்தலம்!

இதற்கு நடுவில், உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ‘காஷ்மீரில் உள்ள ஹஸ்ரத் பல் புனித தலத்தில் இருப்பது இறைதூதர் நபிகள் நாயகத்தின் திருமுடிதான் என்பது இஸ்லாமியர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கைக்கு எதிராகக் கேள்வி எழுப்புவது, கேட்பது போன்றதுதான் சபரிமலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும்’ என்ற ரீதியில் கருத்து வெளியிட்டார்.

இப்படி, தீராத பரபரப்புக்கும் பதற்றத்துக்கும் வழிவகுத்துக்கொண்டே இருக்கிறது சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இனிமேல் அரங்கேறப்போகும் காட்சிகளும் அதை ஒட்டிய இறுதித் தீர்ப்பும் முக்கியமானவை. ஏனென்றால், மத நம்பிக்கைகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா கூடாதா என்ற கேள்விக்கு அழுத்தமான பதிலும், அவசரமான முற்றுப்புள்ளியும் இப்போது அவசர அவசியமாகி இருக்கிறது.

x